மருத்துவ மேற்படிப்பில் ஓபிசிக்கு 27% இடஒதுக்கீடு உறுதி: கலந்தாய்வுக்கு அனுமதி - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Jan 7, 2022

மருத்துவ மேற்படிப்பில் ஓபிசிக்கு 27% இடஒதுக்கீடு உறுதி: கலந்தாய்வுக்கு அனுமதி

 

அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவப் படிப்புகளில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் (ஓபிசி) 27 சதவீதம் இடஒதுக்கீட்டை உறுதி செய்து கலந்தாய்வுக்கு அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இதுகுறித்து நீதிபதிகள்  டி.ஒய்.சந்திரசூட், ஏ.எஸ்.போபண்ணா அமர்வு கூறியதாவது:


அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவப் படிப்புகளில் ஓபிசிக்கு ஒதுக்கப்பட்ட 27 சதவீதம் செல்லும், இடபிள்யுஎஸ் வகுப்பினருக்கு இந்தாண்டு மட்டும் 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கலாம் என இடைக்கால உத்தரவிட்டனர்.


மேலும், இடபிள்யுஎஸ் வகுப்பினருக்கு இடஒதுக்கீடு குறித்து மார்ச் மாதத்தில் விரிவான தீர்ப்பு வழங்கப்படும். மருத்துவ முதுநிலைப் படிப்பிற்கான கலந்தாய்வை நடத்திக் கொள்ள மத்திய அரசுக்கு அனுமதி வழங்கப்படுகிறது என்றனர்.


அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் ஓபிசி வகுப்பினருக்கு 27 சதவீதம், இடபிள்யுஎஸ் வகுப்பினருக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு அளித்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டது.


இந்த அறிவிப்புக்கு எதிராக முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தோ்வை எழுதிய மாணவா்கள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இடபிள்யுஎஸ் வகுப்பினரை அடையாளம் காண ரூ.8 லட்சம் வருமான உச்சவரம்பு நிா்ணயிக்கப்பட்டது குறித்து மத்திய அரசுக்கு பல கேள்விகளை எழுப்பியது. இந்த வழக்கு காரணமாக முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், இடபிள்யுஎஸ் வகுப்பினரை அடையாளம் காண்பதற்கான வருமான உச்சவரம்பை மறுபரிசீலனை செய்வதாக தெரிவித்திருந்த மத்திய அரசு, அந்த வகுப்பினரை அடையாளம் காண அவா்களின் குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.8 லட்சமாகவே தொடரும் என்று அண்மையில் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது.


இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், ஏ.எஸ்.போபண்ணா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக கடந்த புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.


அப்போது மத்திய அரசு தரப்பில், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வை மேற்கொள்ள உச்சநீதிமன்றம் அனுமதிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்துக்கு உதவ மத்திய அரசு தயாராக உள்ளது. ஆனால் இதுதொடா்பாக நீண்ட விவாதங்களை மேற்கொள்ள முடியாது. ஏனெனில் நாட்டுக்குப் புதிய மருத்துவா்கள் தேவைப்படுகின்றனா் எனக் குறிப்பிட்டிருந்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி