9, 11-ம் வகுப்புகளும் தொடங்க இருப்பதால் பள்ளிகளில் கூடுதல் கவனம் அவசியம்: கல்வித் துறை அதிகாரிகள் அறிவுறுத்தல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 1, 2021

9, 11-ம் வகுப்புகளும் தொடங்க இருப்பதால் பள்ளிகளில் கூடுதல் கவனம் அவசியம்: கல்வித் துறை அதிகாரிகள் அறிவுறுத்தல்

 


தமிழகத்தில் 10, 12-ம் வகுப்புகளுக்காக பள்ளிகள் ஏற்கெனவே திறக்கப்பட்டுள்ள நிலையில், 9, 11-ம் வகுப்புகளும் வரும் 8-ம் தேதி முதல் செயல்பட உள்ளன. இதனால், பள்ளிகளில் கரோனா தடுப்பு நெறிமுறைகளில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம் என்று பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் கரோனா பொது முடக்கம் காரணமாக கடந்த மார்ச் முதல் பள்ளிகள் மூடப்பட்டன. பொதுத் தேர்வு எழுதும் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் ஜனவரி 19-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு, தற்போது வகுப்புகள் நடந்து வருகின்றன. கரோனா தடுப்பு நடவடிக்கையாக அவர்களுக்கு பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு, பள்ளியில் அவர்கள் பின்பற்றி வருகின்றனர்.


கிருமிநாசினியால் கைகளை சுத்தம் செய்த பிறகே பள்ளி வளாகத்துக்குள் அவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். வகுப்பறையில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் 25 பேர் மட்டுமே உட்கார வைக்கப்படுகின்றனர்.

அனைவரும் வீட்டில் இருந்து கட்டாயம் குடிநீர், சாப்பாடு எடுத்துவர வேண்டும். உணவுப் பொருள் உட்பட எதையும் மற்றவர்களுடன் பகிரக் கூடாது. பிறரை தொட்டுப் பேசக் கூடாது. கைகுலுக்கக் கூடாது என்பன உள்ளிட்ட பல் வேறு அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன.

10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்தும் 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கும் நிர்ணயிக்கப்படும்.

வாரத்தில் 6 நாட்கள் பள்ளிகள் செயல்படும். பள்ளிகள் காலை 9.30 முதல் மாலை 4.30 வரை செயல்படும். மாணவர்கள் காலைபள்ளிக்கு வந்ததும் நுழைவுவாயில் மூடப்படும். பள்ளி முடியும் வரைஎக்காரணம் கொண்டும் மாணவர்கள் யாரும் வெளியே செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். இறைவணக்க கூட்டம், விளையாட்டுப் பயிற்சி போல கூட்டம் கூடும் நிகழ்வுகள் எதுவும் இருக்காது.

10 12-ம் வகுப்புகள் போல, 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கும் முதல் 2 நாட்களுக்கு வகுப்புகள் ஏதும் நடத்தப்படாது. அதற்கு பதிலாக உளவியல் பயிற்சிகள் அளிக்கப்படும். பள்ளிக்கு வருமாறு எந்த மாணவரையும் ஆசிரியர்கள் கட்டாயப்படுத்த மாட்டார்கள்.

ஏற்கெனவே 10, 12-ம் வகுப்புகள் நடந்து வரும் நிலையில், 9,11-ம்வகுப்புகளும் தொடங்கப்பட உள்ளதால், நெறிமுறைகளில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ வழிகாட்டு நெறிமுறைகள் ஓரிரு நாளில் வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

2 comments:

  1. Vaguppu illatha schoola Enna pannuvanga

    ReplyDelete
  2. Students அதிகம் உள்ள பள்ளிகள் எப்படி 25 மாணவர்களை உட்கார வைக்க முடியும். இடம் இல்லையே

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி