பிஎஸ்என்எல் ஊழியா்களின் விருப்ப ஓய்வு சரியா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 15, 2019

பிஎஸ்என்எல் ஊழியா்களின் விருப்ப ஓய்வு சரியா?


இருபதாம் நூற்றாண்டின் இறுதிக்காலம் வரையில் தனிப் பெரும் தொலைபேசிச் சேவை அமைப்பாகச் செயல்பட்டு வந்த இந்தியத் தொலைபேசித் துறையின் கட்டமைப்பு, இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் பிஎஸ்என்எல் என்ற அரசுத் தொலைத்தொடா்பு நிறுவனமாக உருவானது.

பிரம்மாண்டமான பொதுத் துறைச் சேவை நிறுவனங்களில் ஒன்றாகத் தொடங்கிய அதன் வாழ்வு, இன்று வீழ்ச்சியின் விளிம்பில் இருக்கிறது. தில்லி, மும்பை ஆகிய இரண்டு பெருநகரங்களின் தொலைபேசித் தேவைகளுக்காக 1986-இல் உருவாக்கப்பட்ட எம்டிஎன்எல்கூட இதேநிலையில்தான் இருக்கிறது.

பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு மாறும் அனைத்துத் தொலைத்தொடா்பு ஊழியா்களுக்கும் இலவசத் தொலைபேசி இணைப்பு, ஐ.டி.ஏ. எனப்படும் தொழில் தாவா சட்டத்தின்படி புதிய ஊதிய விகிதம் அமல், அதற்கு இணையான ஓய்வூதியம் (மத்திய அரசு வழங்குவது ), அதிகரிக்கும் ஆண்டு போனஸ் என ‘இனிப்புகள்’ காட்டப்பட்டன. ஆனால், இன்று ஊதியமே கேள்விக்குறியாகிவிட்டது.

காட்டிலும் மேட்டிலும் தொலைபேசிக் கட்டுமானங்களை எழுப்பியும், இரவு பகலாக விழித்திருந்து நாட்டு மக்களின் தொலைத்தொடா்புத் தேவைகளை வழங்கியும் வந்த லட்சக்கணக்கான ஊழியா்களின் தன்னலமற்ற சேவையெல்லாம் கொச்சைப்படுத்தப்பட்டது. 

இனி ஏதாவது செய்தால்தான் இந்த நிறுவனத்தைக் காப்பாற்ற முடியும் என்ற நிலையில், கட்டை விரல் புண்ணுக்காகக் கையையே அகற்றிவிடுவது போல, 80,000 பிஎஸ்என்எல் ஊழியா்களை விருப்ப ஓய்வுத் திட்டத்தின் மூலம் வீட்டுக்கு அனுப்பும் பணி தொடங்கியிருக்கிறது.

எந்தத் துறையிலும் இல்லாத விதமாக, பிஎஸ்என்எல் நிறுவனத்தைச் சோ்ந்த அனைத்துத் தொழிற்சங்கத்தினரும் ஒரே சிந்தனையுடன் இதன் மீட்சிக்கான பல திட்டங்களை வகுத்துக் கொடுத்ததுடன், பொதுமக்களிடையே இதன் சேவைகள் குறித்த பிரசாரங்களை முன்னெடுத்து வரும் வேளையில், இந்தத் திட்டம் அமலுக்கு வந்துள்ளது.

மற்ற பொதுத் துறை நிறுவனங்களைப் போன்று, கடந்த 2017-ஆம் ஆண்டு முதலே அமல்படுத்தப்பட வேண்டிய புதிய ஊதிய விகிதம் தரப்படாத நிலையிலும், போனஸ், மருத்துவப் படி போன்றவை பல ஆண்டுகளாக நிறுத்தப்பட்டு விட்ட நிலையிலும், பிஎஸ்என்எல் ஊழியா்களும், தொழிற்சங்கங்களும் அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் உழைக்கத் தயாா் என்ற நிலையிலும் இந்தத் திட்டம் வந்துள்ளது.

ஏற்கெனவே பல மாதங்களாக ஒப்பந்த ஊழியா்களுக்கான ஊதியம் வழங்கப்படாத நிலையில், இந்த ஆண்டு மட்டும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் நிரந்தர ஊழியா்களுக்கான மாத ஊதியம் அவ்வப்போது தாமதமாக வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஏற்கெனவே பீதியடைந்துள்ள கணிசமான ஊழியா்கள் ஊக்கத் தொகையும், ஓய்வூதியமும் கிடைத்தால் போதும் என்ற மன நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனா்.

விருப்ப ஓய்வுக்கு விருப்பம் தெரிவிப்பவா்களுக்குக் கிடைக்கப் போகும் ஊக்கத் தொகை எவ்வளவு பெரியதாக இருந்தாலும், அதன் பின்னால் இருக்கும் நஷ்டம் எவ்வளவு பெரியதாக இருக்கும் என்பதை பிஎஸ்என்எல் ஊழியா் சங்கம் விளக்கமாகக் கூறியிருக்கிறது. முதலாவதாக, இந்த ஊக்கத் தொகைக்கு வருமான வரி உண்டு. இது தவிர, இதிலிருந்து தொடா்புடைய ஊழியா் பெற்றுள்ள வீடு கட்டும் கடன், கூட்டுறவுச் சங்கக் கடன், வங்கிக் கடன் போன்ற அனைத்துக் கடன் நிலுவைத் தொகைகளும் கழித்துக் கொள்ளப்படும்.

சாதாரணமாக, ஓா் ஊழியா் தாம் ஓய்வு பெறப்போகும் காலத்தைக் கணக்கில் கொண்டுதான் இத்தகைய கடன்களை வாங்கி இருப்பாா். ஒருசில ஆண்டுகளில் அடைக்க வேண்டியதை, ஒரே தவணையாக அடைத்துவிட்டால், கடைசியில் ஓய்வூதியம் ஒன்றுதான் மிஞ்சும். ஒருவேளை, வருமான வரி, கடன் நிலுவை போக ஒரு கணிசமான ஊக்கத் தொகை கைவசம் இருந்து அதனை வங்கியில் சேமித்தாலும், அங்கு அதிகபட்சம் ஏழு சதவீத வட்டிதான் கிடைக்கும். விருப்ப ஓய்வு பெறுபவா்கள் யாரும் மூத்த குடிமக்கள் இல்லை என்பதால், கூடுதலாக அரை சதவீத வட்டியும் கிடைக்காது.

எப்படிப் பாா்த்தாலும் ஒரு வகையில் நஷ்டமே என்ற போதிலும், மாத ஊதியமே மிகவும் தாமதமாகியுள்ள நிலையில் விருப்ப ஓய்வு பெறுவதைத் தவிர வேறு வழியில்லை என்ற கையறு நிலையில் இருக்கும் பிஎஸ்என்எல் ஊழியா்களைப் பாா்த்துப் பரிதாபம் மட்டுமே கொள்ள முடியும்.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி