அரசுப்பள்ளியில் திடீரென்று ஆசிரியராக மாறி மாணவர்களுக்கு பாடம் எடுத்த கலெக்டர் - ஆசிரியர்களுக்கு அறிவுரை - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Jun 25, 2021

அரசுப்பள்ளியில் திடீரென்று ஆசிரியராக மாறி மாணவர்களுக்கு பாடம் எடுத்த கலெக்டர் - ஆசிரியர்களுக்கு அறிவுரை

 

அரசுப் பள்ளி மாணவிகளுக்கு நடப்புக் கல்வியாண்டுக்கான விலையில்லாப் பாடப் புத்தகங்களை வழங்கிய திருப்பத்தூர் ஆட்சியர் அமர் குஷ்வாஹா, மாணவிகளுக்குக் கணிதப் பாடம் நடத்தி சிறிது நேரம் ஆசிரியராக மாறியது சுவாரசியத்தை ஏற்படுத்தியது.


பள்ளி மாணவிகளுக்கு 2021- 2022ஆம் கல்வி ஆண்டுக்கான விலையில்லாப் பாடப் புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி திருப்பத்தூர் மீனாட்சி அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று (ஜூன் 24) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், பள்ளித் தலைமை ஆசிரியை செல்வி வரவேற்றார். திருப்பத்தூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மார்ஸ் முன்னிலை வகித்தார். மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தலைமை வகித்து, நடப்பாண்டுக்கான விலையில்லாப் பாடப் புத்தகங்களை வழங்கினார்.


அதையடுத்து அவர் பேசியதாவது:


''கரோனா முன்னெச்சரிக்கை மற்றும் அரசின் நிலையான வழிகாட்டுதல் அடிப்படையில் விலையில்லாப் பாடப் புத்தகங்களை மாணவ, மாணவிகளுக்கு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திருப்பத்தூர் வருவாய் மாவட்டத்தில் தொடக்கப் பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளி என மொத்தம் 799 பள்ளிகள் உள்ளன.


இப்பள்ளிகளைச் சேர்ந்த 1 லட்சத்து 27 ஆயிரத்து 138 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லாப் பாடப் புத்தகங்கள் இன்று முதல் விநியோகம் செய்யப்பட உள்ளன. மாணவர்களின் பெற்றோர்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்துப் பாடப் புத்தகங்களைப் பள்ளியில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


பாடப் புத்தகங்களை வாங்க வரும் பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கு உடல் வெப்பப் பரிசோதனை, காய்ச்சல் பரிசோதனை செய்து அதன் பிறகு பள்ளிக்குள் அனுமதிக்க வேண்டும். சமூக இடைவெளியைப் பின்பற்றி ஒரு நாளைக்குத் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளியில் 50 முதல் 60 மாணவர்களுக்கும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஒரு நாளைக்கு 200 மாணவர்கள் வீதம் விலையில்லாப் பாடப் புத்தகங்களை வழங்க வேண்டும். இதை அந்தந்தப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்துகொள்ள வேண்டும்.


மேலும், ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்களைத் தொடர்புகொண்டு எந்தத் தேதியில், எந்த நேரத்தில் பாடப் புத்தகங்களை வாங்கப் பள்ளிகளுக்கு வரவேண்டும் என்பதை முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும்.


பாடப் புத்தகங்களை வாங்க வரும் மாணவர்கள், பெற்றோர், பாதுகாவலர்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியைப் பின்பற்றி புத்தகங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும். பள்ளிகள் திறப்பு குறித்து அரசு இதுவரை அறிவிப்பும் வெளியிடவில்லை. இருந்தாலும், அனைத்துப் பள்ளிகளிலும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.


குடிநீர், கழிப்பறை, இருக்கைகள், சுற்றுச்சுவர், வகுப்பறைகள், பள்ளிக் கட்டிடம் என அனைத்தையும் ஆசிரியர்கள் கண்காணித்து அதன் உறுதித் தன்மை குறித்து ஆய்வு செய்துகொள்ள வேண்டும். மாணவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், பாதுகாப்பு உள்ளிட்டவற்றைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் சரிபார்க்க வேண்டும். பள்ளிகள் திறப்பு குறித்த அறிவிப்பு வருவதற்கு முன்பாகவே ஆசிரியர்கள் அனைவரும் தயாராக இருக்க வேண்டும்''.


இவ்வாறு ஆட்சியர் அமர் குஷ்வாஹா பேசினார்.


இதைத் தொடர்ந்து, பாடப் புத்தகங்களை மாணவிகளுக்கு வழங்கிய ஆட்சியர் அமர் குஷ்வாஹா கணிதப் பாடம் குறித்த சில கேள்விகளை மாணவிகளிடம் எழுப்பினார். அப்போது, ஒருசில மாணவிகள் பதில் அளிக்கத் தயங்கியபோது, மாணவிகளை இருக்கையில் அமர வைத்த ஆட்சியர், கரும்பலகையில் கணக்குப் பாடங்களை எழுதி, அதை மாணவிகளுக்கு எளிதாகப் புரியும்படி அரை மணி நேரத்துக்கு மேலாகப் பாடங்களை நடத்தி ஆசிரியராக மாறினார்.


மாணவிகளுடன் சேர்ந்து பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களும் மாவட்ட ஆட்சியர் நடத்திய பாடங்களை கவனித்தனர்.


அதன் பிறகு ஆசிரியர்களிடம் பேசிய ஆட்சியர் அமர் குஷ்வாஹா, ''கடந்த ஓராண்டுக்கு மேலாக நேரடி வகுப்புகள் இல்லாததால் மாணவிகள் சோர்வடைந்துள்ளனர். எனவே, ஆன்லைன் வகுப்பாக இருந்தாலும், கல்வித் தொலைக்காட்சி மூலம் பாடங்களைக் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகளுக்கு எளிதாகப் புரியும்படி பாடங்களை நடத்த முன்வர வேண்டும். அதே நேரத்தில் மாணவர்களும் தினந்தோறும் பாடங்களைப் படிக்க வேண்டும். தாய்மொழிப் பாடங்களை உள்வாங்கிப் படிக்க வேண்டும். ஒவ்வொரு பாடத்துக்கும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி அந்த நேரத்தில் பாடங்களைப் படிக்க வேண்டும்'' என அறிவுரை வழங்கினார்.


இந்நிகழ்ச்சியில், மாவட்டக் கல்வி அலுவலர் மணிமேகலை, ஆய்வாளர்கள் தாமோதிரன், தன்ராஜ் மற்றும் ஆசிரியர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.

5 comments:

 1. ஆசிரியர் தொழில் என்பது அங்கீகாரம் பெற்ற ஒரு தொழில் அதில் அங்கீகாரம் பெற்றவர் மட்டுமே பாடம் நடத்த தகுதியானவர் அப்படி இருக்கும் பொழுது தகுதி பெறாத ஒருவர் பாடம் எடுப்பது தொழிலை அவமானப்படுத்துவதாகும். இந்திய ஆட்சிப் பணி யார் மருத்துவ கல்லூரி சென்று மருத்துவ மாணவர்களிடம் அறுவை சிகிச்சை எவ்வாறு செய்ய வேண்டும் என கத்தியை எடுத்து அவர்களுக்கு செய்து காண்பிப்பது எவ்வாறு சட்டப்படி குற்றமா அவ்வாறே இத்தகைய செயலும் வருந்தத்தக்கது ஏனெனில் ஆசிரியர் தொழில் பழகிய பின்பு அவர்கள் ஆசிரியர்களாக வருகின்றனர். அத்தொழிலை பழகாத ஒருவர் ஆசிரியருக்கு போதிப்பதை பற்றி வகுப்பு எடுப்பது என்பது ஏற்புடையதல்ல. அதே நேரத்தில் ஆசிரியர் ஒருவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று கலெக்டர் என்பவர் இவ்வாறு இயங்கவேண்டும் நான் கலெக்டராக ஒருநாள் பணியாற்று காட்டுகிறேன் என்று கூற முடியாது அவரவர் தொழிலை அவரவர் செய்வதே சால சிறந்தது.ஆசிரியர் சம்பளம் வாங்கினால் வயிற்றெரிச்சல் மாணவர்கள் இல்லாத காலத்தில் விடுமுறை அளித்தால் வயிற்று எரிச்சல் என்ன உலகம்.ஆசிரியர்கள் என்றால் இச்சமுதாயத்தில் கிள்ளு கீரைகள், யார் வேண்டுமானாலும் பிடுங்கி விடலாம்.

  ReplyDelete
  Replies
  1. ஆசிரியர் என்பது தொழில் அல்ல சேவை. Teaching is not a professional it's services. அதுவும் technical services அல்ல. Medical என்பது technical services. நீங்கள் சொல்லிகொடுத்து என்னத்த படிக்கே றாங்க பசங்க. ஒரு District Collector அந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து துறைகளுக்கும் தலைமை. ஒரு CEO DEO எப்படி பாடம் நடத்தலாமோ அதே போல collector ம் நடத்தலாம்'

   Delete
 2. Friends!

  New Syllabus book
  6 to 10 Grammar Part PDF

  Send the link here if you have!
  Thank you!

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி