KV பள்ளிகளில் 2-ம் வகுப்பு முதல் சேர விண்ணப்பிக்கலாம்: நாளை கடைசித் தேதி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 14, 2021

KV பள்ளிகளில் 2-ம் வகுப்பு முதல் சேர விண்ணப்பிக்கலாம்: நாளை கடைசித் தேதி

 


கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 2021- 22ஆம் கல்வி ஆண்டில் 2 மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்புகளில் சேர விண்ணப்பிப்பதற்கு நாளை (ஏப்ரல் 15) கடைசித் தேதியாகும். இதற்கு கே.வி. இணையதளத்தில் உள்ள சேர்க்கை விதிமுறைகளைப் படித்துவிட்டு, பள்ளிகளுக்கே நேரடியாகச் சென்று பதிவு செய்ய வேண்டும்,

தற்போது நாடு முழுவதும் 1,247 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் இயங்கி வருகின்றன. மத்திய அரசின் கீழ் இந்தப் பள்ளிகள் இயங்கி வருகின்றன.


இதற்கிடையே கே.வி. பள்ளிகளில் ஒன்றாம் வகுப்புக்கான விண்ணப்பப் பதிவு ஏப்ரல் 1-ம் தேதி தொடங்கி, நடைபெற்று வருகிறது. இதற்கு பெற்றோர்கள் ஏப்ரல் 19-ம் தேதி மாலை 7 மணி வரை https://kvsonlineadmission.kvs.gov.in என்ற இணையதளம் மூலமாகவும், ஆண்ட்ராய்ட் செல்பேசி செயலி வாயிலாகவும் பதிவு செய்யலாம்.

இந்நிலையில் இரண்டு மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு கடந்த 8-ம் தேதி தொடங்கியது. கே.வி. இணையதளத்தில் உள்ள சேர்க்கை விதிமுறைகளைப் படித்துவிட்டு, பள்ளிகளுக்கே நேரடியாகச் சென்று பெற்றோர்கள் பதிவு செய்து வருகின்றனர்.

காலியாக உள்ள இடங்களின் அடிப்படையில் பள்ளிகளில் நாளை (15.04.2021) மாலை 4 மணி வரை விண்ணப்பப் பதிவு நடைபெறும். ஏப்ரல் 19-ம் தேதி மாலை 4 மணிக்குத் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் பட்டியல் வெளியாகும். ஏப்ரல் 20 முதல் 27-ம் தேதி வரை இவர்களுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும்.


2 முதல் 8-ம் வகுப்பு வரையான மாணவர் சேர்க்கைக்கு எவ்வித நுழைவுத் தேர்வும் நடத்தப்படாது. முன்னுரிமை அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். மாணவர் இடங்களைவிட விண்ணப்பங்கள் அதிகமாக வந்தால் குலுக்கல் முறையில் மாணவர்களுக்கான இடங்கள் தேர்வு செய்யப்படும்.

9-ம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு நடத்தப்படும். அதில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் இடங்கள் வழங்கப்படும். இந்தி, ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் தலா 20 மதிப்பெண்கள் என மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு ஒரு தேர்வு நடத்தப்படும். ஒவ்வொரு பாடத்திலும் மாணவர்கள் குறைந்தபட்சமாக 33% மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டியது அவசியம்.

10-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியான பிறகு, 11-ம் வகுப்புக்கு மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021-22ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை  அட்டவணையின்படி https://kvsangathan.nic.in/ என்ற இணையதளத்தில் 11-ம் வகுப்பில் சேர்வதற்கான படிவங்களைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

கூடுதல் விவரங்களுக்கு: https://kvsangathan.nic.in/

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி