கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பின் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் முதல்கட்ட ஆராய்ச்சி வெற்றி! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 23, 2020

கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பின் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் முதல்கட்ட ஆராய்ச்சி வெற்றி!


தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பின் முதற்கட்ட ஆராய்ச்சியில் வெற்றி கண்டு இருக்கிறது.‘கொரோனா’ யாரும் மறக்க முடியாத பெயராக உலகம் முழுவதும் பரவிவிட்டது. இந்த வைரஸ் தொற்றுநோயின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த உலக நாடுகள் ஒரு புறம் போராடி வரும் நிலையில், இந்த வைரசுக்கான தடுப்பு மருந்தை எப்படியாவது? கண்டுபிடித்துவிட வேண்டும் என்ற முனைப்பில் ஆராய்ச்சியாளர்கள் களம் இறங்கி இருக்கின்றனர்.அந்த வகையில் உலக நாடுகளில் சில ஆராய்ச்சி நிறுவனங்கள்கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பில் முதற்கட்டத்தை கடந்து இருக்கின்றனர். இந்த வரிசையில் இந்தியாவில் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகமும் சாதித்து இருக்கிறது. கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பின் முதற்கட்ட ஆராய்ச்சியில் வெற்றியை கண்டுள்ளது.கொரோனா வைரசின் மரபியல் பொருளை தடுக்கக்கூடிய செயற்கை புரத மூலக்கூறை கண்டுபிடித்துள்ளனர். கடந்த 3 வாரங்கள்மேற்கொண்ட விடா முயற்சியின் பலனாக இந்த வெற்றியை டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் எட்டிப்பிடித்துள்ளது.

பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன் தலைமையில், நோய் எதிர்ப்பியல் மற்றும் நுண்ணுயிரியல் துறை தலைவர் டாக்டர் புஷ்கலா, நோய் பரவியல் துறை டாக்டர் சீனிவாசன், ஆராய்ச்சி துறை தமண்ண பஜந்திரி ஆகியோரின் கூட்டு முயற்சியில் ‘ரிவர்ஸ் வேக்சினாலஜி’ மூலம் இந்த தடுப்பு மருந்தை கண்டுபிடித்து இருக்கின்றனர்.இதன் அடுத்தகட்டமாக அமெரிக்காவின் தடுப்பு மையம் என்ற நிறுவனத்துடன் இணைந்து ஆய்வு மேற்கொள்ள இருக்கின்றனர்.இதுகுறித்து துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன் கூறியதாவது:-

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒரு வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டறிய அந்த வைரசை ஆய்வகத்தில் வளர்த்து, அதற்கு மருந்து செலுத்தி தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது அந்த முறையில் மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது.

தகவல் தொழில்நுட்பம் எப்படி வளர்ச்சி அடைந்ததோ? அதேபோல் வைரஸ் தடுப்பு மருந்து ஆய்வகங்களிலும் பல்வேறுமுன்னேற்றங்கள் அடைந்து இருக்கின்றன. அந்த வகையில் ‘ரிவர்ஸ் வேக்சினாலஜி’ மூலம் வைரசின் மரபியல் பொருளை எடுத்து கணினி முறையில் சோதனைசெய்து முதற்கட்டமாக எந்ததடுப்பு மருந்து வேலை செய்யும் என்பது இப்போது கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது.அதன் அடிப்படையில், கொரோனா வைரஸ்(சார்ஸ் என்-கோவி2) மரபியல் பொருளை தடுக்கக்கூடிய செயற்கை புரத மூலக்கூறு கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. பொதுவாக இப்படி கண்டுபிடிக்கப்படும் மூலக்கூறு 40 சதவீதம் வரை தான் வெற்றி பெறும். ஆனால் தற்போது 70 சதவீதம் வரை நாங்கள் இதில் வெற்றி கண்டு இருக்கிறோம். இதற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.

இது முதற்கட்டம் தான். இதன்பிறகு பல படிநிலைகள் உள்ளன. இதனை தடுப்பு மருந்தாக உருவாக்கி சமுதாயத்துக்கு எப்படி கொண்டு வருவது? என்பதற்கு பல்வேறு பணிகள் இருக்கின்றன. அதற்காக சில ஒப்புதல்களும் பெற வேண்டியுள்ளது. அந்த பணிகளில் தற்போது ஈடுபட்டு இருக்கிறோம். அடுத்தகட்டமாக அமெரிக்காவின் தடுப்பு மையநிறுவனத்துடன் இணைந்து ஆய்வு மேற்கொள்ள உள்ளோம்.

இவையெல்லாம் முடிந்து, முழுமையான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டால்தான் அதை உறுதியாக சொல்ல முடியும். தற்போது வரை ஆராய்ச்சியில் நல்ல முன்னேற்றம்கிடைத்துள்ளது. அந்த வகையில் எங்கள் பல்கலைக்கழகம் மூலம் இந்த நோயை தடுப்பதற்கும், உலகத்தில் அமைதியை கொண்டுவருவதற்கும் எங்களால் இதை செய்ய முடியும் என்று நம்புகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி