மாநிலம் முழுவதும் வசூல், முறைகேடு புகார்: சத்துணவு பணியாளர் தேர்வு ரத்து - kalviseithi

Oct 9, 2020

மாநிலம் முழுவதும் வசூல், முறைகேடு புகார்: சத்துணவு பணியாளர் தேர்வு ரத்து லஞ்சம் மற்றும் முறைகேடு புகாரை தொடர்ந்து தமிழகம் முழுவதும் நடைபெற இருந்த சத்துணவு அமைப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான தேர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் விருதுநகர், திருநெல்வேலி, சிவகங்கை, காஞ்சிபுரம், தூத்துக்குடி, கிருஷ்ணகிரி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள சத்துணவு மையங்களுக்கு சத்துணவு அமைப்பாளர், சமையல் மற்றும் சமையல் உதவியாளர் போன்ற 5,118 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் 30.9.2020 முதல் 12.10.2020 வரை அஞ்சல் மூலம் அனுப்பி வைக்க வேண்டும் என்று தமிழக அரசு செப்டம்பர் மாதம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதற்கு 5ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை ேதர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. 21 வயதில் இருந்து 40 வயதுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்கள் நேரடி நியமனம் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. குறைந்தபட்சம் ரூ.3 ஆயிரம் முதல் அதிகப்பட்சமாக ரூ.24 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. 


இதையடுத்து, தமிழகம் முழுவதும் இருந்து 5ம் வகுப்பு படித்தவர்களில் இருந்து பட்டதாரிகள், இன்ஜினியர்கள் வரை லட்சக்கணக்கானவர்கள் விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில், தமிழகத்தில் இன்னும் 7 மாதத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்குள் இந்த பணியிடங்களுக்கு ஆட்களை எந்தவித தேர்வும் இல்லாமல் நியமனம் செய்ய சமூகநலத் துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. ஒரு பணியிடத்துக்கு 3 லட்சம் முதல் 5 லட்சம் எனவும், சில மாவட்டங்களில் ரூ.10 லட்சம் வரையும் லஞ்சம் கொடுத்தால் சத்துணவு மையத்தில் வேலை வாங்கி தருவதாக இடைத்தரகர்கள் செயல்பட்டனர். பலரும் அவர்களிடம் பணம் கொடுத்து வேலைக்காக காத்திருந்தனர். இதனால் தமிழகம் முழுவதும் லஞ்சம் கொடுத்து சத்துணவு மையத்தில் வேலையில் சேர அரசியல்வாதிகளை பலர் சுற்றி வந்தனர். இதுபற்றிய செய்தி கடந்த சில நாட்களுக்கு முன் வெளிவந்தது. இந்த நிலையில், புதுக்கோட்டையை சேர்ந்த வெள்ளியம்மாள் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், “புதுக்கோட்டை மாவட்டத்தில் 265 சத்துணவு அமைப்பாளர்கள் மற்றும் 552 சமையல் உதவியாளர்களை நிரப்புவது தொடர்பாக செப்டம்பரில் அறிவிப்பு வௌியானது. நேர்முக தேர்வு அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற வாய்ப்புள்ளது. ஆளும்கட்சியினருக்கு வேண்டப்பட்டவர்கள் பலர் ஏற்கனவே பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. எனவே, புதுக்கோட்டை மாவட்டத்தில் சத்துணவு அமைப்பாளர்கள் மற்றும் சமையல் உதவியாளர்கள் பணியிடங்களை நிரப்புவது தொடர்பான அறிவிப்பை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார்.


இந்த மனு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி இந்த வழக்கில் அக்டோபர் 15ம் தேதி புதுக்கோட்டை கலெக்டர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். மனுதாரர் குறிப்பிட்டுள்ள சத்துணவு அமைப்பாளர் மற்றும் சமையல் உதவியாளர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக எந்த இறுதி முடிவையும் எடுக்க கூடாது என்று உத்தரவிட்டார். இந்த பரபரப்பான சூழ்நிலையில் சத்துணவு அமைப்பாளர்கள் உள்ளிட்ட பணியிடங்களுக்கான தேர்வை நிறுத்தி வைப்பதாக தமிழக அரசு திடீரென அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு முழுவதும் சமூக நலம் மற்றும் சத்துணவு திட்ட துறையில் ஏற்பட்டுள்ள சத்துணவு அமைப்பாளர், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் காலி பணியிடங்களை நிரப்புவதற்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் அறிவிக்கை வெளியிடப்பட்டு, விண்ணப்பங்கள் பெறப்பட்டு, நேர்காணல் உள்ளிட்ட தேர்வு பணிகள் நடைபெற உள்ளன.


இந்த பணிகளுக்கு மிக அதிக அளவில் மனு பெறப்படுவதால், நேர்காணல் தேர்வு பணிகளில் மனுதாரர்கள் அதிக எண்ணிக்கையில் கலந்து கொள்வதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனா நோய் தொற்று பரவல் முற்றிலும் நீங்காத நிலையில், நோய் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்குடன், சத்துணவு அமைப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான தேர்வு நடைமுறைகள் அரசால் நிறுத்தி வைக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. தமிழக அரசு தற்போது சத்துணவு காலிபணியிடத்தை நிரப்பும் பணியை நிறுத்தி வைத்துள்ளதாக அறிவித்துள்ளது. இதனால் வேலைக்காக அரசியல்வாதிகளிடம் பல லட்சம் ரூபாய் பணம் கொடுத்தவர்கள் ஏமாற்றமும் அதிர்ச்சியும் அடைந்துள்ளனர்.

2 comments:

  1. அனைத்து துறையிலும் முறைகேடு எக்ஸாம்பிள் பாலிடெக்னிக் பிஜேபி இதில் பிரிவு கணினி ஆசிரியர் தேர்வு முறைகேடு மின்வாரிய முறைகேடு ஊழல் அரசியல்வாதி அதிமுக ஆட்சி

    ReplyDelete
  2. எல்லாம் ஊழல் தான்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி