உச்சத்தில் கொரோனா.. அச்சத்தில் பெற்றோர்.. 10ம் வகுப்பு தேர்வு முடிவை மறுபரிசீலனை செய்யுமா அரசு? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 12, 2020

உச்சத்தில் கொரோனா.. அச்சத்தில் பெற்றோர்.. 10ம் வகுப்பு தேர்வு முடிவை மறுபரிசீலனை செய்யுமா அரசு?


தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருக்கக்கூடிய இந்த சூழ்நிலையில், இன்னும் 2 வாரங்களில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு (Tamilnadu sslc exam) நடைபெற உள்ளது. மாணவ-மாணவிகளை தேர்வு எழுத அனுப்புவது அவர்களின் பெற்றோர்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். தமிழக அரசு இந்த அச்சத்தைப் போக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கொரோனா வைரஸ் பிரச்சினை காரணமாக, இந்த ஆண்டு 10ம் வகுப்பு பொதுத்தேர்வு என்பது, தமிழகத்தில் நடைபெறவில்லை அனேகமாக ஆகஸ்ட் மாத வாக்கில் தேர்தல் நடைபெறலாம் என்ற பேச்சு பெற்றோர்கள் மத்தியில் இருந்தது.
கொரோனா வைரஸ் பாதிப்பு மிகக் குறைவாக இருந்த காலகட்டத்தில், அவசரமாக லாக்டவுன் அறிவிக்கப்பட்டது. எனவே, 10ம் வகுப்பு தேர்வுகள் நடைபெறவில்லை. ஆனால் இப்போது பாதிப்பு என்பது உச்சத்தில் இருக்க கூடிய சூழ்நிலையில், ஜூன் 1ம் தேதி முதல் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெறும் என்று கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

3 வாரங்கள் கூட இல்லை

சமூக இடைவெளியுடன் தேர்வு நடத்த ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. தேர்வுகளை நடத்த மட்டுமே இப்போது முன்னுரிமை. பள்ளிகள் மறுபடியும் எப்போது திறக்கும் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். தள்ளிவைக்கப்பட்ட பிளஸ் 1 வகுப்புக்கான தேர்வு, ஜூன் 2ம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது மிஞ்சிப் போனால் இன்னும் மூன்று வாரங்கள் கூட கிடையாது. அதற்குள் பொது தேர்வுக்கு, குழந்தைகள் தயாராக வேண்டும்.

உச்சத்தில் கொரோனா பரவல்

எப்படியான சூழ்நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பது முக்கியத்துவம் பெறுகிறது. தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மொத்த நோயாளிகள் எண்ணிக்கையில் சுமார் 60 சதவீதம் பேர் புதிதாக சேர்ந்துள்ளனர். அதாவது இத்தனை மாதங்களாக இல்லாத அளவுக்கு கடந்த ஒரு வாரத்தில்தான் பாதிப்பு என்பது மிக மிக மோசமான அளவில் உள்ளது. அதிலும், சென்னை நிலைமை பற்றி சொல்லி தெரிய வேண்டியதில்லை. சென்னையில் கொரோனா கிடையாது.. கொரோனாவில்தான், சென்னை இருக்கிறது என்று மக்கள் பேசிக் கொள்ளும் அளவுக்கு மோசமான நிலை.

கட்டுப்பாட்டு மண்டலம் நிலை?

இப்படி ஒரு சூழ்நிலையில் தேர்வு நடத்தப்பட்டால், தங்கள் மகனையோ, மகளையோ எவ்வாறு தேர்வு எழுதுவதற்கு நிம்மதியாக பெற்றோர்கள் அனுப்பி இருப்பார்கள். கண்டெய்ன்மென்ட் ஜோன் என்று சொல்லக்கூடிய கட்டுப்பாட்டு மண்டலங்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கிறது. அங்கே வீடுகளுக்கே சென்று காய்கறி சப்ளை செய்யப்படுகிறது. அப்பகுதியில் வசிக்கக்கூடிய மக்கள் வேறு பகுதிகளுக்கு செல்வதற்கு அனுமதி கிடையாது. அப்படிப்பட்ட மண்டலங்களில் உள்ள மாணவ மாணவிகள் தேர்வு எழுத மட்டும், எவ்வாறு வெளியே வருவார்கள். அவ்வாறு அந்த பகுதிகளில் இருந்து, வெளியே வரும்போது, பிற மாணவ மாணவிகளுக்கு நோய் தொற்றிக் கொள்ளுமே, என்ற கேள்விக்கு இன்னும் விடையில்லை.

அரசு பஸ்கள் இல்லையே

தமிழகத்தில் இன்னும் பொதுப் போக்குவரத்தை அனுமதிக்கப்பட வில்லை. எனவே ஏழை எளிய மாணவ மாணவ மாணவிகள் தேர்வு எழுத எவ்வாறு பள்ளிக்குச் செல்வார்கள்? ஒருவேளை பொது போக்குவரத்து அதற்குள்ளாக செயல்பட்டாலும்கூட அந்தக் கூட்டத்தில், இந்த சிறு பிஞ்சுகள் எப்படி பயணித்து பள்ளி செல்ல முடியும்?

அவசரம் தேவையில்லை

பத்தாம்வகுப்பு படிக்கக் கூடியவர்கள் குழந்தையும் இல்லை பெரியவர்களும் இல்லை. இரண்டும் கெட்டான் மனது என்று சொல்வார்களே, அப்படியான மன நிலை மற்றும் அறிவு தளத்தில் இருக்க கூடியவர்கள். அவர்களால் சமூக இடைவெளி போன்றவற்றை பராமரிக்க முடியுமா என்பது போன்ற பல்வேறு அச்சங்கள் மக்கள் மனதில் எழுந்து உள்ளன. இதை போக்குவதற்கு தமிழக பள்ளிக் கல்வித்துறை உரிய விளக்கம் அளிக்க வேண்டும். அச்சத்தை போக்க எடுக்கப்போகும் நடவடிக்கைகளின் பட்டியலை மக்களின் முன்பு வைக்க வேண்டும். அப்போதுதான் பதட்டமின்றி இப்போதே தேர்வுக்கு குழந்தைகள் படிக்க தயாராவார்கள்.

தேர்வு ஒத்திவைப்பு

பொதுமக்களின் இந்த அச்சத்தை மதித்து குறைந்தபட்சம் ஜூலை மாதத்துக்கு பிறகாவது தேர்வை நடத்தும் வகையில் முடிவை ஒத்திப் போட வேண்டும் என்பதுதான் இப்போது மக்கள் மனதில் உள்ள எதிர்பார்ப்பு. கொரோனா வைரஸ் பாதிப்பு குறைவாக இருக்கக் கூடிய அண்டை மாநிலங்களான, கேரளா ,கர்நாடகா போன்றவற்றில் கூட தேர்வு நடத்துவதற்கான அறிவிப்பு வெளியாகவில்லை, என்பதையும் இந்த நேரத்தில் அரசு யோசிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

11 comments:

  1. ஏன் இவ்வளவு அவசரம். டாஸ்மார்க் திறந்து எடுத்துக்கொண்ட கெட்ட பெயரை மறைக்க எல்லாம் திறந்துவிட்டு சகஜநிலை போல தோற்றம் ஏற்படுத்தவா

    ReplyDelete
  2. அவசரம் வேண்டாம். குழந்தைகளுக்கு உடல்நலத்தில் பாதிப்பு ஏற்படும்.எனவே வரும்முன் காத்து செயல்பட வேண்டுகிறேன்.

    ReplyDelete
  3. தேர்வு நடத்த வேண்டியது முக்கியம் தான் என்றாலும் , நாள் ஒன்றுக்கு 700 மேல் காரோனோ தொற்று உறுதி செய்யும் இந்த தேர்வு என்பது மக்கள் மத்தியில் கண்டிப்பாக அச்சத்தை ஏற்படுத்துகிறது நம் தமிழக அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டுகிறேன்

    ReplyDelete
  4. இங்கு க‌ண்ணிய‌மான‌ வார்த்தைக‌ளை ம‌ட்டுமே ப‌திவிட‌ வேண்டும்...பெற்றோர் ம‌ற்றும் மாண‌வ‌ர் நிலையில் இருந்து சிந்திக்க‌ வேண்டும்...
    க‌ட்டாய‌மாக‌ தேர்வு எழுத‌ வேண்டும் எனில் அனைத்து தேர்வு மைய‌ங்களிலும் போக்குவ‌ர‌த்து வ‌ச‌தி,க‌ழிவ‌றை வ‌ச‌தி,மாஸ்க்,சானிடைச‌ர்,ச‌மூக‌ இடைவெளி பின்ப‌ற்றுத‌ல்,மாண‌வ‌ர்க‌ளை ம‌ருத்துவ‌ சோத‌னை செய்த‌ல்,பெற்றோர்,மாண‌வ‌ர்,
    ஆசிரிய‌ர்க‌ளுக்கு த‌குந்த‌ உள‌விய‌ல் ஆலோச‌னை வ‌ழ‌ங்குத‌ல் ம‌ற்றும் மாண‌வ‌ர்க‌ளுக்கும்,ஆசிரிய‌ர்க‌ளுக்கும் காப்பீடு ஆகிய‌ செய‌ல்க‌ளை முறையாக‌ செய்த‌ல் வேண்டும்..
    இவைய‌னைத்தையும் செய்தும் கூட‌ தொற்று ஏற்ப‌டுமானால் அத‌ற்கு அர‌சே முழு பொறுப்பேற்க‌ வேண்டும்...மேலும் பாதிக்க‌ப்ப‌டுப‌வ‌ர்க‌ளுக்கு உரிய‌ ம‌ருத்துவ‌ சிகிச்சையும்,இழ‌ப்பீடும் வ‌ழங்க‌ வேண்டும்...இதுதான் ஒரு ம‌க்க‌ள் ந‌ல‌ அர‌சின் க‌ட‌மை...இதை செய்வார்க‌ளா?...

    ReplyDelete
  5. அவர்களும் குறைந்து விடும் என்று நினைத்து சொல்லி இருக்கலாம். ஆனால் முதலில் குழந்தைகள் வைத்து பரீட்சை செய்யக்கூடாது. June endல் தொடங்கி இருக்கலாம்.Immunity இல்லாதகுழந்தைகள் என்ன செய்யும்?எல்லாம் கடவுள் மேல் நம்பிக்கை வைத்து அனுப்ப வேண்டியதுதான்.Grade போட்டு pass செய்து இருக்கலாம்.As a mother ஆக குழந்தை யை அனுப்ப மனம் இப்போதே பயப்படுகிறது.அவர்கள் என்ன செய்தாலும் நாம் அதற்கு குறை தான் கூறுகிறோம். ஆனால் குழந்தைகள் விஷயம் என்பதால் மனது படபடக்கிறது.

    ReplyDelete
  6. பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு பட்டப்படிப்பு போன்ற அனைத்து சான்றுகளும் வெற்று காகிதம் போல் தான் தற்போது உள்ள நிலையில் இருக்கிறது, இவர்கள் அரசு வேலைக்கு போட்டித் தேர்வு வைத்து வேலைக்கு எடுக்கின்றனர் ஆகவே அந்த வெற்றுக் காகிதத்தை கிரேடு அடிப்படையில் கொடுத்துவிடலாம் தகுதியானவர்களை போட்டித் தேர்வு மூலம் தேர்ந்தெடுப்பதால் இந்த வெற்றுக் காகிதங்களை கிரேட் அடிப்படையில் கொடுத்தால் நன்றாக இருக்கும்

    ReplyDelete
    Replies
    1. சரியாக சொன்னீர்கள்

      Delete
  7. ஊரடங்கினை மிகக்கடுமையாக ஜூன் 15 வரை நீட்டிக்கலாம்.பொது போக்குவரத்தினை ஜூன் 15 க்கு பிறகு அனுமதிக்கலாம்.
    ஜூன் 15 க்குப் பிறகு அனைத்து மாணவர்களுக்கும் சமூக இடைவெளியில் பாடங்கள் நடத்க்தலாம்
    10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை ஜூலை முதல் வாரத்தில் தொடங்கலாம்.ஜூன் 1- ஆம் தேதியிலிருந்து 10 ஆம் வகுப்பு மாணவர்களை பள்ளிக்கு வரச்சொல்லி சமூக இடைவெளியில் வகுப்பில் அல்லது பெரிய அறையில் அமரவைத்து மறதியில் உள்ள பாடங்களை திருப்புதல் செய்யலாம்.
    நகர்புற பள்ளி மாணவர்களுக்கென தனியாக காலைதிலும்,மாலையிலும் அரசு பேருந்தினை இயக்கலாம்.
    கிராமப்புற மாணவர்கள் பள்ளிக்கு சைக்கிளில் வந்து செல்லலாம்.

    தேர்வு அறையில் சமூக இடைவெளிக்காக 10 தேர்வர்களை மட்டும் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்.
    10 ஆம் வகுப்பு மதிப்பீட்டு பணிக்கு முந்தைய ஆண்டுகள் போல கல்வி மாவட்டம் ஒன்றிற்கு ஒன்று அல்லது இரண்டு மையங்கள் வைத்து பாட ஆசிரியர்கள் அனைவரையும் வரவழைத்து மதிப்பிடலாம்.

    ReplyDelete
  8. மாணவர்கள் அலட்சியமாக இல்லாமல் தேர்வுக்கு படிக்க வேண்டும் என்பதற்காக இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கலாம்.. தேதி மீண்டும் மாற்றப்படலாம்

    ReplyDelete
  9. தேர்வுக்கு அவசரம் வேண்டாம். ஊரடங்கு உத்தரவை முறையாக கடைபிடித்த மாவட்டங்களில் கொரனோ தொற்றே இல்லாத மாவட்டமாக மாறி உள்ளது. சென்னை, கடலூர்,அரியலூர், சிவகங்கை மாவட்டங்களில் தற்போது அதிக அளவிலான கொரனோ தொற்று உள்ளது. இப்போ தேர்வு முறை அதிக பரவலை ஏற்படுத்தும். ஊரடங்கு போட்டால் பட்டினியால் அவதி அதனால் ஊரடங்கை தளர்த்த வேண்டும் என மக்களே போராட்டம் செய்யும் போது அரசு என்ன செய்யும். மாத மாத இலவசமாக அரிசி பருப்பு எண்ணெய் சர்க்கரை தருகிறார்களே அதை வைத்து முறையாக கட்டுப்பாட்டுடன் மக்கள் இருந்தால் கொரனோவை கட்டுப்படுத்தலாம். தினக்கூலிக்கு நாள்தோரும் வேலைக்கு சென்று உடல் வலியை போக்க குடிப்பவர்களே அதிகம். ஊரடங்கால் சோற்றுக்கே வழி இல்லை என்று சொன்ன மக்களுக்கு டாஸ்மாக் திறந்த உடனே எங்கு இருந்து பணம் வந்தது. முதல்ல மக்களே கட்டுப்பாட்டோடு இல்லாமல் அரசை குறை சொல்வதும் தவறு. ஊரடங்கு முறை முறையாக பின்பற்றப்பட்டு கொரனோவை கட்டுப்படுத்திய பின்பு தேர்வு வைப்பதே முறையும் கூட. அப்போது தான் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் அனைவருமே உளவியல் ரீதியாகவும், பயம் இல்லாமலும் நிம்மதியாகவும் தேர்வை எதிர் கொள்வார்கள். 24 மார்ச் மாதம் 80 பேருக்கு கொரனோ இருந்த போது அனுப்பாத பெற்றோர் இப்போ 8000 பேருக்கு கொரனோ இருக்கும் போது தேர்வு எழுத அனுமதிப்பார்களா?வீட்டிற்கு ஒரு குழந்தையை மட்டுமே வைத்து இருக்கும் பெற்றோர்கள் படிப்பு போனாலும் அடுத்த வருடம் பார்த்துக்கலாம். உயிர் தான் முக்கியம் என்று நினைப்பாங்க.

    ReplyDelete
    Replies
    1. அருமையான கருத்து சகோதரி அவர்களே

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி