அரபிக்கடலில் உருவானது டவ்டே புயல்...! - kalviseithi

May 15, 2021

அரபிக்கடலில் உருவானது டவ்டே புயல்...!

 அரபிக் கடலில் மையம் கொண்டிருந்த, காற்றழுத்த தாழ்வு மண்டலம், 'டவ்டே' புயலாக உருவானது. இதன் காரணமாக, தமிழகத்தில் 10 மாவட்டங்கள், 'அலர்ட்' செய்யப்பட்டு உள்ளன. இடி, மின்னலுடன் கன மழை பெய்யும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.


இது தொடர்பாக, சென்னை வானிலை ஆராய்ச்சி மையம், நேற்று வெளியிட்ட அறிவிப்பு: லட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடலில் நிலைகொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, மேலும் வலுவடைந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக லட்சத்தீவு பகுதியில் நிலை கொண்டுள்ளது. அது, இன்று புயலாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புயலுக்கு, மியான்மர் வழங்கியுள்ள, 'டவ்டே' என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.டவ்டே புயல், கேரளா, கர்நாடகா கடலோர பகுதிகள், மஹாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களை நோக்கி நகரும் என 

எதிர்பார்க்கப்படுகிறது.

சூறைக்காற்று வீசும்


இதன் காரணமாக, தமிழகத்தில் நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், அதி கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த மாவட்டங்களில் மணிக்கு, 40 கி.மீ., வேகத்தில் சூறைக்காற்று வீசலாம். இதையடுத்து, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில், கன முதல் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்து, திருப்பூர், நாமக்கல், சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. பிற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம். 

இதில், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, திருநெல்வேலி, துாத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில், நாளை மறுதினம் வரை கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.


28 செ.மீ., மழை


நேற்று காலை, 8:30 மணி வரையிலான 24 மணி நேரத்தில், கன்னியாகுமரி மாவட்டம், இரணியலில், 28; குழித்துறையில், 11; பேச்சிப்பாறையில், 9; தக்கலையில், 8; கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில், 7 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.


மீனவர்களுக்கு எச்சரிக்கை


குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு, 60 கி.மீ., வேகத்திலும், தென்கிழக்கு அரபிக்கடல், கேரள கடலோர பகுதி, மாலத்தீவு பகுதிகளில் மணிக்கு, 55 கி.மீ., வேகத்திலும் சூறைக்காற்று வீசும்.மேலும், இப்பகுதிகளில் சூறைக்காற்றின் வேகம் மணிக்கு, 90 கி.மீ.,யாக அதிகரிக்கும் என்பதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.


சென்னையில்...


சென்னையை பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்துக்கு, வானம் மேகமூட்டமாக காணப்படும். நகரின் சில பகுதிகளில், இடியுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை, 36 டிகிரி செல்ஷியசாக இருக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


ராமேஸ்வரம் மீனவர்களுக்கு தடை


அரபிக்கடலில் புயல் உருவாவதால், ராமேஸ்வரம் நாட்டுப்படகு மீனவர்கள், மீன் பிடிக்கச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.லட்சத்தீவு, தென் கிழக்கு அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளதால், மணிக்கு 40 முதல், 50 கி.மீ., வேகத்தில் சூறைக்காற்று வீசி, கடலில் கொந்தளிப்பு ஏற்படும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தி கடலில் கொந்தளிப்பு ஏற்படும் என்பதால், ராமேஸ்வரம், தனுஷ்கோடி, பாம்பன் நாட்டுப்படகு மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும், விசைப்படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைக்கவும் மீன்வளத் துறை அறிவுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி