11 மாவட்டங்களுக்கு "Red Alert" - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 28, 2021

11 மாவட்டங்களுக்கு "Red Alert" - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

 

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட தமிழகத்தில் 11 கடலோர மாவட்டத்தில் கன முதல் மிக கனமழை ெபய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, இந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. அதே நேரத்தில் அவ்வப்போது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த 20 நாட்களுக்கு மேலாக நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயமும் கடும் பாதிப்படைந்துள்ளது.


இந்நிலையில் நேற்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட 12 மாவட்டங்களில் மிக கனமழை பெய்தது. சென்னையில் விடியவிடிய மழை கொட்டி தீர்த்ததால் தாழ்வான பல பகுதிகளில் வெள்ளநீர் புகுந்தது. போக்குவரத்தும் பல இடங்களில் துண்டிக்கப்பட்டது. வாகனங்கள் அனைத்தும் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று இரவு வரை மழை கொட்டி தீர்த்தது. இந்நிலையில் இன்றும் பல மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.


இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் அளித்த பேட்டி: குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 28ம் தேதி (இன்று) வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும். வட கடலோர மாவட்டங்கள் என்பது  திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் இன்று மிக கனமழை  இருக்கிறது. இங்கு ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது.

அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.


29ம் தேதி (நாளை) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், தென்காசி, மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.


30ம் தேதி தூத்துக்குடி, ராமநாதபுரம், திருநெல்வேலி, மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.


1ம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.


சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு, நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 28 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் 20 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. மகாபலிபுரம், செங்கல்பட்டு, செய்யூரில் தலா 18 செ.மீ, காஞ்சிபுரம் மாவட்டம் கட்டப்பாக்கம் 17 செ.மீ, திருக்கழுக்குன்றம் 16 செ.மீ, மதுராந்தகம், சோழவரம், பரங்கிப்பேட்டையில் தலா 15 செ.மீ, திருவள்ளூர் 13 செ.மீ, காஞ்சிபுரம், செம்பரம்பாக்கம், பொன்னேரி, தாம்பரம், அம்பத்தூரில் தலா 12 செ.மீ., சிதம்பரம், காரைக்கால், கொரட்டூர், திருப்போரூர், ரெட் ஹில்ஸில் தலா 11 செ.மீ, கேளம்பாக்கம், ஸ்ரீபெரும்புதூர், பெரம்பூர், அண்ணா பல்கலைக்கழகம், தாமரைப்பக்கம், சென்னை நுங்கம்பாக்கத்தில் தலா 10 செ.மீட்டர் மழை பெய்துள்ளது.


இன்று குமரிக்கடல், தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் தென் தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 29ம் தேதி தெற்கு அந்தமான் கடற்பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்த  தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது மேலும் வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகரக்கூடும் இதன் காரணமாக 29, 30ம் தேதி அந்தமான் கடற்பகுதிகளில் சூறாவளி காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.


1ம் தேதி தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு  வங்க கடல் பகுதிகள், அந்தமான் கடற்பகுதிகளில் சூறாவளி காற்று 40 முதல் 50  கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும்  வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். 29ம் தேதி உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு, வடமேற்கு திசையை நோக்கி தான் நகரும். இதனால், இப்போதைக்கு நமக்கு எந்த பாதிப்பும் கிடையாது. அது வரும் போது வலுப்பெற வாய்ப்பு இருக்கிறது. இப்போதைக்கு வடமேற்கு திசையை நோக்கி நகர்வதால் தமிழகத்திற்கு ஆபத்து இதுவரை இல்லை. சென்னைக்கு இன்று வரை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு மழையின் அளவு குறையும். இவ்வாறு அவர் கூறினார்.


* இயல்பை விட 74% அதிகம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த மாதம் 1ம் தேதி முதல் நேற்று வரை 60 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. இயல்பாக, இந்த நேரத்தில் 34 செ.மீட்டர் மழை பெய்ய வேண்டும். ஆனால், 74 சதவீதம் அதிகமாக மழை பெய்துள்ளது. விழுப்புரத்தில் 152 சதவீதம், திருப்பத்தூர் 141 சதவீதம், கோவை 115 சதவீதம்,  புதுச்சேரி 109 சதவீதம், கன்னியாகுமரி 107 சதவீதம், பெரம்பலூரில் 102 சதவீதம், சென்னையில் 77 சதவீதம் அதிகமாக மழை பெய்துள்ளது.

1 comment:

 1. Polytechnic trb exam எழுதும் நண்பர்கள் கவனத்திற்கு..ஒரு நிமிடம் இதை முழுவதும் படிக்கவும்.. ஏற்கனவே பல நெருக்கடிகளை கடந்து வந்து விட்டோம்.. தற்போது கனமழை பெரும்பாலான மாவட்டங்களில் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.. ஆண்டு முழுவதும் போட்டி தேர்வுக்கு படித்து இருந்தாலும், தேர்வு நடைபெறும் இறுதி சூழல் தான் தேர்ச்சியை நிர்ணயிக்கும்..

  கல்லூரி செமஸ்டர் தேர்வு ஜனவரி 20 க்கு பிறகு என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது..

  ஐனவரி முதல் வாரத்தில் பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு நடைபெற்றால் தான் அனைவருக்கும் நன்று..

  இது சாத்தியமா ? என்று கேட்டால்.. 100% சாத்தியம்.. தொலை தூரத்தில் தேர்வு மையம் அமைக்கப்பட்டது.. நமது வேண்டுகோள் அதை மாற்றி புரட்சி செய்தது.. அது போல மீண்டும் ஒரு முயற்சி.. கடிதம்..
  ஆம் .. நண்பர்களே. நாம் அனைவரும் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு கடிதம் அனுப்புவோம்.... 5நிமிடம் போதும் .. நம் வாழ்க்கையே மாற்றும்..

  அல்லது

  தொலைபேசியில் தெரிவிக்கலாம்.. இமெயில் கூட அனுப்பலாம்..

  ஆனால் ஒரு முறையாவது முயற்சி செய்யுங்கள்..

  தேர்வுக்கு படிப்பவர்கள் தாராளமாக படியுங்கள்.. 40 நாட்கள் கிடைத்தால் உங்கள் மதிப்பெண் எவ்வளவு உயரும் என்பதை ஒரு நொடி நினைத்து பாருங்கள்.. நன்றி வணக்கம்... 🙏
  Teachers recruitment board,
  College Rd, Near Sankara Nethralaya(Main), Subba Road Avenue, Nungambakkam, Chennai Tamil Nadu 600006

  04428272455
  9444630068, 9444630028

  Email: trb.tn@nic.in

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி