தாய்மொழியில் கருத்து தெரிவிக்க வாய்ப்பில்லை: மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை கருத்து கேட்பு பயனற்றது ஆசிரியர் கூட்டணி கருத்து - kalviseithi

Aug 28, 2020

தாய்மொழியில் கருத்து தெரிவிக்க வாய்ப்பில்லை: மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை கருத்து கேட்பு பயனற்றது ஆசிரியர் கூட்டணி கருத்து


தாய்மொழியில் கருத்து தெரிவிக்க வாய்ப்பில்லாததால் மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை குறித்து ஆசிரியர்களிடம் கருத்து கேட்பது பயனற்றது என ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கருத்து தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில மைய நிர்வாகிகள் கூட்டம் காணொளி மூலம் நடந்தது. கூட்டத்தில், தேசிய கல்விக்கொள்கை - 2020 தொடர்பான விவாதம் நடந்தது. மாநிலத் தலைவர் மூ.மணிமேகலை தலைமை வகித்தார்.

கூட்டத்தில், தேசிய கல்விக்கொள்கை - 2020 குறித்து பாராளுமன்றத்தில் எந்தவித விவாதத்துக்கும் உட்படுத்தாமல் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலோடு நடைமுறைக்கு கொண்டு வந்திருப்பது என்பது ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது.

புதிய கல்விக்கொள்கையை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக மத்திய பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவு துறையின் செயலாளர் அனைத்து மாநில, யூனியன் பிரதேசங்களின் கல்வித்துறை செயலாளர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ஆசிரியர்கள், பள்ளி முதல்வர்களிடம் ஆக.31-ம் தேதிக்குள் இணையதளம் வாயிலாக கருத்து கேட்கப்பட்டுள்ளது.

கல்வி மத்திய, மாநில அரசுகளின் பொதுப்பட்டியலில் உள்ளது. ஆனால், மாநில அரசுகளின் கருத்துக்களை எதிர்பார்க்காமல் மாநில அரசுகளின் கீழ் பணியாற்றும் ஆசிரியர்களிடம் நேரடியாக மத்திய அரசு கருத்து கேட்பது கூட்டாட்சி முறைக்கு எதிரானதாகும். இதுகுறித்து தமிழக அரசு தனது நிலையை தெரிவிக்க வேண்டும்.

ஆசிரியர்களிடம் கருத்து கோரி இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள விவரங்கள் 11 கருப்பொருள்கள் கொண்டதாகவும், அதன் கீழ் 102 வினாக்கள் கொண்டதாகவும் அமைந்துள்ளது.

இவை அனைத்தும், ஆங்கிலம், இந்தி ஆகிய இரு மொழிகளில் மட்டுமே உள்ளது. ஆசிரியராக இருந்தாலும் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினை தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போது தெளிவாக புரிந்து கொண்டு, தாய்மொழியில் கருத்துக்களை தெரிவிப்பது போன்று பிற மொழிகளில் தெரிவிக்க முடியாது. இதனால் இந்தியா முழுவதும் ஆசிரியர்களிடம் ஆங்கிலம், இந்தி ஆகிய இரு மொழிகளில் மட்டும் கருத்து கேட்பது எந்தவித பயனையும் தராது.

கடந்த ஆண்டு வெளியிட்ட தேசிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கையில் நாடு முழுவதும் உள்ள கல்வியாளர்கள், ஆசிரியர் அமைப்புகள் தெரிவித்த கருத்துக்களை புறந்தள்ளி வரைவு அறிக்கையை அப்படியே மத்திய அமைச்சரவை ஏற்று ஒப்புதல் அளித்து, மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

தேசிய கல்விக் கொள்கையில் உள்ள பாதகமான அம்சங்கள் தொடர்பாக கருத்துகள் கூறுவதற்கு வாய்ப்பளிக்காமல், அதில் உள்ள பாதகமான அம்சங்களை எவ்வாறு செயல்படுத்துவது என ஆசிரியர்களிடம் கருத்து கேட்பது வேடிக்கையானது.

மேலும், கருத்து கேட்பு படிவத்தில் ஆசிரியர்களின் பெயர், முகவரி உள்ளிட்ட முழு விபரங்களையும் கேட்பது ஆசிரியர்கள் சுதந்திரமாக கருத்து தெரிவிப்பதை தடுக்கும் செயலாகும். எனவே, இந்த கருத்து கேட்பு ஒரு பயனையும் தராது என்பதே உண்மை.

எனவே, ஏழை, எளிய கிராமப்புற மாணவர்களின் நலனுக்கு எதிராக பல்வேறு கூறுகளை கொண்ட தேசிய கல்விக்கொள்கை - 2020ஐ மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும்.

அரசியல் கட்சிகள், கல்வியாளர்கள் உட்பட பல்வேறு அமைப்புகள் தெரிவித்த ஆக்கப்பூர்வமான கருத்துகளை உள்ளடக்கிய தேசிய கல்விக்கொள்கை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்து விரிவாக விவாதித்து நடைமுறைப்படுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

3 comments:

 1. தினமும் 50 பேரை பிடிச்சுட்டு வாங்க! கொரோனாவில் காசு பார்க்கும் அதிகாரிகள்!
  பதிவு செய்த நாள்: ஆக 27,2020 23:33
  Home
  Share
  சென்னை; 'கொரோனா பரிசோதனைக்காக தினமும், 50 பேரை கட்டாயம் அழைத்து வர வேண்டும்' என, களப் பணியாளர்களுக்கு, மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

  இதன் வாயிலாக ஒரு நோயாளிக்கு, 20 ஆயிரம் ரூபாய் வரை பல்வேறு வகையில், 'பில்' கணக்கிடப்படுகிறது.சென்னையில் கொரோனா தொற்றை கண்டறிய, களப் பணியாளர்கள் வாயிலாக தடுப்பு நடவடிக்கைகளை, மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. இதன்படி, 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


  ஆரம்பத்தில் இலக்கு நிர்ணயிக்காமல், தொற்று தடுப்பை மட்டுமே குறிக்கோளாக வைத்து, மாநகராட்சி செயல்பட்டு வந்தது.இதில், கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் ஒருவருக்கு, பரிசோதனை செலவு, வீட்டில் தனிமைப்படுத்தலுக்கான செலவு, உணவு, மருந்து, மாத்திரை என, 15 ஆயிரம் முதல், 20 ஆயிரம் ரூபாய் வரை, 'பில்' போட்டு, கணக்கு எழுதப்படுவதாக கூறப்படுகிறது. இதில், தங்களுக்கு பெரும் தொகை கிடைப்பதால், அதிகாரிகள், இலக்கு நிர்ணயித்து, கொரோனா நோயாளிகளை கண்டறியும்படி, களப் பணியாளர்களுக்கு, உத்தரவிட்டுள்ளனர்.இதன்படி, கொரோனா நோயாளிகளுக்கு மட்டும், 500 கோடி ரூபாய் வரை மாநகராட்சி செலவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

  இது குறித்து, மாநகராட்சி களப்பணியாளர்கள் கூறியதாவது:எங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில், தினமும், 50 பேரை பரிசோதனைக்கு அழைத்து வர வேண்டும் என, மாநகராட்சி அதிகாரிகள் இலக்கு நிர்ணயித்துள்ளனர்.அவ்வாறு, 50 பேரை அழைத்து வரவில்லை என்றால், அதிகாரிகள், எங்களை கண்டிப்பதுடன், அடுத்த மாதம் சம்பளம் கிடைக்காது என, மிரட்டுகின்றனர்.கொரோனா கண்டறியும் ஒரு நோயாளிக்கு, பரிசோதனைக்கு மட்டும், 6,000 ரூபாய் செலவு செய்யப்படுவதாக, 'பில்' போடப்படுகிறது.அதேபோல், வாகன செலவு, உணவு, மருந்து மற்றும் வீட்டில் தகரம் என, 15 ஆயிரம் முதல், 20 ஆயிரம் ரூபாய் வரை, மாநகராட்சி அதிகாரிகள் செலவு செய்வதாக கணக்கு காட்டுகின்றனர்.

  இதன் காரணமாக, முதல்நிலை தொற்றுடன், எவ்வித அறிகுறியும் இல்லாத நோயாளியை கூட, வீட்டில் தனிமைப்படுத்தாமல், கொரோனா சிறப்பு மையத்துக்கு அழைத்துச் செல்ல வற்புறுத்துகின்றனர்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.இது குறித்து, மாநகராட்சி சுகாதார நல அலுவலர் ஜெகதீசனிடம் கேட்டபோது, பதில் அளிக்க மறுத்து விட்டார்

  ReplyDelete
  Replies
  1. கொரொனாவிலும் ஊழ‌ல் செய்யும் கொடூர‌ ஆட்சியாள‌ர்க‌ள்..

   Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி