பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று துவக்கம் - kalviseithi

Mar 2, 2020

பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று துவக்கம்


தமிழகம் முழுவதும், 8.35 லட்சம் பேர் எழுதும், பிளஸ் 2 பொதுத் தேர்வு, இன்று துவங்குகிறது.தமிழக பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு, பொதுத் தேர்வுநடத்தப்படுகிறது.

பிளஸ் 2 பொதுத் தேர்வு, இன்று தமிழகம்முழுவதும் துவங்குகிறது. காலை, 10:00 மணி முதல், பகல், 1:15 மணி வரை தேர்வு நடைபெறும். பிளஸ் 2 தேர்வை, தமிழகம், புதுச்சேரியில், 7,276 மேல்நிலை பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் தனித் தேர்வர்கள் என, 8.35 லட்சம் பேர் எழுதுகின்றனர். பழைய பாடத் திட்டத்தில், 10ஆயிரத்து, 683 பேர் தேர்வு எழுதுகின்றனர். மொத்தமாக, 4.41 லட்சம் மாணவியர் மற்றும் இரண்டு திருநங்கையர் தேர்வு எழுத உள்ளனர்.

தமிழ் வழியில், 4.54 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர்.அறிவியல் பிரிவில், 4.65 லட்சம்; வணிகவியலில், 2.79 லட்சம்; கலை பாட பிரிவில், 15 ஆயிரம் மற்றும் தொழிற்கல்வி பிரிவில், 56 ஆயிரம் பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுஉள்ளனர்.சென்னையில், 410 பள்ளிகளில் இருந்து, 47 ஆயிரத்து, 264பேர், 160 மையங்களில் தேர்வு எழுதுகின்றனர். மாநிலம் முழுவதும், 3,012 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தேர்வை முறைகேடின்றி நேர்மையாக நடத்தவும், மாணவர்கள் காப்பியடிப்பதைத் தடுக்கவும், 20 ஆயிரம் ஆசிரியர்கள் அடங்கிய, 4,000 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.தேர்வறை கண்காணிப்பு பணியில், 41 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டுஉள்ளனர். மாணவர்கள், ஹால் டிக்கெட், பேனா, பென்சில் மற்றும் கணித, அறிவியல் உபகரணங்கள் உள்ளிட்டவற்றை மட்டும், தேர்வறைக்கு எடுத்துச் செல்லலாம். மொபைல் போன், ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட மின்னணு பொருட்கள், துண்டு காகிதங்கள், புத்தகங்கள் உள்ளிட்டவற்றை எடுத்துச் செல்லக் கூடாது என, கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

விடைத்தாள் திருத்தம் எப்போது?

பிளஸ் 2 பொது தேர்வு இன்று துவங்கும் நிலையில், விடைத்தாள் திருத்தத்துக்கான கால அட்டவணையை, அரசு தேர்வு துறை, அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பியுள்ளது.

அதன்படி, அனைத்து மாவட்டங்களிலும் மார்ச், 31 முதல் விடைத்தாள் திருத்தம் துவங்குகிறது. மொழிப்பாடங்கள் மற்றும் முக்கிய பாடங்கள் என அனைத்துக்கும், ஒரே நேரத்தில் விடைத்தாள் திருத்தம் நடைபெறும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி