அடுத்தகட்ட ஊரடங்கு எப்படி இருக்கும், புதிய தகவல்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 12, 2020

அடுத்தகட்ட ஊரடங்கு எப்படி இருக்கும், புதிய தகவல்!


2-வது கட்டமாக மாற்றங்களுடன் நீ்ட்டிக்கப்படும் லாக்-டவுன்? 3 பிரிவுகளாக மாநிலங்களை பிரிக்க மத்திய அரசு புதிய திட்டம்


கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நடைமுறையில் இருக்கும் 21 நாட்கள் லாக்டவுன் வரும் 14-ம் தேதிக்குப்பின் நீட்டிக்கப்படும் பட்சத்தில் அதில் பல்வேறு மாற்றங்களைச் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

அதாவது, கரோனா வைரஸ் நோயாளிகள், பாதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் மாநிலங்கள், மாவட்டங்களுக்கு ஏற்ப சிவப்பு மண்டலம், ஆரஞ்சு மண்டலம், பச்சை மண்டலம் என பிரித்து லாக்டவுனை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த 2-ம் கட்ட லாக்டவுனில் பொருளாதார சுழற்ச்சி பாதிக்கப்படாமல் இருக்க முக்கியத்துவம் அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

கரோனா வைரஸ் பரவல் இன்னும் கட்டுக்குள் வராததையடுத்து, லாக் டவுனை நீட்டிப்பது குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நேற்று 4 மணிநேரத்துக்கும் மேலாக காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனையின் போது, லாக்டவுனை ஏப்ரல் 30-ம் தேதிவரை நீட்டிக்க வேண்டும் என அனைத்து முதல்வர்கள் சார்பிலும் பிரதமர் மோடியிடம் வலியுறுத்தியதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், அனைத்து முதல்வர்களிடம் ஆலோசித்த பிரதமர் மோடி, லாக்டவுனும் முக்கியம் அதேசமயம், பொருளாதார வளர்ச்சியும் முக்கியம் என்பதை வலியுறுத்தியுள்ளார்.

இதனால் வரும் 14-ம் தேதிக்குப்பின் லாக்-டவுனை நீட்டிப்பது குறித்து மத்திய அரசு சார்பில் இதுவரை எந்தவிதமான இறுதியான முடிவும் எடுக்கவில்லை. பெரும்பாலும் லாக்டவுன் நீட்டிக்க முதல்வர்கள் ஆதரவு தெரிவி்த்த போதிலும், இந்த முறை லாக்டவுனை சில மாற்றங்களுடன் செயல்படுத்தவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து பிரதமர் அலுவலகத்தச் சேர்ந்த முக்கிய வட்டரங்கள் கூறுகையில், “ இந்த 2-வது கட்ட லாக்டவுனில் மாநிலங்களில் கரோனா வைரஸ் நோயாளிகள் இருப்பதை அடிப்படையாக வைத்து அவற்றை 3 பிரிவுகளாகப் பிரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. சிவப்பு, ஆரஞ்சு, பச்சை ஆகிய வண்ணங்களில் மாநிலங்களை பிரிக்க உள்ளது.

இந்த திட்டத்தின்படி நாடுமுழுவதும் பள்ளி,கல்லூரிகள் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும். ஆனால், சில விதிவிலக்குகளுடன் சிறு, குறுந்தொழில்கள், மதுக்கடைகள் திறக்கப்பட உள்ளன.

சிவப்பு மண்டலம்

இதன்படி சிவப்பு மண்டலத்தின் கீழ் வரும் மாநிலங்கள், அதாவது அதிகமான கரோனா நோயாளிகள் இருக்கும் மாநிலங்கள், மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டு அவை ஹாட்ஸ்பாட்களாக அறிவிக்கப்படும். இந்த மண்டலத்தில் போக்குவரத்து, கடைகள் திறப்பு, தொழிற்சாலை இயக்குதல், சிறு,குறுந்தொழில்கள், வர்த்தக நிறுவனங்கள் செயல்பாடு அனைத்துக்கும் தடை இருக்கும்

ஆரஞ்சு மண்டலம்

கரோனா நோயாளிகள் அடிப்படையில் மாநிலங்கள், மாவட்டங்களும் ஆரஞ்சு மண்டலத்தின் கீழ் கொண்டுவரப்படும். இதில் கடந்த காலத்தில் உருவான கரோனா நோயாளிகள் தவிர புதிதாக யாரும் பாதிக்கப்படவி்ல்லை என்றால், அது ஆரஞ்சு மண்டலத்தில் சேர்க்கப்படும்.

இந்த மண்டலத்தில் குறைந்த அளவுக்கு பொருளாதார பணிகள் செயல்பட அனுமதிக்கப்படும். அதாவது குறைந்த அளவு பொதுப்போக்குவரத்து, விவசாயப்பணிகள், சிறு,குறுந்தொழில்கள் செயல்பாட்டுக்கு அனுமதிக்கப்படும்

பச்சை மண்டலம்

கரோனா நோயாளிள் இல்லாத மாவட்டங்கள், மிகக்குறைவான மாநிலங்கள் பச்சை மண்டலத்தின் கீழ் கொண்டுவரப்படும். இங்கு அனைத்து விதமான போக்குவரத்து, கடைகள்திறப்பு, வர்த்தக நிறுவனங்கள் செயல்பாடு, சிறுகுறுந்தொழில்கள் செயல்பாடு ஆகியவற்றுக்கு அனுமதிக்கப்படும்.

இந்த மாவட்டங்களில் மதுக்கடைகளும் திறக்கப்பட முதல்வர்கள் மத்தியஅரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்கள். பெரும்பாலான மாநிலங்கள் வரிவருமானம் ஈட்டித் தருவது மதுக்கடைகளாக இருப்பதால்அவை இந்த மண்டலத்தில் திறக்கப்படலாம்.ஆனால், ரெஸ்டாரண்ட், உணவகங்கள், ஷாப்பிங் மால்களுக்கு அனுமதியில்லை.

இந்த மண்டலத்தில் சிறு,குறுந்தொழில்கள், நடுத்தர நிறுவனங்களைச் செயல்பட அனுமதிக்கும் போது, தொழிலாளர்கள் சமூக விலகலை கடைபிடிக்க உத்தரவிடப்படும்.

மேலும் கடுமையான விதிமுறைகளுடன், சமூக விலகலை பின்பற்றி ஆரஞ்சு, பச்சை மண்டலங்களில் விவசாயப் பணிகள் செயல்பட அனுமதிக்கப்படும்.

இந்த இரு மண்டலங்களுக்கு இடையே குறைந்த அளவு விமானப் போக்குவரத்து, ரயில் போக்குவரத்து குறைந்தபட்சம் 30 சதவீத பயணிகளுடன் இயக்க அனுமதி்க்கப்படும். டெல்லி போன்ற நகரங்களில் மெட்ரோ ரயில்சேவை 30சதவீதப் பயணிகளுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

இரு பிரிவுகளின் கீழ் வரும் நகரங்களில் குறைந்த அளவு பொதுப்போக்குவரத்து படிப்படியாக உயர்த்தப்படும். அதேசமயம் மாநிலங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்து, ரயில் போக்குவரத்து வைக்க அனைத்து மாநில முதல்வர்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்கள். மேலும், ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் ஆயிரக்கணக்கான மக்களை தனிமையில் வைத்திருக்க வசதியில்லை என்றும் மத்திய அரசிடம் முதல்வர்கள் தெளிவாகத் தெரிவித்துள்ளார்கள்.

ஆதலால், கட்டுப்பாடு தளர்வுடன் போக்குவரத்து செயல்பட்டாலும் மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து இருக்க வாய்ப்பில்லை.

முதல்வர்களுடன் ஆலோசனையைத் தொடர்ந்து, இந்த திட்டத்துக்கான வரையறைகள், விதிமுறைகள், விதிவிலக்குகள், கட்டுப்பாடுகளை, வழிகாட்டி நெறிமுறைகளை வகுக்க உயர் அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளதாக நம்பப்படுகிறது.

3 comments:

  1. நான் பிறந்த தில் இருந்து ஊரடங்கை பார்த்ததில்லை முன்னோர்களும் கண்டதில்லை காலரா அம்மை வந்த காலத்தில் இப்படி செய்தால் பலியான எங்க தாத்தா இன்னமும் இருப்பார்கள்

    ReplyDelete
  2. நேரு மாமா காந்தி தாத்தா காலத்தில் இப்படி இருந்தால் இந்தியா ஆரோக்கியத்தில் நம்பர் ஒன் தான் போங்க அவங்களுக்கு ஏன் இந்த மூளை இல்லை வருத்தமாக இருக்கிறது

    ReplyDelete
  3. மோடி அப்பா ஆயிரம் 1000 கோடிகள் கொடுத்துக்கொண்டே இருந்தால் இந்த ஆட்சியை அப்படியே நீட்டித்துக்கொண்டே போய்விடலாம் என்றும் ஒரு கணக்கு போடுவார்கள் நோகாமல் கரும்பு தின்ன கூலியும் கொடுத்துவிடுவதால் குஷி , ஆனால் இதனால் ஏழை மக்களுக்கு ஒரே ஒரு 1000 தான் மிச்சம்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி