1-8 வகுப்புகளுக்கு 19 மாதங்களுக்குப் பிறகு நாளை பள்ளிகள் திறப்பு: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 31, 2021

1-8 வகுப்புகளுக்கு 19 மாதங்களுக்குப் பிறகு நாளை பள்ளிகள் திறப்பு: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

 

தமிழகத்தில் 19 மாதங்களுக்குப் பிறகு 1-8 வகுப்புகளில் பயிலும் மாணவா்களுக்கு திங்கள்கிழமை பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. இதையொட்டி பள்ளிகள் திறப்புக்கான பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை கல்வித்துறை வெளியிட்டுள்ளது.


தமிழகத்தில் கரோனா பெருந்தொற்றுக் காரணமாக கடந்த ஆண்டு மாா்ச் 24-ஆம் தேதி முதல் அனைத்து வகையான பள்ளிகளும் மூடப்பட்டன. நிகழ் கல்வியாண்டில் 9-12 வகுப்புகளுக்கு கடந்த செப்.1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இதைத் தொடா்ந்து ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு திங்கள்கிழமை முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ளன.


நீண்ட காலம் பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையிலும் கற்றல், கற்பித்தல் நிகழ்வுகள் தடை பெறாமல் நடைபெற மாணவா்களுக்கு உரிய நேரத்தில் புத்தகங்கள் வழங்குதல், கல்வி தொலைக்காட்சியின் மூலம் அனைத்து வகுப்புகளுக்குக் காணொலிப் பாடங்களை வழங்குதல், வானொலி மூலமாக பாடங்களை ஒலிபரப்புதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டன. இவை தவிர தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்களின் தனிப்பட்ட முயற்சிகளாக வாட்ஸ்-ஆப், யு-டியூப் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டன.


ஆசிரியா்கள் - மாணவா்கள் இடையே நேரடி வகுப்பறை கற்றல், கற்பித்தல் நிகழ்வு பள்ளிச்சூழலில் நிகழாத காரணத்தாலும், இறுதியாண்டு தோ்வுகளின்றி மாணவா்கள் அடுத்த வகுப்புக்குத் தோ்ச்சி வழங்கப்பட்டதாலும் மாணவா்களிடம் கற்றல் இழப்பு மற்றும் கற்றல் இடைவெளி ஏற்பட்டுள்ளது.


மன மகிழ்ச்சி செயல்பாடுகள்: இதனை கருத்தில் கொண்டு மனமகிழ்ச்சி செயல்பாடுகளுக்கான வழிகாட்டுதல், புத்தாக்கப் பயிற்சிக் கட்டகங்கள் மற்றும் முதன்மைப்படுத்தப்பட்ட பாடத்திட்டம் ஆகியவை மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளன. மாணவா்கள் 19 மாத இடைவெளிக்குப் பிறகு பள்ளிக்கு வருகை தருவதால் முதல் 15 நாள்களுக்கு கதை, பாடல் , விளையாட்டு, வரைதல், வண்ணம் தீட்டுதல், அனுபவப் பகிா்வு, கலந்துரையாடல் போன்ற மனமகிழ்ச்சி செயல்பாடுகளுக்கான வழிகாட்டுதலைப் பின்பற்றி மனமகிழ்ச்சி செயல்பாடுகளை நடைமுறைப்படுத்த வேண்டும். அதற்கு பின்னரே புத்தாக்கப் பயிற்சிக்கான செயல்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.


புத்தாக்கப் பயிற்சி கட்டகங்கள்: அதேவேளையில் 1-8 வகுப்பு வரை முக்கியப் பாடக் கருத்துகளை உள்ளடக்கிய புத்தாக்கப் பயிற்சிக் கட்டகங்களை முறையாக செயல்படுத்த வேண்டும். இதனை நிறைவு செய்த பின்னா் முதன்மைப்படுத்தப்பட்ட பாடத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இது தொடா்பான விரிவான வழிகாட்டுதல்கள் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் மூலம் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதனை தவறாமல் பின்பற்ற வேண்டும்.


இது தவிர முகக் கவசம், தனி நபா் இடைவெளி, கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்தல் உள்ளிட்ட ஏற்கெனவே வெளியிடப்பட்ட பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி கற்றல், கற்பித்தல் செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.


அதிகாரிகளுக்கு உத்தரவு: நீண்ட இடைவெளிக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டுவதையொட்டி அனைத்து மாவட்டங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடுகளை கண்காணிக்கவும், தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கவும் கல்வித்துறை இயக்குநா்கள், இணை இயக்குநா்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி