மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்கும் திட்டம் - முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார் - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Jul 28, 2022

மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்கும் திட்டம் - முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

 

மனநலம், உடல்நலம் சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, பள்ளிகளுக்கே சென்று மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.


தமிழக பள்ளிக்கல்வித் துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு மனநலம், உடல்நலம் சார்ந்த விழிப்புணர்வு ஆலோசனை வழங்கப்பட உள்ளது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மருத்துவக் குழுவினர், 805 வாகனங்களில் ஒவ்வொரு பள்ளியாகச் சென்று மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனைகள் வழங்க உள்ளனர்.


இந்தத் திட்டத்தின் தொடக்க விழா, சென்னை அசோக் நகரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது. விழிப்புணர்வு வாகனத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதன்பின் பள்ளியைப் பார்வையிட்டு மாணவிகளுடன் கலந்துரையாடினார்.


விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தாலும், எனக்கு உடல்சோர்வு சற்று இருக்கிறது. எனினும், மாணவர்களை காணும்போது முழுநலம் பெற்றதாக உணர்கிறேன். ஏனெனில், குழந்தையின் புன்சிரிப்பு தரும் புத்துணர்ச்சியானது மருந்துகளைவிட வலிமையானது.


தற்போது பெரும்பாலான பிள்ளைகள் பல காரணங்களால் காலை உணவை சாப்பிடாமல்தான் பள்ளிக்கு வருகின்றனர். காலை உணவை மட்டும் நாம் தவிர்க்கக் கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். இதை மனதில் வைத்துதான் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலைச் சிற்றுண்டி வழங்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளது.


தன்னம்பிக்கை முக்கியம்


மாணவர்கள் தன்னம்பிக்கை பெற்றுவிட்டால் படிப்பு தானாகவே வந்துவிடும். அத்தகைய தன்னம்பிக்கையை ஊட்டுவதற்காகத்தான் இந்த ஆலோசனை முகாம் நடத்தப்பட உள்ளது. மனமும் உடலும் சரியாக இருந்தால் அனைத்து நலன்களும் சிறப்பாக இருக்கும். எப்போதும் சோர்வின்றி சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். சோம்பேறித்தனம்தான் நம் வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடையாகும். சுறுசுறுப்பு உணர்வுக்கு உடல்நலத்தை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும்.


அதற்கு உடற்பயிற்சியும், நல்ல எண்ணங்களும்தான் அவசியம். இந்த அறிவுரைகளை முதல்வராக இல்லாமல் உங்கள் பெற்றோர்களில் ஒருவனாக இருந்து முன் வைக்கிறேன்.


பள்ளிகள் பாடங்கள் நடத்துவதுடன் அறிவு, ஆற்றல், மனம், உடல் ஆகியவற்றையும் வளப்படுத்த வேண்டும். பாதி பெற்றோர்களாக ஆசிரியர்கள் செயல்பட வேண்டும். கல்வி நிலையங்கள் மதிப்பெண் மையங்களாக இல்லாமல், மதிப்புயர் கூடங்களாக மாறவேண்டும். மாணவர்கள் தங்கள் வாழ்வில் வெற்றி பெற அதற்குரிய தகுதிகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு முதல்வர் பேசினார்.


பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசும்போது, ‘‘கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் இறந்த ஒரு மாணவியால், 3 ஆயிரம் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறியிருந்தேன். அதைதவறான கருத்தாக சித்தரித்துவிட்டனர். உனது பிள்ளைகளில் ஒருவர் இறந்தால் வருத்தப்படாமல் இருப்பாயா என்று மனம் நோகும்படி கேட்கின்றனர்.


மருத்துவக்குழு ஆலோசனை


இறந்த மாணவி மட்டுமல்ல, அங்கு படிக்கும் 3 ஆயிரம் பேரும் எனக்கு குழந்தைகள்தான். தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிக்கும் 3 மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவக் குழு நேரில் சென்று மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனைகளை வழங்கும். இனி மாணவர்களின் ஒரு உயிரைக்கூட இழக்காமல் இருப்பதுதான் முதல்வருக்கு நாங்கள் செய்யும் மரியாதையாக அமையும்’’ என்றார்.


இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலர் வெ. இறையன்பு, சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி