பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான இதழை வெளியிட்டார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Oct 12, 2022

பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான இதழை வெளியிட்டார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

 

பள்ளி மாணவர்களுக்கான ‘ஊஞ்சல்’ மற்றும் ‘தேன்சிட்டு’ என்ற இதழ்களையும், ஆசிரியர்களுக்கான ‘கனவு ஆசிரியர்’ இதழையும் வெளியிட்டார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

பள்ளி மாணவர்களுக்கான ‘ஊஞ்சல்’ மற்றும் ‘தேன்சிட்டு’ என்ற இதழ்களையும், ஆசிரியர்களுக்கான ‘கனவு ஆசிரியர்’ என்ற இதழையும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். தொடர்ந்து பாரதி இளங்கவிஞர் விருதினை ஒரு மாணவ, மாணவியருக்கு முதல்வர் வழங்கினார்.


தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (12.10.2022) தலைமைச் செயலகத்தில், பள்ளிக்கல்வித் துறை சார்பில்  நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான ‘ஊஞ்சல்’ என்ற இதழையும், ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கான ‘தேன்சிட்டு’  என்கிற இதழையும், ஆசிரியர்களுக்கான ‘கனவு ஆசிரியர்’ என்ற இதழையும் வெளியிட்டார். குழந்தைகளின் அறிவுக்கண்களைத் திறப்பது வாசிப்புப் பழக்கம். ஏட்டுக்கல்வி மட்டுமின்றி இவ்வுலகை அறிந்து கொள்ளவும் சமூகம் குறித்த புரிதலை மாணவர்களிடையே உருவாக்கவும் தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கென பருவ இதழ்களை பள்ளிக்கல்வித்துறை தொடங்கியுள்ளது. அதன்படி, நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ‘ஊஞ்சல்’ என்கிற இதழும், ஆறாம் வகுப்பிலிருந்து ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு  ‘தேன்சிட்டு’ என்கிற இதழும் மாதமிருமுறை இதழாக வெளியிடப்படுகிறது. குழந்தைகளின் ஆக்கங்களோடு, அவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள், செய்திகள், சுவையான கதைகள் போன்றவை இவ்விதழ்களில் வெளியிடப்படும்.  

இவைமட்டுமல்லாமல், ஆசிரியர்களுக்கென தனியே ‘கனவு ஆசிரியர்’ என்கிற மாதாந்திர இதழும் வெளியிடப்படுகிறது.  ஆசிரியர்களின் படைப்புகளோடும் வகுப்பறை அனுபவங்களோடும் அவர்களுக்கான சிறப்புக் கட்டுரைகளோடும்  ‘கனவு ஆசிரியர்’ இதழ் வெளியாகவிருக்கிறது. ’ஊஞ்சல்’, ‘தேன்சிட்டு’, ‘கனவுஆசிரியர்’ ஆகிய மூன்று இதழ்களை தமிழ்நாடு முதலமைச்சர் வெளியிட பள்ளிக் குழந்தைகளும், ஆசிரியர்களும் இதழ்களைப் பெற்றுக்கொண்டனர்.

மகாகவி பாரதியார் மறைந்த நூற்றாண்டின் நினைவாக அவரது பெருமையைப் போற்றும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் 10.9.2021 அன்று வெளியிட்ட பல்வேறு அறிவிப்புகளில், மகாகவி பாரதியாரின் நினைவு நாளான செப்டம்பர் 11-ம் நாள், அரசின் சார்பில் இனி ஆண்டுதோறும் மகாகவி நாளாகக் கடைப்பிடிக்கப்படும் என்றும்,  இதனையொட்டி, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மாநில அளவில் கவிதைப் போட்டி நடத்தி பாரதி இளங்கவிஞர் விருது மாணவன் ஒருவருக்கும், மாணவி ஒருவருக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகையுடன் வழங்கப்படும் என்றும் அறிவித்தார்‌.

அதன்படி, மகாகவி பாரதியார் நினைவு தின கவிதைப் போட்டியில் வெற்றி பெற்ற சேலம், அம்மாபேட்டை நகரவை ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர் செல்வன் பா. பிரவீன் மற்றும் தூத்துக்குடி திருச்சிலுவை பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி செல்வி ர. சைனி ஆகியோருக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், பாரதி இளங்கவிஞர் விருதிற்கான தலா ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகையை வழங்கி வாழ்த்தினார்.

இந்நிகழ்ச்சியில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவர் திண்டுக்கல் லியோனி, தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, இ.ஆ.ப., பள்ளிக் கல்வி ஆணையர்

க.நந்தகுமார், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.





No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி