போக்குவரத்து வசதி இல்லாததால் கிராமங்களில் அதிகரிக்கும் பள்ளி இடை நிற்றல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 19, 2022

போக்குவரத்து வசதி இல்லாததால் கிராமங்களில் அதிகரிக்கும் பள்ளி இடை நிற்றல்

ஈரோடு மாவட்ட மலைக்கிராமங் களைச் சேர்ந்த மாணவர்கள், பள்ளி செல்ல போதிய போக்குவரத்து வசதி இல்லாததால், பள்ளி இடைநிற்றல் அதிகரித்து வருகிறது.


கரோனா தொற்று பரவலின் போது, இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளிகள் இயங்கவில்லை. தொற்று குறைந்து பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், மாநிலம் முழுவதும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பள்ளிக்கு திரும்பவில்லை, என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகப் பகுதியில் உள்ள மலைக் கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பள்ளிக்கு திரும்பவில்லை என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. ஈரோடு மாவட்ட மலைக்கிராமங்களில் பள்ளி இடைநிற்றலுக்கு, போதுமான போக்குவரத்து வசதி இல்லாததும் முக்கிய காரணமாக உள்ளது.


குறிப்பாக, சத்தியமங்கலம் வட்டாரம் குன்றி மலைப் பகுதியில், குஜ்ஜம்பாளையம் தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளியில் பயிலும் 102 குழந்தைகள் சுமார் 8 கிமீ தொலைவில் இருந்து பள்ளிக்கு நடந்து வர வேண்டிய நிலை உள்ளது.


இதே போல் அந்தியூர் வட்டாரம் கொங்காடை மலைப்பகுதியில் 110 குழந்தைகள் தினமும் போக, வர 20 கிமீ ஒசூர் உயர்நிலைப் பள்ளிக்கு, அடர்ந்த வனப்பகுதியின் வழியே நடந்து வருகின்றனர்.


யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ள இந்த பாதையில் பயணிப்பதில் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளது. பள்ளி சென்று வர பேருந்து உள்ளிட்ட போக்குவரத்து வசதிகள் இல்லாத நிலையில், கால்வலி, வனவிலங்குகளால் பாதிப்பு, பாதுகாப்பு குறைவு போன்ற காரணங்களால் ஏராளமானோர் படிப்பை பாதியில் நிறுத்தியுள்ளனர்.


இது குறித்து சுடர் தொண்டு நிறுவன இயக்குநர் நடராஜ் கூறியதாவது:


ஒவ்வொரு மாணவரின் தொடக்கக் கல்வியை ஒரு கிலோ மீட்டருக்குள் உறுதி செய்ய வேண்டுமென, இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் சொல்கிறது.


அவ்வாறு அருகாமைப் பள்ளி இல்லையெனில், பள்ளி செல்லத் தேவையான போக்குவரத்து வசதியை மாணவர்களுக்கு ஏற்படுத்தித் தர வேண்டும் எனவும் சட்டம் சொல்கிறது.


இதற்கென ஒரு குழந்தைக்கு மாதம் ரூ.600 வரை செலவிடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் சட்டப்படி இந்த தொகையை ஒதுக்கீடு செய்து கொடுத்தாலே, மூன்று பகுதி மலைக்கிராம மாணவர்களும் தடையின்றி கல்வி பயில, வாகன வசதி செய்ய முடியும்.


மலைக்கிராம மாணவர்களின் இடைநிற்றலைத் தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் போக்குவரத்து வசதியை உடனடியாக செய்து தர வேண்டும். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடமும் மனு அளிக்கப்பட்டுள்ளது, என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி