170 ஆசிரியர்கள்‌ மற்றும்‌ 170 ஆசிரியரல்லாப் பணியிடங்கள் - ரூ.25 கோடி மதிப்பில் 10 அரசு கலைக்கல்லூரிகள் தொடங்க அனுமதி: அரசாணை வெளியீடு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 20, 2021

170 ஆசிரியர்கள்‌ மற்றும்‌ 170 ஆசிரியரல்லாப் பணியிடங்கள் - ரூ.25 கோடி மதிப்பில் 10 அரசு கலைக்கல்லூரிகள் தொடங்க அனுமதி: அரசாணை வெளியீடு!


2022 -23ஆம் கல்வியாண்டு முதல் தமிழ்நாட்டில் சுமார் ரூ.25 கோடி மதிப்பில் 10 அரசு மற்றும் கலைக் கல்லூரிகளைத் தொடங்க அனுமதி வழங்கி, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக உயர் கல்வித்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு:

தமிழகத்தின்‌ அனைத்துப்‌ பகுதிகளுக்கும்‌ சீரான உயர் கல்வி வழங்குவதற்கும்‌, மாணவர்‌ சேர்க்கை விகிதாச்சாரத்தை அதிகப்படுத்துவதற்கும்‌, 10 புதிய அரசு கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்லூரிகளைத்‌ தொடங்குவதற்கும் வரவு செலவுத்‌ திட்டத்தில்‌ அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கீழ்க்காணும்‌ இடங்களில்‌ புதிய கல்லூரிகள்‌ தொடங்கப்படுகின்றன.

விருதுநகர்‌ மாவட்டம்‌ - திருச்சுழி, கள்ளக்குறிச்சி மாவட்டம்‌ - திருக்கோவிலூர்‌, ஈரோடு மாவட்டம்‌ - தாளவாடி, திண்டுக்கல்‌ மாவட்டம்‌ - ஒட்டன்சத்திரம்‌, திருநெல்வேலி மாவட்டம்‌ - மானூர்‌, திருப்பூர்‌ மாவட்டம்‌ - தாராபுரம்‌, தருமபுரி மாவட்டம்‌ - ஏரியூர்‌, புதுக்கோட்டை மாவட்டம்‌ - ஆலங்குடி, வேலூர்‌ மாவட்டம்‌ - சேர்க்காடு ஆகிய இடங்களில்‌ புதிய இருபாலர்‌ அரசு கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்லூரிகளும்‌, திருவாரூர்‌ மாவட்டம்‌ - கூத்தாநல்லூரில்‌ புதிய அரசு மகளிர்‌ கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்லூரியும்‌ தொடங்கப்படும்.

மேற்படி அறிவிப்பிற்கிணங்க கல்லூரிக்‌ கல்வி இயக்குநர்‌ அனுப்பிய கருத்துருவினை அரசு நன்கு ஆய்வு செய்து, அதன் அடிப்படையில்‌ 2022-23ஆம்‌ கல்வியாண்டில்‌ 10 அரசு கலை மற்றும் அறிவியல்‌ கல்லூரிகள்‌ (9 இருபாலர்‌ கல்லூரிகள்‌ மற்றும்‌ ஒரு மகளிர்‌ கல்லூரி) தொடங்க அனுமதி அளிக்கப்படுகிறது.

ஒவ்வொரு கல்லூரியிலும்‌ இளங்கலை (தமிழ்‌), இளங்கலை (ஆங்கிலம்‌), இளமறிவியல்‌ (கணிதம்‌), இளநிலை (வணிகவியல்‌) மற்றும்‌ இளமறிவியல்‌ (கணிணி அறிவியல்‌) ஆகிய 5 பாடப்பிரிவுகளுடன்‌ தொடங்குவதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு கல்லூரிக்கும்‌ 17 ஆசிரியர்கள்‌ (உதவிப்‌ பேராசிரியர்கள்‌ பணியிடங்கள்‌ முதலாமாண்டிற்கு மட்டும்‌) மற்றும்‌ 17 ஆசிரியரல்லாப்‌ பணியிடங்கள்‌ வீதம்‌ 10 கல்லூரிகளுக்கு மொத்தம்‌ 170 ஆசிரியர்கள்‌ மற்றும்‌ 170 ஆசிரியரல்லாப் பணியிடங்கள் ஒதுக்கப்படுகின்றன.

10 கல்லூரிகளுக்கு ஓராண்டுக்கான தொடர்‌ செலவினமாக ரூ.21,23,40,600/-மற்றும்‌ தொடராச்‌ செலவினமாக ரூ.3,60.00,000/- ஆக மொத்தம்‌ ரூ.24,83,40,600/-க்கு (ரூபாய்‌ இருபத்து நான்கு கோடியே எண்பத்து மூன்று லட்சத்து நாற்பதாயிரத்து அறுநூறு மட்டும்‌) நிர்வாக அனுமதி அளித்து அரசு ஆணையிடுகிறது’’.

இவ்வாறு உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது.


GO NO 228 , DATE : 19.11.2021 - Download here....

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி