பிளஸ்1 மதிப்பெண் பட்டியல் வழங்கப்படாததால் நீட் தேர்வுக்கு தமிழக மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிப்பதில் சிக்கல் - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Apr 8, 2022

பிளஸ்1 மதிப்பெண் பட்டியல் வழங்கப்படாததால் நீட் தேர்வுக்கு தமிழக மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிப்பதில் சிக்கல்

 

வரும் கல்வியாண்டிற்கு எம்பிபிஎஸ் படிப்பில் சேர நீட் தேர்வுக்கான விண்ணப்பம் ஆன்லைனில் தொடங்கியுள்ள நிலையில் கடந்த ஆண்டு பிளஸ்1 மதிப்பெண் விபரம் கேட்பதால் தமிழக மாணவர்கள் விண்ணப்பிக்க முடியாமல் தவிக்கின்றனர். மருத்துவம், பல் மருத்துவம், சித்த மருத்துவம் பயில நீட் நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது கட்டாயம் என ஒன்றிய அரசு அறிவித்து செயல்படுத்தி வருகிறது. தமிழகத்தில் நீட் தேர்வுக்கு கடும் எதிர்ப்பு இருந்தாலும் வேறு வழியின்றி மாணவர்கள் இதில் விண்ணப்பித்து தேர்வை சந்தித்து வருகின்றனர்.


கடந்த கல்வியாண்டில் தமிழகத்தில் 99 ஆயிரத்து 610 பேர் நீட் தேர்வை எழுதினர். அகில இந்திய அளவில் 15 லட்சம் பேர் இத்தேர்வை எழுதினர். கொரோனா காரணமாக நடப்பு ஆண்டிற்கான மருத்துவக்கல்வி மாணவர் சேர்க்கை மற்றும் வகுப்புகள் தொடக்கம் தாமதம் ஆனது. இந்தநிலையில் தற்போது கொரோனா கட்டுக்குள் வந்துள்ளதால், வரும் கல்வியாண்டில் மருத்துவக்கல்வி பயில நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. கடந்த 2ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களும் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க முயற்சித்தனர்.

ஆனால் கடந்த கல்வியாண்டில் மாணவர்கள் பிளஸ் 1 பாடத்தில் எடுத்த மதிப்பெண் பட்டியல் விபரம் கேட்கப்பட்டுள்ளதால், அதற்கு மேல் உள்ளீடு செய்யமுடியவில்லை. இதற்கு காரணம் கொரோனா பரவல் காரணமாக கடந்த கல்வியாண்டில் மாணவர்கள் தேர்வு இன்றி ஆல் பாஸ் செய்யப்பட்டனர். அவர்களுக்கு வழங்கப்பட்ட பிளஸ் 1 மதிப்பெண் சான்றிதழில் படித்த பாடங்களுக்கு எதிரே மதிப்பெண் பதிவு செய்ய வேண்டிய இடத்தில் பாஸ் என மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளன. மதிப்பெண்கள் பாட வாரியாக குறிப்பிடப்படவில்லை.

இதனால் நீட் விண்ணப்பத்தில் பாஸ் என மட்டும் பதிவிட்டால் ஏற்கவில்லை என மாணவர்கள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக தமிழக மாணவர்கள் என்ன செய்வது என தெரியாமல் திகைப்பில் உள்ளனர். இதுகுறித்து நெல்லை மாவட்ட நீட் ஒருங்கிணைப்பு ஆசிரியர் கிருஷ்ணசாமி கூறுகையில், நெல்லை மாவட்டத்தில் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் மாநில பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியவில்லை. இதுகுறித்து பலர் தெரிவித்த வண்ணம் உள்ளனர். பள்ளிக் கல்வித் துறை உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு இந்த விவரம் கொண்டு செல்லப்பட்டுள்ளது என்றார். இந்த பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காணவேண்டும் என சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர் மற்றும் கல்வியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி