கருணை அடிப்படையில் அரசு வேலையில் சேர்பவர் குடும்பத்தைக் கவனிக்காவிட்டால் வேறு உறுப்பினருக்கு அந்த வேலை: உயர் நீதிமன்றம் புது உத்தரவு - kalviseithi

Aug 26, 2020

கருணை அடிப்படையில் அரசு வேலையில் சேர்பவர் குடும்பத்தைக் கவனிக்காவிட்டால் வேறு உறுப்பினருக்கு அந்த வேலை: உயர் நீதிமன்றம் புது உத்தரவு

 

அரசு ஊழியர் உயிரிழப்புக்குப் பிறகு அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் தகுதி அடிப்படையில் அரசுக்கு வேலையில் சேர்ந்து குடும்பத்தைக் கவனிக்காமல் இருந்தால் அதே குடும்பத்தில் மற்றொருவருக்கு கருணை வேலை வழங்கலாம் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


மேலூர் தாலுகா கட்சிராயன்பட்டியில் கிராம உதவியாளராகப் பணிபுரிந்தவர் வி.கல்லாணை. இவர் 28.10.211-ல் இறந்தார். கல்லாணையின் மகள் இளையராணி கருணை வேலை கேட்டு மதுரை மாவட்ட ஆட்சியரிடம் 27.8.2012-ல் மனு அளித்தார்.


இதனிடையே கல்லாணையின் மகன் சக்திபொன்னுசாமிக்கு 2013-ல் தகுதி அடிப்படையில் அரசு வேலை கிடைத்தது. இதையே காரணமாக சொல்லி கருணை வேலை கேட்டு இளையராணி அனுப்பிய மனுவை நிராகரித்து மதுரை மாவட்ட ஆட்சியர் 17.3.2020-ல் உத்தரவிட்டார்.


ஆட்சியரின் உத்தரவில், பணியிலிருக்கும் அரசு ஊழியர் உயிரிழப்பதற்கு முன்பு அவரது குடும்பத்தில் யாரோனும் ஒருவர் அரசு வேலையில் சேர்ந்து, அவர் குடும்பத்தை கவனிக்காமல் இருந்தால், குடும்பத்தின் வேறு ஒருவருக்கு கருணை வேலை வழங்குவது குறித்து பரிசீலிக்கலாம் என அரசாணை உள்ளது.


ஆனால் இங்கு அரசு ஊழியர் இறந்த பிறகு அவரது குடும்பத்தில் ஒருவர் அரசு வேலைக்குச் சென்றுள்ளார். இதனால் அந்த அரசாணை அடிப்படையில் மனுதாரருக்கு கருணை வேலை வழங்க முடியாது எனக் கூறப்பட்டிருந்தது.


இந்த உத்தரவை ரத்து செய்து தனக்கு கருணை வேலை வழங்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடக்கோரி இளையராணி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இதனை நீதிபதி சுரேஷ்குமார் விசாரித்தார். மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் சு.விஸ்வலிங்கம் வாதிட்டார்.


பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவு:


இந்த வழக்கில் மனுதாரரின் தந்தை பணியின் போது உயிரிழந்துள்ளார். அதன் பிறகு அவர் குடும்பத்தில் ஒருவர் தகுதி அடிப்படையில் அரசு வேலைக்கு சென்றுள்ளார்.


அரசு ஊழியரின் இறப்புக்கு முன்பு குடும்பத்தில் ஒருவர் அரசு வேலைக்கு சென்று குடும்பத்தை கவனிக்காமல் இருந்தால், அந்த குடும்பத்தில் ஒருவருக்கு கருணை வேலை வழங்க பரிசீலிப்பதாகவும், இறப்புக்கு பின்பு குடும்பத்தில் ஒருவர் அரசு வேலைக்குச் சென்று குடும்பத்தைக் கவனிக்காமல் இருந்தால் கருணை வேலை வழங்க முடியாது என்பதும் முரண்பாடாக உள்ளது.


இதில் மனுதாரரின் சகோதரர் அவரது தந்தை இறப்புக்கு பிறகு அரசு பணிக்கு சென்றாலும் குடும்பத்தை கவனிக்கவில்லை. தனியே சென்றுவிட்டார். இதை அதிகாரிகளும் உறுதி செய்துள்ளனர். அப்படியிருக்கும் போது மனுதாரருக்கு கருணை வேலை வழங்க மறுக்கக்கூடாது.


எனவே மனுதாரருக்கு கருணை வேலை வழங்க மறுத்து மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரருக்கு அவரது கல்வித்தகுதிக்கு ஏற்ப உரிய வேலை வழங்க 3 மாதத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி