இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வீடியோ கேம், பொம்மை தயாரிக்க வல்லுநர்கள், மாணவர்களுக்கு யுஜிசி அழைப்பு: ரூ.50 லட்சம் பரிசு வழங்கப்படும் என அறிவிப்பு. - kalviseithi

Jan 9, 2021

இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வீடியோ கேம், பொம்மை தயாரிக்க வல்லுநர்கள், மாணவர்களுக்கு யுஜிசி அழைப்பு: ரூ.50 லட்சம் பரிசு வழங்கப்படும் என அறிவிப்பு.

 


இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வீடியோ கேம்கள், பொம்மைகள் தயாரிக்க மாணவர்களுக்கு யுஜிசி அழைப்பு விடுத்துள்ளது.

இதுதொடர்பாக பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி), அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:


இந்தியாவில் விளையாட்டு பொம்மை சந்தை 1.5 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. இவை பெரும்பாலும் இறக்குமதி சந்தையின் ஆதிக்கத்திலேயே உள்ளது. இந்த பொம்மைகளில் பெரும்பாலானவை இந்திய பாரம்பரியம், நாகரிகம் மற்றும் மதிப்பு அமைப்புகளை பிரதிநிதித்துவப் படுத்துவதில்லை.

​‘டாய் கேத்தான்-2021’

எனவே, பொம்மை இறக்குமதியை குறைக்கவும், இந்திய நாட்டின் நாகரிகம், வரலாறு, கலாச்சாரம், புராணங்கள் அடிப்படையில் பொழுதுபோக்கு அம்சங்களை உருவாக்கவும் ‘ஆத்மநிர்பர்பாரத் அபியான்’ என்ற திட்டம்அண்மையில் தொடங்கப்பட்டது. அதன்படி, நாட்டின் கலாச்சாரங்களை கருத்தில்கொண்டு விளையாட்டு பொம்மைகள், வீடியோ கேம்கள், விளையாட்டு கருத்துகளை உருவாக்க மத்திய கல்வி அமைச்சகம் ‘டாய் கேத்தான்-2021’ என்ற போட்டியை ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி, அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமம், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், சிறு, குறு தொழில்துறை அமைச்சகம் உள்ளிட்ட அமைச்சகங்கள் இணைந்து ‘டாய் கேத்தான்’ நிகழ்ச்சியை வரும் பிப். 27-ம் தேதி முதல் நடத்த உள்ளன. இதற்கு மாணவர்கள், ஆசிரியர்கள், ஸ்டார்ட்-அப்கள், பொம்மை வல்லுநர்கள், தொழில் வல்லுநர்கள்  உள்ளிட்டோர் தங்களது புதுமையான பொம்மைகள் மற்றும் விளையாட்டு கருத்துகளை சமர்ப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஜன.20-க்குள் விண்ணப்பம்

அதன்படி, விருப்பமுள்ள மாணவர்கள் மற்றும் வல்லுநர்கள் ஜன. 20-ம் தேதிக்குள் https://toycathon.mic.gov.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். இதில் வெற்றி பெறும் நபர்களுக்கு ரூ.50 லட்சம் பரிசு வழங்கப்படும். இதைத்தொடர்ந்து, சிறந்த பொம்மைகள் மற்றும் விளையாட்டு கருத்துகள் ‘டாய் கேத்தா’னின் தேசிய பொம்மை கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படும்.

எனவே, உயர்கல்வி நிறுவனங்கள் தங்களின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் ‘டாய் கேத்தான்’ போட்டி குறித்து தெரியப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி