அரசுப் பள்ளிகள் எப்படி மாற வேண்டும்? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 28, 2020

அரசுப் பள்ளிகள் எப்படி மாற வேண்டும்?

Thanks To : Hindu Tamil


அர்ச்சனாவின் அப்பா சக்திவேல் திண்டுக்கல்லில் சுமை தூக்கும் ஒரு தொழிலாளி. அம்மா ரேவதி நூறு நாள் திட்டத்தில் வேலை பார்ப்பவர். அர்ச்சனாவுக்கு மருத்துவக் கல்லூரிக் கலந்தாய்வுக்கான அழைப்பு வந்தது. முதல் நாளே சென்னைக்கு வந்தது குடும்பம். அன்றைய இரவை அவர்கள் நேரு விளையாட்டரங்கின் வாயிலில் கழித்தார்கள். அறை எடுத்துத் தங்கும் வசதி அவர்களிடத்தில் இல்லை. அர்ச்சனா ஓர் அரசுப் பள்ளி மாணவி. அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் ஒதுக்கீட்டால் பயனடைந்தவர். கலந்தாய்வுக்கு வந்த அரசுப் பள்ளி மாணவர்களிடையே ஓர் ஒற்றுமை இருந்தது. அரிகிருஷ்ணனின் தந்தை திருச்சியில் ஒரு மளிகைக் கடையில் வேலை பார்க்கிறார். தஞ்சை மாவட்டம் பூக்கொல்லை கிராமத்து மாணவி சகானாவின் தந்தை கணேசனும் தாயார் சித்ராவும் கூலித் தொழிலாளர்கள். சிவகங்கை மாவட்டம் அரியக்குடி அரசுப் பள்ளி மாணவி அமிர்தத்தின் பெற்றோர் ராமுவும் ராஜேஸ்வரியும் தட்டி முடைகிறார்கள். திருநெல்வேலி மாவட்டம் தென்காளம்புத்தூர் பகவதிக்கு அப்பா இல்லை; அம்மா சமுத்திரக்கனி விவசாயக் கூலித் தொழிலாளி; மாடு மேய்த்துக்கொண்டும் பால்கறந்து கொண்டும் நீட்டுக்குப் படித்தார் பகவதி.

இந்தப் பிள்ளைகளுக்கு மருத்துவப் படிப்பைச் சாத்தியப்படுத்திய உள் ஒதுக்கீட்டு மசோதாவானது சட்டமன்றத்தில் ஏக மனதாக நிறைவேறியது. ஆளுநர் உடனே கையெழுத்திடுமாறு எதிர்க்கட்சி போராட்டம் நடத்தியது. அரசு சம்பிரதாயங்களைப் புறக்கணித்து ஆணை பிறப்பித்தது. ஆளுநர் அனுமதி அளித்தார். இவர்கள் அனைவரும் குடிமைச் சமூகத்தின் நன்றிக்குரியவர்கள்.


இந்த ஆண்டு மொத்தம் 313 எம்பிபிஎஸ் இடங்களையும், 92 பிடிஎஸ் இடங்களையும், ஆக 405 இடங்களை அரசுப் பள்ளி மாணவர்கள் பெறுவார்கள். கடந்த ஆண்டு அரசுப் பள்ளி மாணவர்கள் பெற்ற இடங்கள் ஆறு என்பதோடு இதை ஒப்பிட்டுக் கொள்ளலாம். இந்த ஆண்டு பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வெழுதிய 8.41 லட்சம் மாணவர்களில், 3.44 லட்சம் பேர், அதாவது 41% அரசுப் பள்ளி மாணவர்கள். இவர்களில் வெறும் 405 பேர் மருத்துவக் கல்லூரி வாசலை மிதிப்பதற்கே ஒரு சமூகம் ஏன் இத்தனை பிராயாசைப்பட வேண்டும்?

தாராளமயமும் தனியார்மயமும்

நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் நாங்கள் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்தபோது தமிழகத்தில் எட்டுக் கல்லூரிகள்தான் இருந்தன. மருத்துவக் கல்லூரிகள் ஏழுதான். ஆனால், அப்போது உள் ஒதுக்கீடு எதுவும் தேவைப்படவில்லை. ஏனெனில், 95% பள்ளிகள் அரசுப் பள்ளிகளாகவோ, அரசு உதவி பெறும் பள்ளிகளாகவோ இருந்தன. தராசின் இந்தத் தட்டு எப்போது தன் எடையை இழந்தது? எண்பதுகளின் பிற்பகுதியில் தாரளமயத்துக்கான கதவு திறக்கலானது. சக்தியுள்ளவன் பிழைக்கக் கடவது என்றொரு சித்தாந்தமும் விற்பனைக்கு வந்தது. தனியார்மயம் திறமையைப் போற்றும், ஒழுங்கைப் பேணும் என்ற பிரச்சாரம் செல்லுபடியானது. அந்தக் காலகட்டத்தில்தான் கல்வியும் மருத்துவமும் தனியார் கைகளுக்கு மாறத் தொடங்கின.

பீடத்தில் தனியார் பள்ளிகள்

தனியார் பள்ளிகள் ஒரு பீடத்தின் மீது ஏற்றி வைக்கப்பட்டிருக்கின்றன. அந்த பீடத்தைப் பிரதானமாக மூன்று தூண்கள் தாங்குகின்றன. முதலாவது தூண் ஆங்கில மோகம். அரசுப் பள்ளிகள் தமிழில் பயிற்றுவித்தபோது அதற்கு மாற்றாக ஆங்கிலத்தில் போதித்தன தனியார் பள்ளிகள். ஆங்கிலமே அறிவு, ஆங்கிலம் பேசுதலே உயர்வு என்று அவை உரக்கச் சொல்லின. இதற்கு நேர்மாறாக உலகெங்கும் உள்ள கல்வியாளர்கள் தாய்மொழிக் கல்வியின் பெருமை பேசினார்கள். தாய்மொழிக் கல்வி நேரடியானது. அது சிந்திக்கும் ஆற்றலை வளர்க்கிறது. பிள்ளைகளை அவர்தம் கலாச்சாரத்தோடு இணைக்கிறது. தாய்மொழிக் கல்வியில் காலூன்றிய பிள்ளைகளுக்கு இரண்டாவது மூன்றாவது மொழிகள் கற்பது எளிதானது. தாய்மொழியில் படிக்கும் பிள்ளைகள் தன்மானம் மிக்கவர்களாக வளர்வார்கள். அறிவியல்ரீதியாக நிறுவப்பட்ட இந்தக் கருதுகோள்கள் எவையாலும் இந்து மாக்கடலைத் தாண்ட முடியவில்லை. ஆனால், கல்வி வணிகர்களின் ஆங்கில விற்பனை எந்த எதிர்க்குரலும் இன்றி இங்கே வெற்றிகரமாக நடந்தது.

தனியார் பள்ளிகளின் வெற்றிக்கான இரண்டாவது காரணம் மதிப்பெண் மோகம். கல்வியை மதிப்பெண்களால்தான் அளக்க வேண்டும் என்று ஒரு கருத்து வெற்றிகரமாக உருவாக்கப்பட்டது. மதிப்பெண்கள் உயர்கல்விப் படிப்பில் இடம் வாங்கித் தரும், விசா தரும், வேலை தரும், நல்லன எல்லாம் தரும் என்று பரப்புரைக்குப் பலன் இருந்தது. இதே மண்ணில்தான் ‘கல்வி என்பது நல்லவற்றையும் தீயவற்றையும் பகுத்துணரக் கற்பிக்க வேண்டும்’ என்று சொன்ன காந்தி வாழ்ந்தார். அவரையும் ஒரு பாடச் சிமிழுக்குள் அடைத்து மதிப்பெண்களாக மாற்றுகிற ரசவாதம் நம் கல்வித் தந்தைகளுக்குத் தெரிந்திருந்தது.

தனியார் பள்ளிகளின் பீடத்தைத் தாங்கும் மூன்றாவது தூணின் பெயர் டாம்பீகம். பல்வேறு கட்டணங்களில் பள்ளிகள் உருவாகிவிட்டன. சமூகத்தின் ஒரு படிநிலையில் வாழும் ஒருவர் தன் பிள்ளைகளை அதற்கு இயைந்த பள்ளியில் சேர்த்தாக வேண்டும். இல்லையெனில் அது அன்னாரது கௌரவத்துக்கு இழுக்காகிவிடும்.

கடந்த 30 ஆண்டுகளில் தனியார் பள்ளிகள் மிகுந்து வருகையில் அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கையோ குறைந்துவருகிறது. 1990-ல் கல்விக்காக அரசு செலவிட்டது 4%. 2019-ல் 3%. பள்ளிக் கல்வியை அரசு கட்டாயம் ஆக்கியிருக்கிறது. அதை இலவசமாகவும் வழங்குகிறது. நல்லது. ஆனால், அது இலுப்பைப்பூச் சர்க்கரையாக அல்ல, நயம் நாட்டுச் சர்க்கரையாகவும் இருக்க வேண்டும்.

உலகெங்கும் அரசுப் பள்ளிகள்

இந்தியாவில் தாரளமயம் தொடங்கியதன் உடன் நிகழ்வாகத் தனியார் பள்ளிகள் பெருகின என்று பார்த்தோம். ஆனால், இது முதலாளித்துவச் சித்தாந்தம் என்று கருதுவதிற்கில்லை. பல மேற்கு நாடுகளில் அரசுப் பள்ளிகள்தான் அதிகம். அங்கு கல்வி கற்றவர்கள்தான் உலகின் சிறந்த அறிவாளர்களாகத் திகழ்கிறார்கள். உலகம் உய்வதற்கான அறிவியல் கண்டுபிடிப்புகளை வழங்குகிறார்கள்.

நமது தனியார் பள்ளிக் கலாச்சாரம் பிள்ளைகளை வர்க்கரீதியாகப் பிரிக்கிறது. கற்றலின் எல்லையை மனனக் கல்விக்குள் சுருக்குகிறது. சிந்திக்கும் திறனை மட்டுப்படுத்துகிறது. கலாச்சாரப் பிணைப்பை, சமூக அக்கறையைக் குறைக்கிறது. இதற்கெல்லாம் மாற்றாக அரசுப் பள்ளிகள் இருக்க முடியும். இருந்தது. இப்போதைய அரசுப் பள்ளிகளை மேம்படுத்த வேண்டும். புதிய பள்ளிகளைத் திறக்க வேண்டும். பிள்ளைகளுக்கு நன்மையையும் தீமையையும் பகுத்துணரும் ஆற்றலையும் கல்வி வழங்க வேண்டும். அரசுப் பள்ளிகளோடு முறுக்கிக்கொண்டிருக்கும் நடுத்தர வர்க்கத்தினரை இங்கே மீண்டும் அழைத்துவர வேண்டும். அவர்கள்தான் பிள்ளைகளின் கல்வியில் அக்கறை செலுத்துவார்கள்; அது பள்ளிகளின் தரத்தை உயர்த்தும். அப்போது அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாகும். அதற்கு நீண்ட காலம் தேவைப்படலாம். அதுவரை உள் ஒதுக்கீட்டுக்கான அவசியம் இருக்கும். அதுவே வறுமையின் காரணமாக வாய்ப்பு மறுக்கப்பட்ட பிள்ளைகளுக்கு வழங்கும் நீதியாக அமையும்.

- மு.இராமனாதன், ஹாங்காங்கின் பதிவு பெற்ற பொறியாளர்.

தொடர்புக்கு: mu.ramanathan@gmail.com

10 comments:

  1. எச்சிகளாசிரியர் மற்றும் பரட்டையாசிரியைகள் களையெடுக்கப்பட வேண்டும்.. எல்லா பள்ளியிலும் இரண்டு குப்பை பொறுக்கி ஊன நாயிகள் உள்ளன. அடுத்தவரை நக்கி இளிப்பதே அந்த இழிகுறிகளின் வேலை.

    ReplyDelete
    Replies
    1. வார்த்தைகளில் வன்மம் இருந்தாலும்....கருத்து என்னவோ 100% உண்மை....உழைக்கத் தயாராகவும் திறமையாகவும் லட்சக்கணக்கானோர் வெளியில் இருக்கும் போது வகுப்பில் தூங்கும் ஆசிரியர்களையும்...ஆர்வமில்லாமல் பணப்பலன்களை மட்டுமே கருத்தில் கொண்ட ஆசிரியர்களையும் கண்ணெதிரே பார்க்கும் போது மனம் வலிக்கத்தான் செய்கிறது....
      என்ன செய்வது அவரவர் பாவத்தை அவரவரே சுமக்க கடவது.....

      Delete
  2. வேலைசெய்யாமல் சம்பளம் வாங்குபவர் அதிகம்

    ReplyDelete
  3. Part time teachers ku help panuga pls 🥺

    ReplyDelete
    Replies
    1. நாயே நீ எல்லாம் ஒரு part time teacher eppo paru pichai edukkarea mathiriyea help pannungeanu keattutu irukke nee ingea comment panna mattum help panniruvangala athan part time teachers pathi ethavadhu news vanthalea athukku keavalama nakkala comment panne oru group irukku ithu therintum marupadi help pannungea ingayea keattukittu irukke.nee ellam thirunthavea mattea.ille parttime teachers achingapaduthanum nu inthe name use pandre parathesi nayaa num theriyale.

      Delete
    2. Kandu pidichitaya peye 😃😃😃😃😃

      Delete
  4. பல காசுக்காக மட்டுமே ஆசிரியர் வேலை பார்க்கும் சிலர் சாதியை மதத்தை வளர்க்க மாணவர்கள் இடம் திணிக்க சிலர். ஆசிரியர் வேலையே தெரியாமல் சிலர் இப்படி பல ஆசிரியர்கள் உள்ள சமூகத்தில் இந்த மாணவர்கள் நலனுக்கான பணி செய்த ஆசிரியர் அனைவரையும் சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன். மாணவர் திறமை 50% ஆசிரியர் திறமை 50% இதுவே அந்த மாணவர்கள் வெற்றிக்கு சான்று. இதை எந்த பணியும் செய்யாமல் சம்பளம் மட்டுமே வாங்கி கொழுத்த பல ஆசிரியர் என்ற பெயரில் நடமாடும் பல சென்மங்களுக்கு சவுக்கடி

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி