பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி - சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 10, 2022

பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி - சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிப்பு.

சென்னை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் காலை உணவு வழங்கப்படும். பருவமழை காலத்தில் சென்னையில் தண்ணீர் தேங்காவண்ணம் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளுக்காக மொத்தம் ரூ.1,235 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. வார்டு மேம்பாட்டு பணிகளுக்காக கவுன்சிலர்களுக்கு இதுவரை ஒதுக்கிய ரூ.30 லட்சம் நிதி, இனி ரூ.35 லட்சமாக உயர்த்தப்படும் என்று சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் மேயர் பிரியா அறிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த பிப்ரவரி மாதம் நடந்து முடிந்து, 22ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டது. இதில் தமிழகத்தில் மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளிலும் திமுக வெற்றி பெற்றது.


அதேபோன்று நகராட்சி, பேரூராட்சி தலைவர் மற்றும் வார்டு கவுன்சிலர் பதவிகளையும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளே கைப்பற்றியது. இதையடுத்து கடந்த மார்ச் 4ம் தேதி, திமுக சார்பில் திரு.வி.க. நகர் 74வது வார்டு உறுப்பினர் பிரியா ராஜன் மேயராக தேர்வு செய்யப்பட்டு, பதவியேற்றார். இந்நிலையில், நேற்று காலை சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் உள்ள மாமன்ற கூட்ட அரங்கில் சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா 2022-23ம் ஆண்டுக்கான பெருநகர சென்னை மாநகராட்சியின் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த கூட்டத்தில் மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார், திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்துக்கட்சி கவுன்சிலர்கள், மாநகராட்சி ஆணையர் மற்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர். நேற்று காலை சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் தொடங்கியதும் மேயர் ஆர்.பிரியா தொடக்க உரையாற்றினார்.

அப்போது அவர் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு பேசியதாவது: இந்திய துணை கண்டத்தின் தலைசிறந்த மாநகரங்களில் ஒன்றான பெருநகர சென்னை மாநகராட்சி 1688ம் ஆண்டு செப்டம்பர் 29ம் தேதி உள்ளாட்சி அமைப்பாக நிறுவப்பட்டது. சென்னை மாநகரமானது 426 ச.கி.மீ. பரப்பளவில் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 66.72 லட்சம் மக்கள் தொகை கொண்டதாகும். தற்போது அதைவிட அதிக மக்கள் தொகை அதிகரித்துள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சியில் அடிப்படை வசதிகளாக 5,657 கி.மீ. அளவில் சாலைகள், 285 பெரிய, சிறிய பாலங்கள், 2,071 கி.மீ. அளவில் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. 722 பூங்காக்கள், 872 விளையாட்டு திடல்கள், 2.90 லட்சம் தெரு மின் விளக்குகள் உள்ளது. கடந்த 5 ஆண்டுகளுக்கும்  மேலாக, தேர்ந்தெடுக்கப்பட்ட மாமன்ற உறுப்பினர்கள் இல்லாத காரணத்தினால் சிறப்பு அதிகாரியால் வரவு செலவுக்கான நிதிநிலை அறிக்கைக்கு ஒப்புதல் பெறப்பட்டது.

* மாணவ - மாணவிகளிடையே பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் வகையில் பள்ளியில் பாலின குழுக்கள் அமைக்கப்படும்.

* 2022-2023ம் கல்வியாண்டில் 70 உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில் ரூ.1.86 கோடியில் இணைய இணைப்பு வழங்கப்படும்.

* சென்னை பள்ளிகளில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் 72 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு ரூ.7.50 கோடியில் விலையில்லா சீருடைகள் வழங்கப்படும்.

* ரூ.23.66 கோடியில் பள்ளி மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின்கள், கழிப்பறை வசதிகளும், ரூ.5.47 கோடியில் கண்காணிப்பு கேமராக்கள், ரூ.6.91 கோடியில் தற்காப்பு கலை பயிற்சி வழங்கப்படும்.

* சுமார் ரூ.3 கோடி செலவில் கிரிக்கெட், கால்பந்து விளையாட்டு பயிற்சி அளிக்கப்படும்.

* சிட்டீஸ் திட்டத்தின் கீழ் 28 பள்ளிகளின் உள்கட்டமைப்பு ரூ.76.27 கோடியில் மேம்படுத்தப்படும்.

* சென்னை பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பில் ஏற்படும் பழுதுகள் உடனடியாக சரி செய்யப்படும். 281 தலைமை ஆசிரியர்களுக்கு ரூ.92.35 லட்சம் மிகாமல் செலவு மேற்கொள்வதற்கு அவசர செலவின நிதி வழங்கப்படும்.

* பள்ளி மாணவர்களின் உடல் நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியத்தை பேணிக் காத்து கல்வியை திறம்பட கற்றிட திருவான்மியூரை சுற்றியுள்ள 23 சென்னை பள்ளிகளில் சுமார் 5,000 மாணவர்களுக்கு சோதனை அடிப்படையில் தன்னார்வலர்கள் மூலம் காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது. இத்திட்டம் மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருப்பதால் மேலும் பல பள்ளிகளில் தன்னார்வலர்கள் மூலம் காலை சிற்றுண்டி திட்டம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.


* பள்ளிகளில் ஆங்கிலத்தில் பேசும் திறனை வளர்த்துக்கொள்ள ஆங்கில மொழி பேசும் பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

* சென்னை பள்ளிகளின் பராமரிப்பு பணிக்கு இந்த நிதியாண்டில் ரூ.16.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

* சென்னை மாநகராட்சி எல்லைக்குள் ரூ.3.50 கோடியில் 3 டயாலிசிஸ் மையங்கள் ஏற்படுத்தப்படும்.

* கொசு ஒழிப்பு பணிக்கு ரூ.4.62 கோடி ஒதுக்கப்படும்.

* மீனம்பாக்கம், சோழிங்கநல்லூரில் ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு நாய் இனப்பெருக்க கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்படும்.

* 54,000 மெட்ரிக் டன் அளவிலான தோட்டம் மற்றும் தேங்காய் மட்டை கழிவுகள் மறுசுழற்சி செய்யப்படும்.

* சென்னை மாநகரை அழகுபடுத்தும் நோக்கில், எண்ணூர், மணலி,மூலக்கடை சந்திப்பு, எம்.ஆர்.எச். சாலை ரவுண்டானா, பாந்தியன் சாலை, மாண்டியத் சாலை, ராஜாஜி சாலை, பெரம்பூர் நெடுஞ்சாலை (வடக்கு) முரசொலி மாறன் பூங்கா, பெரம்பூர் பாலம் தெற்கு, ஸ்ட்ராஹன்ஸ் சாலை, சூளை நெடுஞ்சாலை, சிடிஎச் சாலை, புல்லா அவென்யு சந்திப்பு, ஹடோஸ் சாலை, விவேகானந்தர் இல்லம் அருகே, கோயம்பேடு 100 அடி சாலை, அல்சா டவர், ஆற்காடு சாலை, நீதிமன்ற வளாகம் எதிரில், ஜிஎஸ்டி சாலை, மலர் மருத்துவமனை, ராஜ்பவன், தரமணி சாலை சந்திப்பு, விஜிபி பூங்கா-பாலவாக்கம், வேளச்சேரி விஜயநகர் பேருந்து நிலைய், ஒம்ஆர் கே.கே. சாலை சந்திப்பு ஆகிய 26 இடங்களில் நீரூற்றுகள் அமைக்கப்படும்.

* சாலை பெயர் பலகைகள் டிஜிட்டல் முறையில் அமைக்க ரூ.8.43 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

* மாற்று திறனாளிகளுக்கு மெரினா கடற்கரை சாந்தி சிலை பின்புறம் கடல் அலை அருகே சென்று பார்வையிட சென்னை திட்டம் 2.0ல் ரூ.1.14 கோடி செலவில் நிரந்தர பாதை 2 மாதத்தில் அமைக்கப்படும்.

* தனியார் பங்களிப்புடன், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.1000 எண்ணிக்கையிலான பேருந்து நிழற்குடைகளை நவீனப்படுத்தி உயர் தரத்தில் அமைக்கப்படும்.

n சிங்கார சென்னை 2.0 நிதியில், 40.80 கி.மீ. நீளத்துக்கு ரூ.184.67 கோடி மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் அமைக்க ஒப்பந்தம் புள்ளிகள் கோரப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், 2ம் கட்டமாக 20.08 கி.மீ. நிளத்திற்கு ரூ.70 கோடியில் மழைநீர் வடிகால் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* கேஎப்டபிள்யு என்ற ஜெர்மன் நாட்டு வங்கி நிதியுதவியுடன், இந்த நிதியாண்டில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் அமைக்கப்படும்.

* மணலி ஏரி, சாத்தாங்காடு குளம், சடையன்குளம், மாதவரம் பெரிய ஏரி, அண்ணா நெடுஞ்சாலை குளங்கள் ரூ.143 கோடி மதிப்பில் புனரமைக்கப்படும்.

* ரூ.16.35 கோடி ஒதுக்கீடு செய்து பூங்காக்கள் மற்றும் விளையாட்டு திடல்கள் பராமரிக்கப்படும்.

* மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளுக்காக ரூ.1,235 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

* சிங்கார சென்னை 2.0 திட்டம் மற்றும் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் அனைத்து மண்டலங்களிலும் 2,50,000 நாட்டு மரக்கன்றுகள் தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன் நடப்பட உள்ளது.

* தூய்மை இந்தியா திட்டம் மற்றும் நிர்பயா திட்ட நிதிகளை ஒருங்கிணைத்து சென்னை மாநகரில் 366 இடங்களில் உள்ள பொதுக்கழிப்பிடம் மற்றும் சமுதாய கழிப்பிடங்களில் ரூ.36.34 கோடி மதிப்பில் சீரமைக்கப்படும்.

* சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான அனைத்து நிலம் மற்றும் உடமைகளை பாதுகாக்கும் வகையில், அனைத்து விவரங்களும் தொகுக்கப்பட்ட மென்பொருள் செயலி ஒன்று உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும்.

* சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் புரதான கட்டிடமான ரிப்பன் மாளிகையை நிறம் மாறும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்க ரூ.1.81 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பணி இந்த நிதியாண்ணடில் முடிக்கப்படும்.

* சென்னை மாநகராட்சி 10 மண்டலங்களில் தெருவிளக்குகள் பராமரிக்கும் பணிகள் ஒப்பந்த அடிப்படையில் ரூ.22 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

* இந்த நிதியாண்டில் ‘கியூஆர்’ குறியீட்டினை செயல்படுத்தி பொதுமக்கள் எளிய முறையில் சொத்து வரியினை செலுத்துவதற்கு வழிவகை செய்யப்படும்.

* சென்னை மாநகராட்சியில் மின் அலுவல் அமைப்பு(இ- ஆபீஸ்) அறிமுகப்படுத்தப்படும்.

* மேயர் சிறப்பு மேம்பாட்டு திட்டத்துக்கு ரூ.2கோடியும், ஒவ்வொரு மாமன்ற உறுப்பினருக்கு ரூ.35லட்சம் வீதம் 200 வார்டுகளுக்கு மொத்தம் ரூ.70 கோடி மாமன்ற உறுப்பினர்களுக்கு வார்டு மேம்பாட்டு திட்டத்திற்காகவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளுக்காக மொத்தம் ரூ.1,235 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

* மாணவ-மாணவிகளிடையே பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் வகையில் பள்ளியில் பாலின குழுக்கள் அமைக்கப்படும்.

* 2022-23ம் கல்வியாண்டில் 70 உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில் ரூ.1.86 கோடியில் இணைய இணைப்பு வழங்கப்படும்.

* சென்னை பள்ளிகளில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் 72 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு ரூ.7.50 கோடியில் இலவச சீருடைகள் வழங்கப்படும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி