பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 22, 2023

பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!!!

 

தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறைக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவுகளை நிறைவேற்றி அது தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும், தவறினால் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் நேரில் ஆஜராக நேரிடும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.


மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் பள்ளிக் கல்வித்துறையில், பல ஆண்டுகளாக தற்காலிக பணியாளர்களாக பணிபுரிந்த பலர், தங்களை பகுதி நேர ஊழியர்களாக கருத்தில் கொண்டு பணப்பலன்களை வழங்கவும், பதவி உயர்வு வழங்கவும் கோரி மனுதாக்கல் செய்திருந்தனர். இதனை விசாரித்த உயர் நீதிமன்ற கிளை உத்தரவை பிறப்பித்திருந்தது.


இந்த உத்தரவு நிறைவேற்றப்படாததால், அப்போதைய பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் உதயச்சந்திரன் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி நீதிமன்ற அவமதிப்பு மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த ஜெகநாதன், முத்து விஜயன், மீனாட்சி, ரவி, தங்கராஜ், முருகேஸ்வரி, ஜெயந்தி, முருகேசன், நாராயணன், பாண்டி, ஜோதி சிங், முருகன் உள்ளிட்ட பலர் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.


இந்த மனுக்களை, மதுரை உயர் நீதிமன்ற கிளை நீதிபதி தண்டபாணி விசாரித்து உத்தரவு பிறப்பித்தார். அதில், பள்ளிக் கல்வித்துறை சம்பந்தப்பட்ட வழக்குகளில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு நிறைவேற்றப்படாதது தொடர்பாக 2018, 2019, 2020-ம் ஆண்டுகளில் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால் நீதிமன்றத்தின் உத்தரவுகளை நிறைவேற்றி சம்பந்தப்பட்ட கல்வித்துறை அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.


தவறினால் பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலர், முதன்மை கணக்காயர், பள்ளிக்கல்வித் துறை இயக்குநர், தமிழ்நாடு பள்ளி கல்வித் துறையின் அப்போதைய முதன்மைச் செயலரான உதயச்சந்திரன் ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை பிப்ரவரி 24ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி