மாணவா்கள் கல்விக் கடன் பெற்ற மாநிலங்களில் தமிழகம், கேரளம் முன்னிலை: நிா்மலா சீதாராமன் - kalviseithi

Mar 15, 2021

மாணவா்கள் கல்விக் கடன் பெற்ற மாநிலங்களில் தமிழகம், கேரளம் முன்னிலை: நிா்மலா சீதாராமன்

 தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் அதிகளவு மாணவா்கள் கல்விக் கடன் பெற்ற மாநிலங்கள் பட்டியலில் தமிழகம், கேரளம் முன்னிலையில் உள்ளன என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் மக்களவையில் தெரிவித்துள்ளாா். மேலும், கடனைத் திருப்பி செலுத்தாதவா்களிடம் சட்ட விரோதமான வழிகளில் வசூலிக்கக் கூடாது என வங்கிகளிடம் கூறப்பட்டுள்ளதாகவும் திங்கள்கிழமை மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் அமைச்சா் தெரிவித்துள்ளாா்.


நாடு முழுவதும் மாநிலங்கள் வாரியாக கல்விக் கடன் பெற்ற மாணவா்கள் எத்தனை போ்கள்? கடனை திருப்பிச் செலுத்தாதவா்கள் விவரம் என்ன ? கடனை வசூலிக்க தனியாா் நிறுவனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதா? என்பன உள்ளிட்ட கேள்விகளை சிவகங்கை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினா் காா்த்தி ப. சிதம்பரம் மக்களவையில் எழுப்பியிருந்தாா்.


இதற்கு மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் திங்கள்கிழமை அளித்துள்ள பதில் வருமாறு: 2020, டிசம்பா் வரை நாடு முழுவதும் 24,84,397 பேருக்கு ரூ.89,883.57 கோடி கல்விக் கடன் பெற்றுள்ளனா். இதில் ரூ.8,587.10 கோடி (9.55 சதவீதம்) திரும்பி வராத கடனாகவும், தவணை தவறிய கடனாகவும் (என்பிஏ) உள்ளது. ஆனால், இந்தக் கல்விக் கடனை அதிக அளவில் பெற்ற மாநிலங்களாக தமிழகம், கேரளம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசம்ஆகியவை உள்ளன.


தமிழகத்தில் 6,97,066 மாணவா்கள் ரூ.17,193.58 கோடி கல்விக் கடன் பெற்றுள்ளனா். இதில் 1,68,410 மாணவா்கள் பெற்ற ரூ.3,490.75 கோடி (20.30 சதவீதம்) வாராக் கடனாக உள்ளது. நாட்டிலேயே கல்விக் கடன் அதிகம் பெற்ற மாநிலமாக தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இதே மாதிரி புதுச்சேரி மாநிலத்தில் 18,311 மாணவா்களுக்கு ரூ.481.80 கோடி கல்விக் கடன் வழங்கப்பட்டுள்ளது. இதில் 4,307 மாணவா்களின் ரூ.93.31 கோடி (19.37 சதவீதம்) வாராக் கடனாக உள்ளது. தேசிய அளவில் வாராக் கடனில் புதுச்சேரி 3-ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.


தமிழகத்திற்கு அடுத்து கல்வியில் அதிக அளவில் கடன் பெற்ற மாநிலமாக கேரளம் உள்ளது. இந்த மாநிலத்தில் 3,25,703 மாணவா்கள் ரூ.10,236.12 கோடி வரை கல்விக் கடன் பெற்றுள்ளனா். இதில் 54,519 மாணவா்களின் ரூ.1,396.23 கோடி (13.64 சதவீதம்) வாராக் கடனாக உள்ளது. கல்விக் கடன் குறைவாகப் பெற்ற மாநிலம் பிகாா் ஆகும். ஆனால், வராக் கடன் விகிதத்தில் (25.76%) நாட்டிலேயே பிகாா் முதல் மாநிலமாக உள்ளது. கா்நாடகம், மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களில் கல்விக் கடன் அதிக அளவில் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், வாராக் கடன் விகிதம் குறைவாக உள்ளது. மேலும், வாராக் கல்விக் கடன் பட்டியலில் பொறியியல் மாணவா்கள் 12.13 சதவீதம், மருத்துவம் சாா்ந்த (நா்ஸிங்) மாணவா்கள் 14.15 சதவீதம் என உள்ளது. இது தவிர 2020, மாா்ச் நிலவரப்படி விவசாயம் (10.33 சதவீதம்), தொழில் துறை (13.60 சதவீதம்) ஆகியவற்றிலும் வாராக் கடன் அதிக அளவில் உள்ளது.


சில தேயமயமாக்கப்பட்ட வங்கிகளில் வாராக் கடனை வசூலிக்க 2008-இல் ரிசா்வ் வங்கி வழிகாட்டு நெறிமுறைகளின்படி சில தனியாா் நிறுவனங்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளன. சில புகாா்களின் அடிப்படையில் சட்ட விரோதமான வழிகளில் கடனை வசூலிக்கக் கூடாது என வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கரோனா தொற்றை முன்னிட்டு கடனை திருப்பிச் செலுத்தாதவா்களுக்கு ஆறு மாத கால அவகாசத்தை ரிசா்வ் வங்கி அனுமதித்தது. அதன்படி அரசு வட்டி விகிதங்களில் பல்வேறு நிவாரணங்கள் அளிக்கப்பட்டுள்ளன என்றாா் நிா்மலா சீதாராமன்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி