பள்ளித் திறப்பை ஒரு நாள் தள்ளி வைக்க கோரிக்கை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 28, 2019

பள்ளித் திறப்பை ஒரு நாள் தள்ளி வைக்க கோரிக்கை!


ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2-ம் தேதி நடப்பதால் அன்று நள்ளிரவு வரை வாக்கு எண்ணிக்கையில் பங்கேற்றுவிட்டு மறுநாள் (ஜன.3) காலை பள்ளிகளுக்கு செல்வதில் ஆசிரியர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் முதற்கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் நேற்று 27-ம் தேதி நடந்து முடிந்தது. இரண்டாம் கட்ட தேர்தல் நாளை மறுநாள் 30-ம் தேதி நடக்கவுள்ளது.

பிரிக்கப்பட்ட மாவட்டங்களைத் தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் நடந்த முதற்கட்ட தேர்தலில் பதிவான வாக்குப்பெட்டிகள், அந்தந்த வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டு 'சீல்' வைக்கப்பட்டன. அதற்கு தற்போது துப்பாக்கிய ஏந்திய பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளன.
நாளை மறுநாள் இரண்டாம் கட்ட தேர்தல் முடிந்த பிறகு ஜனவரி 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. இதில் பங்கேற்கும் அரசு ஊழியர்கள், பள்ளி ஆசிரியர்களுக்கு இன்று பயிற்சி வகுப்புகள் நடந்தன.

இந்நிலையில் இந்த வாக்கு எண்ணிக்கையில் பங்கேற்கும் பள்ளி ஆசிரியர்களுக்கு தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை 2-ம் தேதி அதிகாலை தொடங்கி இரவு வரை நடக்க வாய்ப்புள்ளது. இதில் பங்கேற்கும் அரசு ஊழியர்கள், பள்ளி ஆசிரியர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்ட பணி ஆணையுடன் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு அதிகாலை 5 மணிக்குள் வர வேண்டும் என்றும், பணி ஆணை இல்லாமல் வந்தால் அவர்கள் வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

2-ம் தேதி நடக்கும் வாக்கு எண்ணிக்கை முடிந்து அதில் பங்கேற்ற ஆசிரியர்கள் வீடு திரும்புவதற்கு நள்ளிரவு ஆக வாய்ப்புள்ளது. மறு நாள் 3-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
முந்தைய நாள் அதிகாலை 5 மணி முதல் அன்று முழுவதும் வாக்கு எண்ணிக்கையில் பங்கேற்றுவிட்டு நள்ளிரவு வீடு திரும்பிவிட்டு மறுநாள் பள்ளிகளுக்கு மீண்டும் செல்வது மிகுந்த சிரமம் ஏற்படும் என்றும், மறுநாள் 3-ம் தேதி முதல் நாள் என்பதால் அன்று விடுமுறையும் எடுக்க முடியாது என்பதால் பள்ளி ஆசிரியர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், "இந்தத் தேர்தலில் வாக்குப்பதிவு பணியும், வாக்கு எண்ணிக்கை பணியும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதில் பங்கேற்பதில் எந்தச் சிரமமும் இல்லை. ஆனால், வாக்கு எண்ணிக்கை முடிந்த மறுநாளே பள்ளிகள் திறப்பதால் நள்ளிரவு வரை தேர்தல் பணி பார்த்துவிட்டு மறுநாள் காலை உடனே பள்ளிகளுக்கு திரும்புவது சிரமம்.
அதனால், பள்ளித் திறப்பை ஒரு நாள் தள்ளி வைக்கலாம் அல்லது வாக்கு எண்ணிக்கையில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு மறுநாள் விடுமுறை வழங்க பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுக்கலாம். பள்ளி ஆசிரியர்களுக்கு இருக்கும் இந்த சிரமத்தை தேர்தல் அதிகாரிகள் அரசு கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்" என்றனர்.

Source : www.hindutamil.in

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி