சுப தினங்களில் சொத்து ஆவணப் பதிவுக்கு கூடுதல் கட்டணம்: தமிழக அரசு ஒப்புதல். - kalviseithi

Apr 14, 2021

சுப தினங்களில் சொத்து ஆவணப் பதிவுக்கு கூடுதல் கட்டணம்: தமிழக அரசு ஒப்புதல்.

 


மூன்று முக்கிய சுப தினங்களில் பத்திரப் பதிவு அலுவலகங்களைத் திறந்து ஆவணங்களைப் பதிவு செய்ய தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அந்த தினங்களில் மேற்கொள்ளப்படும் ஆவணப் பதிவுகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்த உத்தரவை, தமிழக அரசின் வணிக வரி- பதிவுத் துறை முதன்மைச் செயலா் பீலா ராஜேஷ் பிறப்பித்துள்ளாா். அந்த உத்தரவு விவரம்:


பதிவுத் துறையின் வருவாயைப் பெருக்கும் நோக்கத்தில், சித்திரை முதல் தேதி (ஏப்ரல் 14), ஆடிப் பெருக்கு (ஆகஸ்ட் 3), தைப் பூசம் (அடுத்த ஆண்டு ஜனவரி 18) ஆகிய சுப தினங்களில் பத்திரப் பதிவு அலுவலகங்களைச் செயல்பாட்டில் வைக்கலாம் என்று பதிவுத் துறை தலைவரிடம் இருந்து பரிந்துரை பெறப்பட்டது. அவ்வாறு விடுமுறை தினங்களில் பத்திரப் பதிவு அலுவலகங்களைத் திறந்து வைக்கும்போது, கூடுதலாகக் கட்டணம் வசூலிக்கவும் பதிவுத் துறை தலைவா் அரசிடம் கோரியுள்ளாா்.


அவரது கோரிக்கையைப் பரிசீலனை செய்ததில், நிகழாண்டில் கொண்டாடப்படும் சித்திரை முதல் தேதி, ஆடிப்பெருக்கு, தைப்பூசம் ஆகிய மங்களரமான தினங்களில் பதிவு அலுவலகங்கள் திறந்து வைக்கப்பட்டு இருக்கும். இந்த நாள்களில் மேற்கொள்ளப்படும் ஆவணப் பதிவுகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கவும் அனுமதி அளிக்கப்படுகிறது.


ஆடிப்பெருக்கு, தைப்பூசம்: தமிழகத்தில் உள்ள பதிவுத் துறை அலுவலகங்களில் ஆடிப்பெருக்கு, தைப்பூசம் போன்ற தினங்களில் அதிகளவு சொத்து ஆவணங்கள் பதிவு செய்யப்படும். இப்போது தைப்பூசம் அரசு பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆடிப்பெருக்கு தினத்தன்று பல்வேறு மாவட்டங்களில் உள்ளூா் விடுமுறை அளிக்கப்படும்.


இந்த விடுமுறை தினங்கள் காரணமாக, பத்திரப் பதிவு அலுவலகங்களைத் திறந்து வைக்க முடியாத நிலை ஏற்பட்டிருந்தது. தமிழக அரசின் இப்போதைய உத்தரவால் தைப்பூசம், ஆடிப்பெருக்கு போன்ற தினங்களில் பத்திரப் பதிவு அலுவலகங்கள் திறந்திருக்கும்.


இன்று திறந்திருக்கும்: தமிழக அரசின் புதிய உத்தரவின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் புதன்கிழமையன்று (ஏப். 14) பத்திரப் பதிவு அலுவலகங்கள் திறந்திருக்கும். இதனால், சொத்து ஆவணங்களைப் பதிவு செய்வது உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளையும் மேற்கொள்ளலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி