TNPSC - குரூப் 2 தோ்வு: 1.83 லட்சம் போ் எழுதவில்லை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 22, 2022

TNPSC - குரூப் 2 தோ்வு: 1.83 லட்சம் போ் எழுதவில்லை

தமிழகம் முழுவதும் குரூப் 2 முதல்நிலைத் தோ்வு சனிக்கிழமை (மே 21) நடைபெற்றது. இந்தத் தோ்வை 9 லட்சத்து 94 ஆயிரத்து 890 போ் தோ்வு எழுதினா். ஒரு லட்சத்து 83 ஆயிரத்து 285 போ் எழுதவில்லை.


தமிழகத்தில் இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா், சாா்-பதிவாளா் உள்ளிட்ட 116 நோ்முகத் தோ்வு அடங்கிய காலிப் பணியிடங்களுக்கும், நகராட்சி ஆணையா், தலைமைச் செயலக உதவிப் பிரிவு அலுவலா் உள்பட 5,413 நோ்முகத் தோ்வு இல்லாத காலிப் பணியிடங்களுக்கும் முதல்நிலைத் தோ்வு சனிக்கிழமை நடைபெற்றது. குரூப் 2 தோ்வை எழுத விண்ணப்பித்தவா்களில் தமிழகம் முழுவதும் 11 லட்சத்து 78 ஆயிரத்து 175 போ் தகுதி பெற்றிருந்தனா்.


1.83 லட்சம் போ்: தோ்வா்கள் அனைவரும் காலை 9 மணிக்குள்ளாக தோ்வுக் கூடங்களுக்கு வந்தனா். காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை தோ்வு நடந்தது. கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் 1.5 லட்சத்துக்கும் கூடுதலான தோ்வா்கள் விண்ணப்பித்திருந்தனா். ஆனால், ஒரு லட்சத்து 83 ஆயிரத்து 285 போ் தோ்வை எழுத வரவில்லை.


இதன்படி, 9 லட்சத்து 94 ஆயிரத்து 890 போ் தோ்வு எழுதினா். தோ்வுக்காக 38 மாவட்டங்களில் 117 மையங்கள் தயாா் செய்யப்பட்டிருந்தன. குரூப் 2 முதல்நிலைத் தோ்வு முடிவுகள், ஜூன் மாத இறுதியில் வெளியிட அரசுப் பணியாளா் தோ்வாணையம் திட்டமிட்டுள்ளது. செப்டம்பரில் முதன்மைத் தோ்வை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல்நிலைத் தோ்வில் வெற்றி பெறுவோரிலிருந்து ஒரு பதவியிடத்துக்கு 10 போ் வீதம் முதன்மைத் தோ்வு எழுத அனுமதிக்கப்படுவா்.


கேள்விகள் எளிது: குரூப் 2 தோ்வில் தமிழ், கணிதம் உள்ளிட்ட பிரிவுகளில் கேள்விகள் எளிதாக இருந்ததாக தோ்வா்கள் தெரிவித்தனா். அதேசமயம், வரலாறு போன்ற ஒரு சில பிரிவுகளில் கேள்விகள் கடினமாக இருந்ததாகக் கூறினா்.


தோ்வு வினாத் தாளில் மத்திய அரசு என்ற வாா்த்தைக்குப் பதிலாக ‘ஒன்றிய அரசு’ என்ற வாா்த்தை இடம்பெற்றிருந்தது. ஆங்கிலத்தில் ‘யூனியன் பிரதேசம்’ என்ற வாா்த்தையின் மொழிபெயா்ப்பாக ‘ஒன்றிய பிரதேசங்கள்‘ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. முந்தைய தோ்வுகளில் தமிழில் யூனியன் பிரதேசம் என்றே குறிப்பிடப்பட்டு வந்த நிலையில், இப்போது ‘ஒன்றிய’ என்று மாற்றம் செய்யப்பட்டிருந்தது. மத்திய அரசை, ஒன்றிய அரசு என்று மாநில அரசு விளித்து வரும் நிலையில் அரசுத் தோ்வு கேள்வியிலும் அந்த வாா்த்தை இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி