புதிய கல்விக் கொள்கை ஏற்க முடியாது தமிழகத்துக்கு நீட் தேர்வு தேவையில்லை : தமிழக அமைச்சர்கள் மத்திய அரசுக்கு பதில் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 24, 2021

புதிய கல்விக் கொள்கை ஏற்க முடியாது தமிழகத்துக்கு நீட் தேர்வு தேவையில்லை : தமிழக அமைச்சர்கள் மத்திய அரசுக்கு பதில்

 

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படிக்கும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு, மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வு என்னும் நீட் தேர்வு, ஜெஇஇ உள்ளிட்ட தேர்வுகளை நடத்துவது தொடர்பாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் டெல்லியில் நேற்று ஆய்வுக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ்பொக்ரியால் மற்றும் அமைச்சர்கள், துறை செயலாளர்கள் ,  கல்வியாளர்கள் கலந்து கொண்டனர். இதில், காங்கிரஸ் தலைவர் சோனியா உள்பட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கல்வித்துறை அமைச்சர்கள், துறை செயலாளர்கள் பங்கேற்றனர். தமிழகத்தின் சார்பில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி,பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழக முதல்வரின் தனிச் செயலாளர் உதயசந்திரன், இரண்டு கல்வித்துறைகளின் செயலாளர்கள், பள்ளி கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் ஆகியோர் பங்கேற்றனர். 


சென்னை  தலைமைச் செயலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த காணொலி கூட்ட அரங்கில் மேற்கண்ட அமைச்சர்கள் செயலாளர்கள் பங்கேற்று அதன் மூலம் தங்கள் கருத்துகளை பதிவு செய்தனர். அதில் முக்கியமாக நீட் தேர்வு வேண்டாம்என்று தெரிவிக்கப்பட்டது.  இந்த கூட்டத்துக்கு பிறகு அமைச்சர்கள் பொன்முடி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் நிருபர்களை சந்தித்து கூட்டத்தில் தெரிவித்த கருத்துகள் பற்றி கூறினர். உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறுகையில், ‘‘தேசிய தேர்வு முகமை இந்தியாவில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கான நீட் தேர்வை  நடத்துகிறது. தமிழகத்துக்கு நீட் தேர்வே வேண்டாம் என்பதுதான் எங்கள் கருத்து. இது குறித்து ஏற்கெனவே தமிழகத்தின் சார்பில்  இரண்டு மசோதாக்கள் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த கல்வி ஆண்டு முதல் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.இதை தமிழகம் ஏற்காது என இந்த கூட்டத்தின் மூலம் தெரிவித்துள்ளோம்’’ என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். 


அவரைத் தொடர்ந்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறுகையில், ‘‘ சிபிஎஸ்இ மாணவர்களுக்கு 12ம் வகுப்பு தேர்வு நடத்துவது தொடர்பாக தமிழக அரசின் கருத்தை 25ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் கலந்து பேசி தமிழகத்தின் நிலைப்பாட்டை தெரிவிப்போம். தமிழகத்தில் பிளஸ்2 தேர்வு கண்டிப்பாக நடந்தே தீரும்’’ என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.


தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிக்கை: இக்கூட்டத்தில் பேசிய உயர்கல்வித் துறை அமைச்சர், தமிழகத்திற்கு நீட்  தேர்வு கூடாது என்றும்,வழக்கம் போல பன்னிரெண்டாம் வகுப்பு இறுதித்தேர்வு மதிப்பெண் அடிப்படையிலே மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கு சேர்க்கை நடைபெற வேண்டும் என்றும் உறுதிபடத் தெரிவித்தார். உயர்கல்வித் துறை அமைச்சரின் இக்கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டு, தமிழக அரசு தனியே நீட் தேர்வை மாநில அளவில் நடத்த இருப்பதாக சில ஊடகங்களில் செய்தி வந்துள்ளது.  இது முற்றிலும் தவறானது ஆகும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி