கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீட்டின் கீழ் ஏழை மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச சேர்க்கை பெற நாளை முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். - kalviseithi

Aug 26, 2020

கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீட்டின் கீழ் ஏழை மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச சேர்க்கை பெற நாளை முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

 


குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009 பிரிவு 12(1) (சி)-ன்படி, சிறுபான்மை அல்லாத அனைத்துத் தனியார் பள்ளிகளிலும் ஏழை குழந்தைகளுக்கு எல்கேஜி அல்லது 1-ம் வகுப்புகளில், குறைந்தபட்சம் 25 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு மாணவர் சேர்க்கை வழங்கப்பட வேண்டும். தமிழகத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளில் சுமார் 1.12 இலட்சம் இடங்கள் உள்ளன. வரும் 2020-21 ஆம் கல்வியாண்டில் தனியார் பள்ளிகளில் எல்கேஜி அல்லது முதல் வகுப்பில் 25 சதவீத ஒதுக்கீட்டில் சேர விரும்பும் மாணவர்கள் நாளை( ஆகஸ்டு-27) முதல் செப். 25-ம் தேதி வரை rte.tnschools.gov.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்டக் கல்வி அலுவலகங்கள், வட்டாரக் கல்வி அலுவலகங்கள், அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வள மைய அலுவலகங்களிலும் இணையதளம் வழியாக விண்ணப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பிக்கும்போது புகைப்படம், பிறப்புச் சான்று அல்லது பிறப்புச் சான்றிதழுக்கான பிற ஆவணம், இருப்பிடச் சான்று, வருமானச் சான்று (ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கும் கீழ்), வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினரில் முன்னுரிமை கோரும் நபர்கள் உரிய அலுவலரிடம் பெறப்பட்ட நிரந்தர ஆவணங்களின் நகல், சாதிச் சான்றிதழ் ஆகிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்யவேண்டும்.

சட்டப்பிரிவு 12 (1) (சி) கீழ், சேர்க்கை வழங்க, தமிழ்நாடு குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை விதிகள் 2011, விதி எண் 4(1) படி எல்கேஜி அல்லது முதல் வகுப்பிற்கு மாணவரின் இருப்பிடம், சேர விரும்பும் தனியார் பள்ளிக்கு 1 கிலோ மீட்டருக்குள் இருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட பள்ளிகள் விண்ணப்பங்கள் வாங்கும்போது பெற்றோருக்கு ஒப்புகைச் சீட்டைத் தவறாமல் வழங்கவேண்டும். தனியார் பள்ளிகளில் நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டால் வெளிப்படையான  குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். பெற்றோர்கள் தங்கள் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள 5 பள்ளிகளில் விண்ணப்பிக்கலாம். இந்த திட்டத்தின் கீழ் சிறுபான்மை அந்தஸ்து பெறாத அனைத்து தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக்,ஐசிஎஸ்இ மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளிலும் இலவச மாணவர் சேர்க்கை பெறலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி