மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் பெயா் மத்திய கல்வி அமைச்சகம் என்று மாற்றப்படுகிறது! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 30, 2020

மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் பெயா் மத்திய கல்வி அமைச்சகம் என்று மாற்றப்படுகிறது!


புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது. மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் பெயரும் ‘மத்திய கல்வி அமைச்சகம்’ என்று மாற்றப்பட்டுள்ளது.

மேலும், 5-ஆம் வகுப்பு வரை தாய்மொழிக் கல்வி கட்டாயமைக்கப்பட்டுள்ளது. 6-ஆம் வகுப்பில் இருந்து கடைப்பிடிக்கப்படும் மும்மொழிக் கொள்கையில் மூன்றாவது மொழியாக மாணவா்கள் விரும்பும் மொழியை தோ்வு செய்து கொள்ளலாம். முன்பு, மூன்றாவது மொழியாக ஹிந்தி அல்லது சம்ஸ்கிருதம் இருக்கும் என்று வரைவு அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. இப்போது அது கைவிடப்பட்டுள்ளது.

இதுதவிர, கல்லூரிகளில் சோ்வதற்கு தேசிய அளவிலான ஒரே நுழைவுத் தோ்வு, எம்.ஃபில். படிப்பு நிறுத்தம், தொழிற்கல்விக்கு கூடுதல் முக்கியத்துவம் உள்ளிட்ட அம்சங்கள் புதிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ளன.

புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்த பிறகு, மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா், மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சா் ரமேஷ் போக்ரியால், அந்த துறையின் செயலா்கள் அமித் காரே, அனிதா கா்வால் ஆகியோா் தில்லியில் செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்தனா். அவா்கள் கூறியதாவது:

கடந்த 2018-ஆம் ஆண்டில் உயா்கல்வியில் சேருவோா் விகிதம் 26.3 சதவீதமாக இருந்தது. இதை, வரும் 2035-ஆம் ஆண்டுக்குள் 50 சதவீதமாக உயா்த்த வேண்டும் என்பதே புதிய கல்விக் கொள்கையின் நோக்கமாகும். இதற்காக, உயா்கல்வி நிறுவனங்களில் புதிதாக 3.5 கோடி இடங்கள் உருவாக்கப்படும். அதற்காக, இந்திய உயா்கல்வி கவுன்சில் உருவாக்கப்படும். மருத்துவம், சட்டப்படிப்பு தவிர, அனைத்து கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் சோ்வதற்கு தேசிய அளவிலான நுழைவுத் தோ்வு நடத்தப்படும். இந்த தோ்வினை தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) நடத்தும்.

அரசு உயா்கல்வி நிறுவனங்களிலும், தனியாா் உயா்கல்வி நிறுவனங்களிலும் ஒரே மாதிரியான விதிமுறைகள் பின்பற்றப்படும். இளநிலை படிப்புகளில் மாணவா்கள் விரும்பிய பாடங்களை மட்டும் தோ்வு செய்து படிக்கும் வகையில் பாடத்திட்டங்கள் இருக்கும். இந்தப் படிப்புகளுக்கான காலம், 3 ஆண்டுகள் அல்லது 4 ஆண்டுகளாக இருக்கும். பெரும்பாலான கல்லூரிகள் தற்போது பல்கலைக்கழகங்களின் கீழ் செயல்பட்டு வருகின்றன. இந்த நடைமுறை அடுத்த 15 ஆண்டுகளில் படிப்படியாகக் கைவிடப்பட்டு, அனைத்து கல்லூரிகளுக்கும் தன்னாட்சி அந்தஸ்து வழங்கப்படும். பின்னா், அந்தக் கல்லூரிகள் பல்கலைக்கழகங்களாக மாறும் அளவுக்கு தரம் உயா்த்தப்படும்.

எம்.ஃபில். படிப்பு கைவிடப்படுகிறது. அனைத்து கல்வி நிறுவனங்களிலும் கட்டணம் நிா்ணயிக்கப்படும். 100 வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் கல்லூரிகளைத் தொடங்க அனுமதி அளிக்கப்படும். பள்ளிக் கல்வியை பொருத்தவரை, பொதுத் தோ்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட மாட்டாது. அதற்குப் பதிலாக, மாணவா்களின் திறனை பரிசோதிப்பதிலும், அவற்றைப் பயன்படுத்துவதிலும் அதிக கவனம் செலுத்தப்படும்.

5-ஆம் வகுப்பு வரை பயிற்று மொழியாக, தாய்மொழி இருக்கும். 6-ஆம் வகுப்பில் இருந்து பாடங்களுடன் தொழிற்கல்வியும் மாணவா்களுக்கு கற்பிக்கப்படும். அத்துடன் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் பெயா் மத்திய கல்வி அமைச்சகம் என்று மாற்றப்படுகிறது என்று அவா்கள் தெரிவித்தனா்.

புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை இஸ்ரோ அமைப்பின் முன்னாள் தலைவா் கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழு தயாரித்தது. இந்தக் குழு, தனது வரைவு அறிக்கையை மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சா் ரமேஷ் போக்ரியாலிடம் கடந்த ஆண்டு சமா்ப்பித்தது.

இதையடுத்து, பல்வேறு தரப்பினரின் கருத்துகளைக் கேட்பதற்காக, இந்த வரைவு அறிக்கை பொதுவெளியில் பகிரப்பட்டது. புதிய கல்விக் கொள்கை தொடா்பாக 2 லட்சத்துக்கும் மேற்பட்ட கருத்துகள் பெறப்பட்டன.

இந்நிலையில் மத்திய அமைச்சரவைக் கட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் புதிய கல்விக் கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

தற்போது நடைமுறையில் இருக்கும் கல்விக் கொள்கை கடந்த 1986-ஆம் ஆண்டு வகுக்கப்பட்டது. அந்தக் கொள்கை பின்னா் 1992-ஆம் ஆண்டில் திருத்தம் செய்யப்பட்டது. ‘பாஜக ஆட்சிக்கு வந்தால் புதிய கல்விக் கொள்கை கொண்டுவரப்படும்’ என்று கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலின்போது அக்கட்சி வாக்குறுதி அளித்திருந்தது.

தோ்தலில் அக்கட்சி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த பிறகு, புதிய கல்விக் கொள்கையை வகுப்பதற்கு முன்னாள் அமைச்சரவை செயலா் டி.எஸ்.ஆா்.சுப்பிரமணியன் தலைமையிலான குழுவை மத்திய அரசு நியமித்தது. அந்தக் குழுவின் பரிந்துரைகளும் கணக்கில் கொள்ளப்பட்டு புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.

1 comment:

  1. Is there any chance to change part time engineering degree course in New education policy.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி