பள்ளி பாடப் புத்தகங்களில் பல்வேறு மாற்றங்கள்!!! - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

May 1, 2022

பள்ளி பாடப் புத்தகங்களில் பல்வேறு மாற்றங்கள்!!!

கவர்னரின் அதிகாரம் குறித்த தகவல்கள் உட்பட பல்வேறு மாற்றங்கள், பள்ளி பாடப் புத்தகங்களில் செய்யப்பட உள்ளன.


பள்ளிக் கல்வித் துறையில், 2011 முதல் சமச்சீர் கல்வி திட்டம் அமலில் உள்ளது. அ.தி.மு.க., ஆட்சியில், பாடத் திட்ட மாற்றத்துக்கான உயர் நிலை குழு அமைக்கப்பட்டது. அந்த குழு பரிந்துரை அடிப்படையில், பாடத் திட்டங்கள் மாற்றப்பட்டு, 2018ல் அமலுக்கு வந்தன.தற்போது, நான்கு ஆண்டுகளை கடந்துள்ளதால், பாடத் திட்டத்தை புதுப்பிக்கவும், ஆட்சேபனைக்குரிய கருத்துகளை நீக்கவும் அல்லது மாற்றவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.


இதில் முக்கியமாக, 'மத்திய அரசு' என்ற சொல்லை, 'ஒன்றிய அரசு' என்றும், கவர்னர் மற்றும் அவரது அதிகாரங்கள் தொடர்பான தகவல்களையும் மாற்ற, பள்ளிக் கல்வி துறை திட்டமிட்டுள்ளது. ஏழாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில், இரண்டாம் பருவ பாடப் புத்தகத்தில், மாநில அரசு என்ற பாடத்தில், கவர்னரின் அதிகாரங்கள் இடம் பெற்றுள்ளன.


அதில் கூறியிருப்பதாவது: பெரும்பான்மை உறுப்பினர்களை கொண்ட ஆளும் கட்சி தலைவரை முதல்வராக, கவர்னர் நியமிப்பார். கவர்னருடன் ஆலோசித்து அமைச்சரவையை முதல்வர் உருவாக்குவார். மாநில அரசின் ஒருங்கிணைந்த பகுதியாக கவர்னர் செயல்படுகிறார். நில நிர்வாக துறையின் தலைவராக, மகத்தான அதிகாரங்கள் உடையவராக உள்ளார்.மாநில சட்டத் துறை இயற்றும் அனைத்து மசோதாக்களும், கவர்னரின் ஒப்புதலுக்கு பின்பே சட்டமாகின்றன. மாநில அரசின் பல்கலைகளின் வேந்தராகவும் கவர்னரே உள்ளார். பல்கலை துணை வேந்தர்கள், மாநில தேர்தல் ஆணையர் ஆகியோரை அவரே நியமிக்கிறார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வேந்தராக முதல்வர்


இந்த அம்சங்களில் மாற்றங்கள் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளன. அதன்படி, 'கவர்னருக்கு மகத்தான அதிகாரங்கள் உள்ளன' என்ற வாக்கியத்தை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 'ஒன்றிய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையே, அரசு ரீதியான தகவல் தொடர்பை ஒருங்கிணைக்கும் பணிகளை, கவர்னர் மேற்கொள்கிறார். இவர், அரசின் ஒரு பகுதியாக செயல்படுகிறார்' என சேர்க்கப்பட உள்ளது.


அதேபோல், 'இசை பல்கலை வேந்தராக முதல்வர் இருப்பதால், பல்கலைகளின் வேந்தராக முதல்வரும், கவர்னரும் இருக்கின்றனர். இவர்கள் துணை வேந்தர்களை தேர்வு செய்கின்றனர்' என்ற வரிகள் புதிதாக சேர்க்கப்பட உள்ளன. மாநில சட்டத் துறையால் இயற்றப்படும் மசோதாக்கள் என்ற இடத்தில், 'மாநில சட்டசபையால் இயற்றப்படும் மசோதாக்களுக்கு, கவர்னர் ஒப்புதல் அளிப்பார்' என்றும், 'பெரும்பான்மை உள்ள ஆளுங்கட்சியின் உறுப்பினர்கள் தேர்வு செய்யும் நபரை முதல்வராக, கவர்னர் பதவி பிரமாணம் செய்து வைப்பார்' என்றும் சேர்க்கப்பட உள்ளது.


மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலான எஸ்.சி.இ.ஆர்.டி., விரிவுரையாளர்கள், பாடத்திட்ட தயாரிப்பில் புலமை பெற்ற ஆசிரியர்கள் ஆய்வு செய்த பின், அரசின் ஒப்புதல் பெற்று, பாடப் புத்தகத்தில் இந்த மாற்றங்கள் செய்யப்படும் என, பள்ளிக் கல்வி வட்டாரங்கள் தெரிவித்தன.


புதிய பாடம்!

வரும் கல்வி ஆண்டில் வழங்கப்பட உள்ள பாடப் புத்தகங்களில், புதிய அம்சங்கள் இடம்பெற உள்ளன. முக்கியமாக, மொழி வாழ்த்து பாடல் சேர்க்கப்பட உள்ளது. அதேபோல், முந்தைய தி.மு.க., ஆட்சியின் போது நடத்தப்பட்ட செம்மொழி தமிழ் மாநாடுக்காக இயற்றப்பட்ட பாடலும், மறைந்த முதல்வர் கருணாநிதியின் முன்னுரையும் இடம் பெற உள்ளன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி