அரசு கலைக் கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்புகளுக்கான இணையவழிக் கலந்தாய்வு தொடக்கம். - kalviseithi

Aug 28, 2020

அரசு கலைக் கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்புகளுக்கான இணையவழிக் கலந்தாய்வு தொடக்கம்.

கோவை அரசு கலைக் கல்லூரியில் இளநிலைப் பட்டப்படிப்புகளுக்கான இணையவழிக் கலந்தாய்வு இன்று (ஆக. 28) தொடங்கியது.

கோவை அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ. தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளாதாரம், பாதுகாப்பியல், சுற்றுலாவியல், அரசியல் அறிவியல், பி.எஸ்சி. கணிதம், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல், உளவியல், புவியியல், பி.காம்., பி.காம். சிஏ., பிபிஏ உள்ளிட்ட 21 இளநிலை பட்டப்படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இப்படிப்புகளின் முதலாம் ஆண்டில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்காக இணையவழி விண்ணப்பங்கள் கடந்த ஜூலை 20-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை பெறப்பட்டன. 18 ஆயிரம் மாணவ, மாணவிகள் விண்ணப்பித்தனர். அதன் தொடர்ச்சியாகத் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு, இணையவழிக் கலந்தாய்வு இன்று தொடங்கப்பட்டது.

இதுகுறித்து கோவை அரசு கலைக் கல்லூரி முதல்வர் கே.சித்ரா கூறியதாவது:

''2020-2021 ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை, இணையவழிக் கலந்தாய்வு அடிப்படையில் நடைபெற்று வருகிறது. இதற்காகத் துறைவாரியான தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு, gacbe.ac.in என்ற கல்லூரி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தரவரிசையில் இடம்பிடித்த மாணவர்களுக்கு மின்னஞ்சல் வழியாகவும், குறுந்தகவல் வழியாகவும் தகவல் அனுப்பப்பட்டு இணையவழிக் கலந்தாய்வில் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் மாணவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இணையதளம் வழியாகக் கலந்தாய்வில் பங்கேற்க வாய்ப்பில்லாத மாணவர்கள் மட்டும் நேரடியாகப் பங்கேற்கலாம். அதற்குக் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இணையவழிக் கலந்தாய்வில் மாணவர்கள், தங்கள் இருப்பிடங்களில் இருந்து கலந்து கொள்ளலாம்.

பாடப்பிரிவைத் தேர்வு செய்து, மாணவர் சேர்க்கையை உறுதி செய்த பின்னர் தங்களுடைய அசல் சான்றிதழ்களைக் கல்லூரியில் சம்பந்தப்பட்ட துறையில் ஒப்படைக்க வேண்டும். வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் எனில் அருகில் உள்ள அரசு கலைக் கல்லூரிகளில் தங்களுடைய சான்றிதழ்களை ஒப்படைக்க வேண்டும். தபால் வழியாகவும் சான்றிதழ்களை அனுப்பலாம்.

முதல்கட்டக் கலந்தாய்வு முடிந்த பின்னர் காலியாக உள்ள இடங்களுக்கு ஏற்ப, காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுக் கலந்தாய்வு நடத்தப்படும்''.

இவ்வாறு முதல்வர் கே.சித்ரா தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி