பிரச்சினைக்குரிய சிபிஎஸ்இ பள்ளியை மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவர ஆலோசனை: அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி - kalviseithi

May 26, 2021

பிரச்சினைக்குரிய சிபிஎஸ்இ பள்ளியை மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவர ஆலோசனை: அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

 

பிரச்சினைக்குரிய சிபிஎஸ்இ பள்ளியை மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவருவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது எனப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று கரோனா நோய்த் தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பங்கேற்று, கருத்துரை வழங்கினார்.


அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, ''சென்னையில் மாணவிகளுக்குப் பாலியல் ரீதியாகத் தொந்தரவு அளித்த தனியார் பள்ளி ஆசிரியர் குறித்து, மாவட்டக் கல்வி அலுவலர் மூலம் துறை ரீதியான விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அதற்குக் கல்வித் துறை சார்பில், குழு அமைத்து ஓரிரு தினங்களில் விளக்கம் அளிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் ஆசிரியரை இடைநீக்கம் செய்துள்ளது. இதையடுத்து போலீஸாரால் அந்த ஆசிரியர் கைது  செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு, அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

பிரச்சினைக்குரிய சிபிஎஸ்இ பள்ளியை மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவருவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும். பிளஸ் 1 வகுப்பில் மாணவர்கள் குரூப்பைத் தேர்வு செய்ய பத்தாம் வகுப்பு மதிப்பெண்கள் தேவை. பத்தாம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ் என்ற நிலையில், எப்படி மதிப்பெண் வழங்குவது என்பது குறித்த ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. அதன் பிறகு பிளஸ் 1 சேர்க்கை குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

தற்போது தமிழக அரசு கரோனாவைக் கட்டுப்படுத்துவதில் முழு கவனம் செலுத்தி வருகிறது. கடந்த காலங்களில் நியமிக்கப்பட்ட பகுதி நேர ஆசிரியர்களை, நிரந்தர ஆசிரியராக நியமனம் செய்வது குறித்து வரும் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும். கருப்புப் பூஞ்சை நோய்க்கான மருந்துகள் குறித்து மாநில சுகாதாரத் துறை, மத்திய அரசிடம் கேட்டுள்ளது'' என்று அமைச்சர் அன்பில் மகேஸ்  பொய்யாமொழி தெரிவித்தார்.

பின்னர், தஞ்சாவூர் மேம்பாலம் அரசு காதுகேளாதோர் பள்ளியில் கரோனா தடுப்பூசி முகாமினையும், அரசு இராசாமிராசுதார் மருத்துவமனையில் புதிதாகத் தொடங்கப்பட்ட கரோனா சிகிச்சை மையத்தையும் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

1 comment:

  1. பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணிநிரந்தரம் என்ற ஒரு விடிவு தாருங்கள் கல்வித்துறை அமைச்சரே(அன்பில் மகேஷ்) ஐயா.எங்களுக்கு மே மாதம் ஊதியமின்றி வாழ்வாதாரம் கேள்வி குறியாக இருக்கு.பல இன்னல்கள் கடந்து வந்து இப்பொழுது" கொரோனா" என்னும் உயிர்கொள்ளி நோயையும் சந்திக்கிறோம்.ஒன்பது வருடம் கடந்து ஆயிற்று.மிக மோசமான நிலை.நிரந்திர ஆசிரியர்கள் வேலையின்றி முழு சம்பளம் பெறுகிறார்கள் நாங்களும் இறைவன் படைப்பில் மனிதர்கள் தான்.என்ன பாவம் செய்தோம்.16,000 மேல் இருந்த எங்களில் இப்பொழுது 12,000 கீழ்தான் இருக்கிறோம்.எனவே தையை கூர்ந்து கேட்கிறேன் விரைவில் இதை பரிசீலனை செய்து எங்களை காபாற்றுங்கள்.எல்லா பிரச்சினைக்கும் விடை கிடைக்க நீங்கள்"கொரோனா"எதிர்த்து பணி செய்ய உங்களுக்கு உடல்,ஆரோக்கியம் நன்றாக இருக்க வேண்டும் என்று "இறைவனை" மனமார்ந்து வேண்டுக்கிறேன்.😔😔😔🙏🙏🙏🙏

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி