பள்ளிகள் மூடப்பட்டதால் இந்தியாவுக்கு பெரும் இழப்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 13, 2020

பள்ளிகள் மூடப்பட்டதால் இந்தியாவுக்கு பெரும் இழப்பு!

 


இந்தியாவில், பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளதால், எதிர்காலத்தில், 29.36 லட்சம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும். மாணவர்களின் திறனிலும் பாதிப்பு ஏற்படும்' என, உலக வங்கி எச்சரித்துள்ளது.


கொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து, நம் நாட்டில், மார்ச், 16ல் பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டன. அதன் பின், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.தற்போது ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்படவில்லை. வரும், 15ம் தேதியில் இருந்து பள்ளிகளை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. 


இறுதி முடிவை, அந்தந்த மாநிலங்கள் எடுக்க, அனுமதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், ஊரடங்கு உத்தரவுகளால், தெற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து, உலக வங்கி ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது; அதில் கூறியுள்ளதாவது:

பள்ளிகள் மூடப்பட்டிருப்பதால், மாணவர்கள் புதிதாக கற்க வேண்டியதை கற்க முடியாமல் போகிறது. ஏற்கனவே கற்றதில் சிலவற்றை மறக்கவும் வாய்ப்புள்ளது. 'ஆன்லைன்' வாயிலாக வகுப்புகள் நடத்தப்பட்டாலும், அதை அனைவரும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.


ஒரு மாணவருக்கு கிடைக்கும் பள்ளி படிப்பு வாய்ப்பு மற்றும் அவர்கள் கற்றதை அடிப்படையாக வைத்து, 'லேஸ்' எனப்படும், பள்ளி கற்றல் காலம் நிர்ணயிக்கப்படுகிறது. இந்த ஆண்டில், இதுவரை, ஐந்து மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.அதனால், ஒரு மாணவரின், 'லேஸ்' எனப்படும், பள்ளி கற்றல் காலம், இந்தாண்டில், 0.5 புள்ளிகள் குறைகின்றன. இந்தியாவில், சராசரியாக ஒரு மாணவரின் கல்வி கற்கும் ஆண்டின் எண்ணிக்கை, 6.5 புள்ளிகளாக உள்ளது; அது, தற்போது, 6.0 புள்ளிகளாக குறைகிறது.


இதனால், ஒரு மாணவன், எதிர்காலத்தில் வேலை பார்க்கும்போது கிடைக்கும் வருவாயில், குறைந்தபட்சம், 3.22 லட்சம் ரூபாயை இழக்க நேரிடும். அதாவது, அந்த மாணவர் எதிர்காலத்தில் பெறும் மொத்த வருவாயில், 5 சதவீதத்தை இழக்க நேரிடும்.தெற்காசியாவில் மட்டும், 39.1 கோடி மாணவர்கள், பள்ளிகளுக்கு செல்ல முடியாமல் உள்ளனர். அவர்கள் மூலம் எதிர்காலத்தில் கிடைக்க வேண்டிய வருவாயில், 45.54 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும். இது அதிகபட்சமாக, 64.55 லட்சம் கோடி ரூபாயாக இருக்கலாம்.


இதில் பெரும் பாதிப்பு, இந்தியாவில் தான் ஏற்படும். இந்தியாவுக்கு, 29.36 லட்சம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. அனைத்து நாடுகளுக்கும், தங்கள், ஜி.டி.பி., எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும். அத்துடன், இந்தியாவில், 55 லட்சம் மாணவர்கள் படிப்பை பாதியில் நிறுத்தும் அபாயமும் உள்ளது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

1 comment:

  1. இவர்களது ஆட்சியில் தான் பி.எட் கல்லூரிகளை தனியாருக்குத் தாரை வார்த்தார்கள். வயது வரம்பை 57 வரை உயர்த்தி பி.எட் படிக்கலாம் என்று அனைவரையும் பி.எட் கல்லூரிகளில் சொத்துக்களை விற்று பி.எட் படிக்க வைத்து பி.எட் கல்லூரிகளின் சேர்க்கையை உயர்த்தி அவர்களை வாழ வைத்தார்கள். தற்போது தகுதித் தேர்வு என்று ஒன்றைக் கொண்டுவந்து சமீப பாடத்திட்டத்தில் படித்த சிறுவயதினரை மட்டும் (மகத்தான மதிப்பெண் முறையைக் கொண்டுவந்து) வேலைக்கு அமர்த்தும் வகையில் கொண்டுவந்தார்கள். இதிலும் சில வருடங்களுக்கு முன்பு படித்தவர்களுக்கு தகுதித் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றும் பணி கிடைக்கவில்லை. இப்படியே 30 வயதைக் கடந்தவர்களை 40-க்கும் மேலாக ஆக்கிவிட்டு இப்போது நடுத்தெருவில் கொண்டுவந்து நிறுத்தியுள்ளார்கள். எதிர்காலத்தையே நாசமாக்கிவிட்டார்கள். இதில் பலர் நல்ல அனுபவங்களைக் கொண்டிருந்தாலும் நல்ல திறமையானவர்கள் என்று தனியார் பள்ளிகளில் அரசுப்பணிக் கனவோடு பணியாற்றிக் கொண்டிருந்தாலும் அவர்களின் எதிர்காலத்தையே கெடுத்துவிட்டார்கள். ஏன் இப்படி அனைத்திலும் வயிற்றில் அடிக்கிறார்கள்? ஏழைகளுக்கு கனவே அரசுப்பணி தான். அவர்களின் கனவைத் தகர்த்தால்???????

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி