வாகனங்களுக்கான காப்பீட்டு பிரீமியம் தொகை ஜூன் 1 முதல் உயர்கிறது! - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

May 27, 2022

வாகனங்களுக்கான காப்பீட்டு பிரீமியம் தொகை ஜூன் 1 முதல் உயர்கிறது!

இரு சக்கர வாகனம், கார் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களுக்கான மூன்றாம் நபர் காப்பீட்டு பிரீமியம் தொகையை ஜூன் 1 முதல் உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 


இரு சக்கர வாகனம், கார் உட்பட அனைத்து வகையான வாகனங்களுக்கும் மூன்றாம் நபர் காப்பீடு என்பது அவசியமாகிறது.நாம் வாகனத்தை இயக்கும் போது விபத்து ஏற்பட்டு எதிரே வந்தவரின் உடமைக்கோ, உயிருக்கோ பாதிப்பு ஏற்படும் போது, மூன்றாம் நபர் காப்பீடு அளித்த நிறுவனம் இழப்பீடு தொகையை பாதிக்கப்பட்டவருக்கு அளிக்கிறது. 


கொரோனா பரவல் காரணமாக, வாகனங்களுக்கான மூன்றாம் நபர் காப்பீடு பிரீமியம் தொகை கடந்த இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருந்தது. அதை மத்திய அரசு தற்போது உயர்த்தி உள்ளது. மூன்றாம் நபர் காப்பீட்டுக்கான பிரீமியம் தொகையை ஆர்.டி.ஏ.ஐ., எனப்படும், இந்திய காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் தான் இதுவரை உயர்த்தி வந்தது. தற்போது முதல்முறையாக மத்திய சாலை போக்கு வரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்,காப்பீடு ஆணையத்தின் ஆலோசனையுடன் பிரீமியம் தொகையை உயர்த்தி உள்ளது.


இது குறித்து மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை:இருசக்கர வாகனம், கார் உள்ளிட்ட அனைத்து விதமான வாகனங்களுக்கான மூன்றாம் நபர் காப்பீடு பிரீமியம் தொகை ஜூன் 1ம் தேதி முதல் உயர்த்தப்படுகிறது.கடந்த 2019 - 20ம் ஆண்டில் தனிப்பட்ட பயன்பாட்டுக்கான 1,000 சி.சி., வரையிலான இயந்திர திறன் உடைய கார்களுக்கான மூன்றாம் நபர் காப்பீட்டு பிரீமியம் தொகை 2,072 ரூபாயாக இருந்தது. இது 2,094 ரூபாயாக உயர்த்தப்படுகிறது.


அதேபோல, 1,000 சி.சி., முதல் 1,500 சி.சி., வரையிலான தனிப்பட்ட பயன்பாட்டுக்கான கார்களின் பிரீமியம் தொகை, 3,221 ரூபாயில் இருந்து 3,416 ரூபாயாக உயர்கிறது.இருசக்கர வாகனங்களில் 150 சி.சி.,க்கு மேல், 350 சி.சி.,க்கு குறைவான இயந்திர திறன் உடைய வாகனங்களுக்கு 1,366 ரூபாயாகவும், 350 சி.சி.,க்கு மேற்பட்ட வாகனங்களுக்கு 2,804 ரூபாயாகவும் பிரீமியம் தொகை உயர்த்தப்பட்டுள்ளது.'பேட்டரி'யில் இயங்கும், 'எலக்ட்ரிக்' வாகனங்களுக்கு தொகையில் 7.5 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும்.


சொந்த பயன்பாட்டுக்கான எலக்ட்ரிக் கார்களில் 30 கிலோ வாட் திறனுக்கு குறைவான வாகனங்களுக்கு 1,780 ரூபாயாவும், 30 - 65 கிலோ வாட்டுக்கு உட்பட்ட கார்களுக்கு 2,904 ரூபாயாகவும் பிரீமியம் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.சரக்கு வாகனப் பிரிவில், 12 ஆயிரம் முதல் 20 ஆயிரம் கிலோ எடை சுமக்கும் வாகனங்களுக்கான பிரீமியம் தொகை, 33 ஆயிரத்து 414 ரூபாயில் இருந்து, 35 ஆயிரத்து 313 ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது.

  இதில், 40 ஆயிரம் கிலோவுக்கு அதிகமான எடை சுமக்கும் சரக்கு வாகனங்களுக்கான பிரீமியம் தொகை, 41 ஆயிரத்து 561 ரூபாயில் இருந்து, 44 ஆயிரத்து 242 ரூபாயாக உயர்கிறது.கல்வி நிலையங்களின் பேருந்துகளுக்கான பிரீமியம் தொகையில் 15 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படும். மேலும், 'வின்டேஜ் கார்' எனப்படும், பழங்காலத்து கார்களுக்கு 50 சதவீத தள்ளுபடி அளிக்கப்படும்.இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி