மாணவர்களிடையே சாதி குறித்த தகவல் எதையும் சேகரிக்கவில்லை - பள்ளிக் கல்வி ஆணையர் விளக்கம்! - kalviseithi

Mar 14, 2022

மாணவர்களிடையே சாதி குறித்த தகவல் எதையும் சேகரிக்கவில்லை - பள்ளிக் கல்வி ஆணையர் விளக்கம்!

 மாணவர்களிடையே சாதி குறித்த தகவல் எதையும் பள்ளிக் கல்வித் துறை சேகரிக்கவில்லை - இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பலன் கிடைப்பதை உறுதி செய்யவே Communal Category பற்றிய தகவல் சேகரிக்கப்படுகிறது - பள்ளிக் கல்வி ஆணையர் விளக்கம்!


 தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் அனுப்பப்பட்ட சுற்றறிக்கையை அடிப்படையாக வைத்து நாளிதழ் ஒன்றில் உண்மைக்குப் புறம்பான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.


அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் குறித்த விபரப் பதிவேட்டில் அவர்களின் ஜாதி குறித்த கேள்வி கேட்கப்பட்டுள்ளதாக அச்செய்தியில் குறிப்படப்பட்டுள்ளது.


அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்விச் சட்டம் நடைமுறைக்கு வந்தது முதலே ஒவ்வோர் ஆண்டும் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தை வகுத்தபின் அது குறித்து பள்ளிக் கல்வித் துறைக்கு தொடர்புடைய பள்ளிகள் தகவல் தெரிவிக்கவேண்டும். அதனடிப்படையிலேயே பள்ளி மேலாண்மைக் குழுக்களுக்கான நிதி வழங்கப்படும். 2020-21 கல்வியாண்டில் பள்ளி மேம்பாட்டுத் திட்டம் வகுக்கப்பட்டது குறித்து பள்ளிக் கல்வித் துறைக்கு தகவல் அனுப்பாத பள்ளிகளை விரைந்து அனுப்பவேண்டுமெனக் கோரி பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.


 அந்தச் சுற்ற்றிக்கையில் , குழந்தைகள் பட்டியல் வகுப்பைச் சேர்ந்தவர்களா , பழங்குடி வகுப்பைச் சேர்ந்தவர்களா , பிற்படுத்தப்பட்ட அல்லது மிகப் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களா அல்லது சிறுபான்மையினரா அல்லது முற்பட்ட வகுப்பினரா என்று மட்டுமே கேட்கப்பட்டிருக்கிறது . ஒரு குழந்தையின் சாதியைக் ( Caste ) கேட்பதற்கும் , அக்குழந்தை சார்ந்த வகுப்பைக் ( Communal Category SC / ST / BC / MBC ... ) கேட்பதற்கும் வேறுபாடு உள்ளது . பள்ளிகளில் மாணவர்கள் என்ன வகுப்பைச் சார்ந்தவர்கள் என்கிற தகவல் ஏற்கனவே இருக்கிறது.


 அந்த விவரங்களின் அடிப்படையில்தான் , அவர் பட்டியல் / பழங்குடியினரா , பிற்படுத்தப்பட்டவரா என்பது முடிவு செய்யப்பட்டு அவர்களுக்கான நலத்திட்டங்ளை பயன்படுத்திக்கொள்ள முடியும். இது வெகுகாலமாக பின்பற்றப்பட்டு வரும் நடைமுறை. புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டது முதல் இதை மிக எளிதாக பதிவேற்றம் செய்துவிட முடியும். இதன் மூலம் பணிச்சுமை குறைகிறது. ஒரு மாணவர் பள்ளியில் சேரும்போது ஒரு முறை பதிவு செய்தால் போதும். இவர்கள் சார்ந்த வகுப்புதான் செயலியில் பதிவாகுமே தவிர மாணவர்களின் சாதி எங்குமே சேமிக்கப்படுவதில்லை . விளிம்பு நிலையில் உள்ள மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை உட்பட பல்வேறு சிறப்புத் திட்டங்களுக்கான பலன்கள் அவர்களுக்குக் கிடைக்கவேண்டும் என்பதற்காக மட்டுமே இந்தத் தகவல் கேட்கப்படுகிறது. பின்னாளில் அவர்கள் இட ஒதுக்கீடு மூலம் பலன் பெறவும் இந்த அடிப்படைத் தகவல் தேவைப்படுகிறது . ஒரு மாணவர் எந்த வகுப்பைச் சேர்ந்தவர் என்பதுதான் தமிழக அரசுக்குத் தேவையே தவிர அந்த மாணவரின் சாதி அல்ல.


சமூக நீதியின் அடிப்படையில் இயங்கும் தமிழக அரசு தன் நோக்கத்தில் தெளிவாக இருக்கிறது . அந்த சுற்றிக்கையில் சாதி கேட்கப்படாதபோது கேட்டதாக ஒரு பொய்ச் செய்தியை உலவவிடுவது உண்மைக்குப் புறம்பானது. சாதிக்கும் வகுப்புக்கும் வேறுபாடு தெரியாமல் வெளியிடப்பட்டிருக்கிறது அச்செய்தி. தமிழக பள்ளிகளில் சாதியப் பாகுபாடு காட்டப்படுகிறது என்கிற தகவல் தெரிந்தால் உடனடியாக நடவடிக்கை எடுத்திருக்கிறது பள்ளிக் கல்வித் துறை . விளிம்பு நிலையில் உள்ளவர்களின் முன்னேற்றத்திற்கென கேட்கப்படும் விவரங்களை திரித்து மாணவர்களின் சாதியை பள்ளிக் கல்வித் துறை கேட்டது போன்றதொரு தோற்றத்தைத் தர முயல்வது அநீதியானதும் முற்றிலும் பொய்யானதும் தமிழக அரசின் சமூக நீதிக் கொள்கைக்கு முரணானதுமாகும். 

-ஆணையர் , பள்ளிக் கல்வி நாள் : 013.03.2022

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி