ஆன்லைன் வகுப்புகளுக்கு புதிய விதிமுறைகள் - மத்திய அரசு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 6, 2020

ஆன்லைன் வகுப்புகளுக்கு புதிய விதிமுறைகள் - மத்திய அரசு


ஆன்லைன் வகுப்புகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கி உள்ளதாக மத்திய அரசு  தெரிவித்ததையடுத்து, அதுகுறித்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதுவரை ஆன்லைன் வகுப்புகளுக்கு இடைக்காலத் தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.

கரோனா பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக, பள்ளிகள் திறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், நடப்புக் கல்வியாண்டுக்கான பாடங்கள் தனியார் பள்ளிகளில் ஆன்லைன் மூலம் நடத்தப்படுகின்றன. இதில் எல்.கே.ஜி. முதல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பாடம் நடத்தப்படுகிறது.

தொடர்ச்சியாக பல மணி நேரம் நடத்தப்படும் வகுப்புகளால் சிறு குழந்தைகள் விரைவில் சோர்வடையும் நிலை உள்ளது. ஆசிரியர்கள் மாறி மாறி வகுப்பெடுக்கும்போது மாணவர்கள் ஒரே இடத்தில் உட்கார்ந்து கேட்பதால் கண் அழற்சி, உடல் சோர்வுக்கு ஆளாகின்றனர்.

மறுபுறம் ஒரு வீட்டில் இரண்டு, மூன்று பிள்ளைகள் இருக்கும்போது அவர்கள் கல்வி கற்க உரிய சாதனங்கள், நெட் கனெக்‌ஷனுக்காக அதிக பணம் செலவழிக்கும் நிலைக்கு பெற்றோர் ஆளாகின்றனர். ஊரடங்கு நேரத்தில் பண வருமானம் இல்லாத நிலையில் இது அவர்களைக் கடுமையாகப் பாதிக்கிறது.

இதுகுறித்து பெற்றோர் தரப்பில் சென்னை புத்தகரம் பகுதியைச் சேர்ந்த சரண்யா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்திருந்தார். ஆன்லைன் மூலம் வகுப்புகளில் கலந்து கொள்ள மாணவ, மாணவியர் முயற்சிக்கும்போது ஆபாச இணையதளங்களால் அவர்களின் கவனம் சிதைவதால், அந்த இணையதளங்களை மாணவ, மாணவியர் அணுக இயலாத வகையில் விதிகளை வகுக்கும் வரை ஆன்லைன் வகுப்புகளுக்குத் தடை விதிக்கக் கோரியிருந்தார்.

இதேபோல், ஆன்லைன் வகுப்புக்களை மொபைல் மூலமும், லேப்டாப் மூலமும் பார்ப்பதால் மாணவர்களின் கண்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை ஆன்லைன் வகுப்புகள் நடத்தத் தடை விதிக்க வேண்டும் எனவும், 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 2 மணி நேரம் மட்டும் வகுப்புக்கள் நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரி விமல் மோகன் என்பவரும் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில் மாணவர்களுக்கு ஏற்படும் கண் பாதிப்பு குறித்து கண் மருத்துவமனை டீன் அறிக்கை அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆன்லைன் வகுப்புகளுக்குத் தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்குகள், நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வில் கடந்த மாதம் விசாரணைக்கு வந்தது.

அப்போது, எந்த விதிகளும் வகுக்கப்படாமல் ஆன்லைன் வகுப்புகள்  நடத்தப்பட்டு வருவதாக மனுதாரர்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. வழக்கில் ஆஜரான, மத்திய அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்துவதற்கு விதிகள் வகுப்பது தொடர்பாக உள்துறை மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் கருத்துகளைப் பெற்று தெரிவிக்க இரண்டு வார கால அவகாசம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.
அதேபோல, உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, மாணவர்களின் கண் பாதிப்பு குறித்து கண் மருத்துவமனை டீன் அறிக்கை அளிக்க ஒரு வார கால அவகாசம் வழங்க வேண்டும் என தமிழக அரசுத் தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், ஆன்லைன் வகுப்புகளுக்குத் தடை கோரிய அனைத்து வழக்குகளையும் ஜூலை 6-ம் தேதிக்குத் தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.
இந்நிலையில் இந்த வழக்குகள் நீதிபதிகள் எம்எம் சுந்தரேஷ், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் சங்கரநாராயணன், ஆன்லைன் வகுப்புகள் தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டு வருவதாகவும், ஜூலை 15-ம் தேதிக்குள் அவற்றை வெளியிட உள்ளதாகவும் அதுவரை அவகாசம் வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

கண் மருத்துவமனை இதுவரை உயர் நீதிமன்றம் உத்தரவுப்படி அறிக்கை தாக்கல் செய்யவில்லை எனவும், மத்திய அரசு விதிமுறைகளை வெளியிடும் வரை ஆன்லைன் வகுப்புகளை நடத்த இடைக்காலத் தடை விதிக்க வேண்டுமெனவும் மனுதாரர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
ஆன்லைன் இடைக்காலத் தடைக்கான கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள் வழக்கை ஜூலை 20-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

3 comments:

  1. I totally agree that due to staring at the electronic gadgets eyes gets affected.

    ReplyDelete
  2. Fools ask them to sit before mobile and laptop continuously without talking then they will know how physically and mentally they get affected. Instead of earning money by destroying our future generations, they can beg and eat

    ReplyDelete
  3. If the moms r not educated means how could thy continue their online classes. Al lessons r in pdf format , y the schools r asking money money. V r only taking care of our children. If anything happen means who wil b responsible. Say no to paying the fee

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி