அரியர் தேர்வுகளை ரத்து செய்ய முடியாது: யுஜிசி மீண்டும் திட்டவட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 19, 2020

அரியர் தேர்வுகளை ரத்து செய்ய முடியாது: யுஜிசி மீண்டும் திட்டவட்டம்

 


அரியர் தேர்வுகளை ரத்து செய்ய முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் பல்கலைக் கழக மானியக் குழு திட்டவட்டமாகக் கூறியுள்ளது.


தமிழகத்தில், கலை-அறிவியல், பொறியியல், எம்சிஏ படிப்புகளில் அரியர் பாடங்களுக்கு தேர்வுக் கட்டணம் செலுத்தி தேர்வு எழுத விண்ணப்பித்த அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது. அரசின் இந்த முடிவை ரத்து செய்யக்கோரி வழக்குரைஞர் ராம்குமார் ஆதித்தன், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி,   ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். 


இந்த வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்றம் தமிழக அரசு, பல்கலைகழக மானிய குழு (யுஜிசி), அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ) பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் தாக்கல் செய்த பதில்மனுவில், அரியர் தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்திய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்ற அறிவிப்பு விதிகளுக்குப் புறம்பானது என தெரிவித்திருந்தது. 


இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது பல்கலைக்கழக மானியக் குழு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் என  கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.


இந்த நிலையில், வழக்கு 20-ம் தேதி விசாரணைக்கு வரவிருக்கும் நிலையில், பல்கலைக்கழக மானியக் குழு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த பதில் மனுவில், பல்கலைக்கழகத்தின் அரியர் தேர்வுகளை ரத்து செய்ய முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


முன்னதாக, கடந்த மாதம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, அரியர் மாணவர்கள் தேர்ச்சி விவகாரத்தில் தமிழக அரசின் உத்தரவுக்கு ஆதரவு தெரிவித்து இந்த வழக்கில் தங்களையும் இணைத்துக் கொள்ள கோரி சில மாணவர்கள் தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு கவுன்சிலின் விதிகளுக்கு முரணான நிலைப்பாட்டை எடுக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தனர். 


மேலும் அரியர் தேர்வை ரத்து செய்த தமிழக அரசின் உத்தரவுக்கு ஆதரவாக வழக்கு தொடரும் மாணவர்களின் மொத்த அரியர் எண்ணிக்கை, 10 -ஆம் வகுப்பு முதல் அந்த மாணவர்களின் கல்வி தேர்ச்சி விவரங்கள் கேட்கப்படும் என எச்சரித்தனர். பொறியியல் படித்தவர்கள் "ஜொமாட்டோ' உள்ளிட்ட ஆன்லைன் உணவு விநியோக நிறுவனங்களில் பணியாற்றுவதாக வேதனை தெரிவித்த நீதிபதிகள், தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெற வேண்டும் என மாணவர்கள் எப்படி எதிர்பார்க்கலாம் என கேள்வி எழுப்பினர். பின்னர் இந்த வழக்கின் விசாரணையை வரும் நவம்பர் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி