ஜே.இ.இ. தேர்வில் 10ம் வகுப்பு மதிப்பெண்களை தமிழக மாணவர்கள் பதிவு செய்வதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. வரும் ஜனவரி மாதத்தில் ஜே.இ.இ நுழைவு தேர்வு நடைபெறவுள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க 10-ம் வகுப்பு மதிப்பெண் அவசியமாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கடந்த 2021-ம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் தேர்ச்சி வழங்கப்பட்ட மாணவர்கள் மாணவர்கள் தற்போது 12-ம் வகுப்பு பயின்று வருகின்றனர். 10-ம் வகுப்பில் அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்பட்டதால் அவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழில் மதிப்பெண் குறிப்பிட்டு வழங்கப்படவில்லை. இதன் காரணமாக அந்த மாணவர்கள் ஜே.இ.இ மெயின் தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
இதனிடையே தேசிய தேர்வு முகாமையை தொடர்பு கொண்டு தமிழக மாணவர்களுக்கு 10-ம் தேர்வு மதிப்பெண் பதிவிடுவதில் இருந்து தளர்வு அளிக்க தமிழக பள்ளிக்கல்வித்துறை கோரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில், தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று தேசிய தேர்வு முகமை விலக்கு அளித்தது. ஜே.இ.இ. தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு தேர்ச்சி பெற்ற ஆண்டு மற்றும் கல்வி வாரியத்தை குறிப்பிட வேண்டிய காலம் நீக்கப்பட்டது. 2021ம் ஆண்டு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற தமிழ்நாடு மாணவர்களுக்காக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
Those students will suffer everytime they go for online application
ReplyDelete