கொரோனா பாதிப்பிற்கு ஏற்ப 3 மண்டலமாக பிரிப்பு; ஊரடங்கை நீட்டிக்க மத்திய அரசு புதிய திட்டம்... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 10, 2020

கொரோனா பாதிப்பிற்கு ஏற்ப 3 மண்டலமாக பிரிப்பு; ஊரடங்கை நீட்டிக்க மத்திய அரசு புதிய திட்டம்...


உலகம் முழுவதையும் ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவிலும் வீரியமடைந்து வருகிறது. தற்போது, நாட்டில்  கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டி விட்டது. 169 பேர் பலியாகி உள்ளனர். நோய் தொற்றை தடுக்க பல்வேறு  நடவடிக்கைகளை எடுத்து வரும் மத்திய அரசு, வைரஸ் பரவாமல் கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள் முழு ஊரடங்கை கடந்த மாதம் 25ம் தேதி  அமல்படுத்தியது. வரும் 14ம் தேதியோடு இந்த ஊரடங்கு முடியும் நிலையில், வைரசின் பரவல் மேலும் தீவிரமடைந்துள்ளது.

இதனால், முழு ஊடரங்கை நீட்டிக்க வேண்டுமென மகாராஷ்டிரா உட்பட பல்வேறு மாநில அரசுகள் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளன.  இதற்கு ஒருபடி மேலே சென்றுள்ள பஞ்சாப், ஒடிசா அரசுகள், வரும் 30ம் தேதி வரை தனது மாநிலத்தில் ஊரடங்கை நீட்டித்து தானாகவே  உத்தரவிட்டுள்ளது. இருப்பினும், ஊரடங்கை மேலும் நீட்டிப்பது பற்றி மத்திய அரசு மட்டங்களில் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறது.

இந்நிலையில், ஏப்ரல் 14-ம் தேதிக்குப்பின் ஊரடங்கை நீட்டிக்க மத்திய அரசு 3 புதிய செயல் திட்டம் உருவாக்கியுள்ளது. அதன்படி, கொரோனா பாதிப்பு  பகுதிகளை சிவப்பு,மஞ்சள், பச்சை என தனி மண்டலமாக பிரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சிவப்பு பட்டியலில் இடம் பெற்ற நகரங்களில் ஏப்ரல் 30-ம் தேதி வரை ரயில் சேவை இருக்காது. மஞ்சள் பட்டியலில் இடம் பெற்ற நகரங்களில் சில கட்டுப்பாடுடன் போக்குவரத்து அனுமதிக்கப்படும். பச்சை மண்டலத்தில் தடையின்றி போக்குவரத்து தொடரும். இதன்படி, சென்னை, டெல்லி, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்கள் சிவப்பு மண்டலத்தில் இடம்பெற்றன.

இதனால், சிவப்பு மண்டலத்துக்கு உட்பட்ட நகரங்களில் ரயில் போக்குவரத்து ஏப்ரல் 30 வரை இல்லை. இந்த புதிய செயல் திட்டம், ரயில்வே உயர் அதிகாரிகள் கூட்டத்தில் பரிசீலனை செய்யப்பட்டுள்ளது.  இதற்கிடையே, ஊரடங்கு நிலவரம் பற்றி கடந்த 2ம் தேதி அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். தற்போது, 2வது முறையாக நாளை (11ம் தேதி) மீண்டும் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக மாநில முதல்வர்களுடன் அவர் அவசர ஆலோசனை நடத்த உள்ளார். அப்போது, ஊரடங்கை நீட்டிப்பதா? வேண்டாமா? புதிய செயல் திட்டம் நடைமுறைப்படுத்துவது என்பது குறித்து இறுதி முடிவு எடுக்க திட்டமிட்டுள்ளார். ஊரடங்கு நீட்டிப்பு பற்றி அன்றைய தினமே  மத்திய அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிட அதிக வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி