கணக்கு மேல் உள்ள பயத்தின் காரணமாக கல்லூரிகளில் மாணவர்கள் கணித பிரிவை தேர்வு செய்வதில்லை: கணித பேராசிரியர்கள் வேதனை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 26, 2023

கணக்கு மேல் உள்ள பயத்தின் காரணமாக கல்லூரிகளில் மாணவர்கள் கணித பிரிவை தேர்வு செய்வதில்லை: கணித பேராசிரியர்கள் வேதனை

 

கணித பாடத்தின் மீதான பயத்தின் காரணமாகவே, கல்லூரிகளில் மாணவர்கள் அதை தேர்ந்தெடுப்பதில்லை என பேராசிரியர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். கொரோனா நோய் தொற்றுக்கு பிறகு, கல்வி கற்கும் சூழலில் தற்போது இயல்பு வாழ்க்கை திரும்பியிருக்கிறது. மாணவர் சேர்க்கை, தேர்வு, வளாக நேர்காணல் போன்றவை வழக்கமாக நடைபெற தொடங்கியிருக்கின்றன. இந்நிலையில் கொரோனா தொற்றுக்கு பின்னர், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை பார்க்கும்போது, இளங்கலை கணித பட்டப் படிப்பில் குறைந்த அளவிலேயே மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.


இதே நிலை நீடிக்கும் பட்சத்தில், விரைவில் கணித ஆசிரியர்களுக்கான பற்றாக்குறையும் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இது நுழைவுத் தேர்வுகள், போட்டித் தேர்வுகள் மற்றும் ஆராய்ச்சி ஆகியவற்றில் மாணவர்களின் செயல் திறனை மிகவும் பாதிக்கும் என்றும் சொல்லப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளில் சென்னை பல்கலைக்கழக இணைப்பு கல்லூரிகளில் பி.எஸ்சி கணித படிப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை 50 சதவீதமாக குறைந்துள்ளது. ஆனால், பி.சி.ஏ., பி.எஸ்சி கணினி அறிவியல் படிப்புகளுக்கான சேர்க்கை முறையே 47 சதவீதம், 31 சதவீதமாக அதிகரித்திருக்கிறது.

மாணவர் சேர்க்கை குறைந்து வருவதால், 2 ஷிப்டுகளில் நடக்கும் கல்லூரிகளில் சிலவற்றில் பி.எஸ்சி கணித பாடத்தை நிறுத்திவிட்டதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. சில கல்லூரிகள் அந்த பாடத்திட்டத்தில் தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட இடங்களை நிரப்புவதற்காக போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இளங்கலை கணித பட்டப்படிப்பில் மாணவர் சேர்க்கை குறைவுக்கு, இன்ஜினியரிங் மீதான மோகம், அப்ளிகேஷன் சார்ந்த படிப்புகளின் மீதான விருப்பம், நோய்த் தொற்றுகளின் போது ஏற்பட்ட கற்றல் இடைவெளி, கணிதத்தில் தொழில்நுட்ப வாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வு இல்லாதது காரணமாக நிபுணர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது.

இது குறித்து கணித பேராசிரியர்கள் சிலர் கூறுகையில், ‘‘கணிதத்தின் மீதான பயத்தின் காரணமாகவே மாணவர்கள் இதை தேர்ந்தெடுப்பதில்லை. எங்களுடைய இத்தனை வருட பணி அனுபவத்தில் கணிதத்திற்கு இவ்வளவு குறைவான மாணவர் சேர்க்கை வந்திருப்பது இதுவே முதல்முறை. கொரோனா கால கட்டத்தில் படிப்புகள் அனைத்தும் ஆன்லைன் மையமாக மாறி விட்டது. நேரடியாக வந்து கணிதம் கற்று கொள்வதற்கும், ஆன்லைன் மூலமாக கற்றுக்கொள்வதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. மற்ற பாடங்களை ஆன்லைன் மூலமாக கற்றுக்கொள்ளலாம். ஆனால் கணிதத்தை பொறுத்தவரை அப்படி கிடையாது.

அதே நேரத்தில் அனைவராலும் கணிதம் கற்றுக்கொள்ள முடியாது. கணிதத்தை பொறுத்தவரை அது என்றுமே கைகொடுக்கும் ஒரு படிப்பு. எங்களை பொறுத்தவரை கணிதம் கற்றுக்கொண்டவர்கள் புத்திசாலிகள் என்று தான் சொல்லுவேன். இதில் அதிக வேலை வாய்ப்புகளும் உள்ளன. இதில் மிக முக்கியமான ஒன்று ‘சிலபஸ்’ தான். 11 மற்றும் 12ம் வகுப்புகளில் கணித பாடத்தின் ‘சிலபஸ்’ கடினமாக மாறி விட்டது. அதன் பிறகு கல்லூரியில் மாணவர்கள் கணிதம் தேர்ந்தெடுப்பதற்கே பயப்படுகின்றனர். கணிதம் பொறுத்தவரை அதிகமாக சொல்லி கொடுக்காமல் ஆழமாக சொல்லி கொடுக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே மாணவர்கள் அதை புரிந்து கற்றுக்கொள்வார்கள். மாணவர்கள் நலன் கருதி பள்ளிகளில் சிலபஸ் எளிதாக மாற்ற வேண்டும் என்பது மட்டுமே எங்கள் கோரிக்கை என்றனர்.

பி.எஸ்சி    கணினி அறிவியல்    பி.சி.ஏ

2018-19    4,868    4,493

2019-20    5,252    4,814

2020-21    4,660    4,797

2021-22    4,763    5,711

2022-23    6,316    6,600

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி