EMI - ஒத்திவைப்பு லாபமா? வட்டி குட்டி போடும் என எச்சரிக்கை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 2, 2020

EMI - ஒத்திவைப்பு லாபமா? வட்டி குட்டி போடும் என எச்சரிக்கை!


வீடு, வாகனம் உள்ளிட்டவற்றுக்கான மூன்று மாத, இ.எம்.ஐ., எனப்படும் மாதத் தவணை நிறுத்தி வைக்கும் அறிவிப்பால், உண்மையில் பெரிய அளவு பலனை மக்களுக்கு அளிக்கவில்லை. 'தவணையை செலுத்தாவிட்டால், கடனுக்கான வட்டி, தொடர்ந்து சேர்க்கப்படும்' என, வங்கிகள் அறிவித்துள்ளன.

கொரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பில் இருந்து மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், மத்திய அரசு பல்வேறு அறிவிப்புகளை, சமீபத்தில் வெளியிட்டது. அதன் ஒரு பகுதியாக, ரிசர்வ் வங்கியும் சில சலுகைகளை அறிவித்தது.

வீடு, வாகனம் உள்ளிட்ட, காலமுறையிலான கடன்களுக்கு செலுத்தும், மாதத் தவணைகள், மூன்று மாதங்களுக்கு ஒத்தி வைக்கப்படுவதாக அறிவித்தது. இதன் மூலம், 'ஏப்ரல் - ஜூன் மாதங்களில், மாதத் தவணைகளை செலுத்தத் தேவையில்லை' என, அறிவிக்கப்பட்டது. இது நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு மிகப் பெரிய நிவாரணமாக கருதப்பட்டது.*

ஆனால், உண்மையில், இந்த அறிவிப்பால், பெரிய அளவில் பலன் ஏதும் கிடைக்காது என்பதே உண்மை. பல்வேறு பொதுத் துறை வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள், தற்போது, இந்த மூன்று மாதத் தவணை ஒத்திவைப்பு குறித்த, தங்களுடைய விதிமுறைகளை, நடைமுறையை அறிவித்துள்ளன. அவற்றில், 'மூன்று மாதங்களுக்கான, மாதத் தவணையை செலுத்த வேண்டாம். ஆனால், அதே நேரத்தில், நிலுவையில் உள்ள கடன் தொகைக்கான வட்டி மூன்று மாதங்களுக்கும் சேர்க்கப்படும்' என, கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, வங்கி அதிகாரிகள் கூறியுள்ளதாவது:

வங்கிக் கடன் அறிவிப்பில், ஒரு சூட்சுமம் உள்ளது. இது கடன் தள்ளுபடி கிடையாது; ஒத்திவைப்புதான். தற்போது, மூன்று மாதங்களுக்கு செலுத்தாவிட்டால், நீங்கள் கடைசியாக செலுத்த வேண்டிய தவணை, மேலும், மூன்று மாதங்களுக்கு நீடிக்கும். அவ்வளவு தான் வித்தியாசம்.

நாட்டின் மிகப் பெரிய வங்கியான, எஸ்.பி.ஐ., எனப்படும் பாரத ஸ்டேட் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாதத் தவணை செலுத்தாத நிலையிலும், கடனுக்கான வட்டி, குட்டி போடும் என்று கூறப்பட்டுள்ளது. உதாரணமாக, 30 லட்சம் ரூபாய் வீட்டுக் கடனை, ஒருவர் வாங்கியுள்ளார். மேலும், 15 ஆண்டுகள் நிலுவை உள்ளது. மூன்று மாதம் தவணை செலுத்தாவிட்டால், அவர், 2.34 லட்சம் ரூபாயை வட்டியாக கூடுதலாக செலுத்த வேண்டியிருக்கும். அதாவது, கூடுதலாக, எட்டு மாதத் தவணைகளை அவர் செலுத்த வேண்டும்.

ஒரு ஆண்டு உயருகிறது:

அதாவது, தற்போது செலுத்தாத, மூன்று மாதத் தவணையைத் தவிர, கூடுதலாக எட்டு மாதங்களுக்கு தவணை செலுத்த வேண்டும். கிட்டத்தட்ட, அவருடைய கடன் காலம், ஒரு ஆண்டு உயருகிறது. மற்றொரு உதாரணத்தை பார்ப்போம். ஒருவர், 6 லட்சம் ரூபாய் வாகனக் கடன் வாங்கியுள்ளார். அவர் மீதம் செலுத்த வேண்டிய காலம், 54 மாதங்கள் உள்ளன. இந்த நிலையில், அவர் கூடுதலாக, 19 ஆயிரம் ரூபாய் வட்டி செலுத்த வேண்டும். அதாவது, ஒன்றரை மாதத் தவணையை அதிகம் செலுத்த வேண்டும்.

இந்த அறிவிப்பில் உள்ள ஒரே நன்மை, மூன்று மாதங்கள் தவணை செலுத்தாவிட்டால், அது வாராக் கடனாக கருதப்படாது. மேலும், சிபில் தரக் குறியீட்டிலும் பாதிப்பு ஏற்படாது என்பது தான். இதுதான், பல வங்கிகளிலும் உள்ள நிலை. சிக்கலை தவிர்க்க, கையில் பணம் இருந்தால், மாதத் தவணையை முறையாக செலுத்திவிடுவதுதான் நல்லது.

ராக்கெட் வேகம்:

இந்திய வங்கிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பிலும், 'வருமானம் குறைவாக இருந்தால், மாதத் தவணை ஒத்திவைப்பு திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள். இல்லாத நிலையில், மாதத் தவணையை ஒழுங்காக செலுத்துவது தான் சிறந்தது' என, குறிப்பிடப்பட்டுள்ளது.

கிரெடிட் கார்டுகளை பொருத்தவரை, குறைந்தபட்ச தொகையை செலுத்த வேண்டும். மீதமுள்ள தொகைக்கு, அவர்கள் வட்டி வசூலிப்பர். மூன்று மாதங்களுக்கு, முழுத் தொகையைவிட குறைவாக கட்டினால், உங்களுடைய சிபில் தரத்துக்கு பாதிப்பு ஏற்படாது. ஆனால், கிரெடிட் கார்டுக்கு அதிக வட்டி என்பதால், ராக்கெட் வேகத்தில், உங்களுடைய நிலுவை ஏறிவிடும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

சிறுசேமிப்புக்கு வட்டி குறைப்பு:

பல்வேறு சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளன.

மத்திய நிதி அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

 சந்தையின் நிலைமைக்கு ஏற்ப, பல்வேறு சிறுசேமிப்பு திட்டங்களுக்கான, ஏப்ரல் - ஜூன் வரையிலான காலாண்டுக்கான வட்டி விகிதம் மாற்றி அமைக்கப்படுகிறது.*

பி.பி.எப்., எனப்படும் பொது வருங்கால வைப்பு நிதி சேமிப்புக்கான வட்டி, 7.9 சதவீதத்தில் இருந்து, 7.1 சதவீதமாக குறைக்கப்படுகிறது. மூத்தக் குடிமக்களுக்கான சேமிப்பு கணக்குக்கான வட்டி, 8.6 சதவீதத்தில் இருந்து, 7.4 சதவீதமாக குறைக்கப்படுகிறது. தபால் நிலையங்களில், 1 - 3 ஆண்டுகளுக்கான முதலீடுகளுக்கான வட்டி, 6.9 சதவீதத்தில் இருந்து, 5.5 சதவீதமாக குறைக்கப்படுகிறது. ஐந்து ஆண்டுக்கான முதலீட்டுக்கான வட்டி, 7.7 சதவீதத்தில் இருந்து, 6.7 சதவீதமாகிறது.

ஐந்து ஆண்டுக்கான, ஆர்.டி., எனப்படும் தொடர் வைப்பு நிதிக்கான வட்டி, 7.2 சதவீதத்தில் இருந்து, 5.8 சதவீதமாகிறது. என்.எஸ்.சி., எனப்படும் தேசிய சேமிப்பு பத்திரத்துக்கான வட்டி, 7.9 சதவீதத்தில் இருந்து, 6.8 சதவீதமாகிறது. கிஸான் விகாஸ் பத்திரத்துக்கான வட்டி, 7.6 சதவீதத்தில் இருந்து, 6.9 சதவீதமாகிறது. மேலும், இதன் முதிர்வு காலம், 113 மாதங்களுக்கு பதிலாக, 124 மாதங்களாக உயர்த்தப்பட்டுள்ளது. சுகன்யா ஸ்மிருதி யோஜனா திட்டத்துக்கான வட்டி, 8.4 சதவீதத்தில் இருந்து, 7.6 சதவீதமாகிறது.

1 comment:

  1. இதில் ஒன்றும் இல்லை

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி