அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மனவேதனை தீருமா? - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Apr 27, 2023

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மனவேதனை தீருமா?

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் எளிதில் அணுகக்கூடிய, தங்களது நலன்கள் மீது முழு அக்கறை கொண்ட அரசாக விடியல் அரசு என்றென்றும் விளங்கும் என்று நம்பி வருவது கண்கூடு. இந்த நம்பிக்கையை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அபாண்ட  குற்றச்சாட்டு கூறி வருவதும் குறிப்பிடத்தக்கது. இதன் பொருட்டு கடந்த காலங்களில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளும் ஏவிவிடப்பட்ட அடக்குமுறைகளும் சிறைக்கொட்டடிக் கொடுமைகளும் இன்றுவரை வடுக்களாகவே இருக்கின்றன.

எனினும், உண்மைக் கள நிலவரம் அவ்வாறு தொடர்ந்து இருப்பதில்லை என்பதைப் பல்வேறு தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளது எண்ணத்தக்கது. அவ்வக்கால ஆட்சியாளர்களின் எதேச்சாதிகார மற்றும் ஊழியர் விரோதப்போக்குகள் காரணமாகக் கட்டவிழ்த்து விடப்பட்ட கொடிய ஒடுக்குமுறைக்கு எதிரான பதிலடி நடவடிக்கையாக, இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஓர் இந்தியக் குடிமகனுக்கு வழங்கிய ஒரு விரல் புரட்சி மூலம் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி வருவது அறியத்தக்கதாகும். 

பெரும்பாலான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இன்றளவும் கண்மூடித்தனமாக ஒற்றைக் கட்சி மீதான முழு அபிமானம் கொண்டவர்களாக இருப்பதை விரும்பாத மனப்போக்கு கொண்டவர்களாகவே இருக்க விழைகின்றனர். காரணம், கட்சி சார்பற்ற, வெளிப்படையான அரசியல் அற்ற நிலையில் தம் பயணத்தை மேற்கொள்வதையே விரும்பும் நோக்கு இவர்களிடம் மேலோங்கிக் காணப்படுகிறது. அரசியல் சதுரங்க ஆட்டத்தில் வீணாக அகப்பட்டுக் கொள்ளவோ, அதனூடாக நிகழும் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளில் மாட்டிக் கொள்ளவோ துளியும் விருப்பம் இல்லாமல் அரசியல் பேதமற்ற ஒரு பார்வையாளராக நடுவுநிலையுடன் இருப்பதே தம் உயிருக்கும் உடைமைகளுக்கும் நல்லது என்று புரிந்து கொண்டுள்ளனர். 

பணிக்காலத்தில் தாம் எதிர்கொள்ளும் அநியாயமான, ஊதியம் சார்ந்த பணப்பலன்கள் வழங்குவதில் ஏற்பட்ட அநீதியான, மிகுந்த பணிச்சுமை காரணமாக அடைந்த மன உளைச்சலுக்கு எதிர்வினையாகச் செயல்படுவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளது அறியத்தக்கது. அஃதொரு ஆட்சி மாற்றத்திற்கெதிரான மௌனப் புரட்சியாகத்தான் வரலாற்றில் காணப்படுகிறது. இந்த உள்ளார்ந்த கோவம் நீறுபூத்த நெருப்பாக இருந்து வருவதை ஆட்சியாளர்கள் வேண்டுமென்றே மிக எளிதாகப் பாராமுகத்துடன் கடக்க நினைப்பது என்பது நல்லதல்ல. இது பல்வேறு வரலாற்றுத் தோல்விகளுக்குப் பிள்ளையார் சுழி போட்ட கதை தமிழக அரசியல் வரலாற்றில் நெடுக காண முடியும்.

இந்திய சமூகம் பன்மைத்துவம் நிறைந்தது. இதில் தமிழ்நாட்டின் சூழல் விதிவிலக்கல்ல. இப்பன்மைத்துவச் சூழலில் சாதி, மதம், இனம், மொழி, பண்பாடு, வழிபாடு மட்டுமல்லாமல் அதிகார வர்க்கத்தினர், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், கடைநிலை தொழிலாளர்கள் மற்றும் சாமானியர்கள் ஆகியோரையும் உள்ளடக்கியதாகவே உள்ளது. இதில் ஒருவருக்காகப் பிறிதொருவரைப் புறக்கணிப்பதும் புறம்தள்ளுவதும் தேவையற்ற வர்க்கத்தினராகக் கருதுவதும் ஆபத்தானது. அனைவருக்குமான, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு அடிகொலும் ஆட்சியே உலக வரலாற்றில் நல்லாட்சியாகப் போற்றப்படுகிறது. அதுபோல், இரண்டு வர்க்கத்தினருக்கிடையில் மறைமுகமாகச் சண்டை மூட்டிக் குளிர் காய்வதென்பது அருவருக்கத்தக்கதாகும். 

ஒரு கண்ணில் வெண்ணெய்; இன்னொரு கண்ணில் சுண்ணாம்பு என்பது அறமாகாது. இங்கு எல்லோர் பசியும் போக்கப்பட வேண்டும். அதை ஓர் அரசு உறுதிப்படுத்தல் அவசியமானதாகும். இருப்பவரிடம் வலிந்து அபகரித்து அல்லது சுரண்டி இல்லாதோருக்கு வழங்க முற்படும் ராபின் ஹூட் அரசியலை ஓர் அனைத்து மக்களுக்குமான குடியரசு செய்ய நினைப்பது எந்த வகையில் நியாயம்? இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் ஒரு நல்லாட்சியின் அடிப்படை அறத் தத்துவம் அல்லவா?

இல்லாதோருக்கும் இயலாதோருக்கும் தாராளமாக உதவி புரிவதில் யாருக்கும் இங்கு மனப்புழுக்கம் என்பதில்லை. அதேவேளையில், அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செவ்வனே சிரமேற்கொண்டு பணிபுரிந்து அனைவரிடமும் கொண்டு சேர்க்கும் அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியப் பெருந்தகைகள் நலன்கள் பேணுவதும் குரல் கொடுப்பதும் அனைவரின் கடமையாகும். இவர்கள் சமுதாயத்தில் விதை நெல்லைப் போன்றவர்கள். அனைத்திற்கும் நட்டக் கணக்குப் பார்ப்பது என்பது தாய்ப்பாலுக்குக் கூலி கேட்பதற்கு ஒப்பானது. 

பல்கிப் பெருகி வரும் இந்த கார்ப்பரேட் தனியார் உலகம் தமக்குக் கீழ் பணிபுரியும் தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டுவதென்பது ஏற்பதற்கில்லை. இதை ஓர் அரசு செய்ய முனைவதும் துணிவதும் என்பது மானுட அநீதியாகும். அவரவர்க்கும் நிர்ணயிக்கப்பட்ட அல்லது விதிக்கப்பட்ட ஊதியத்தை முறையாகவும் முறைப்படியும் வழங்குவது இன்றியமையாதது. 

தொன்றுதொட்டு துய்த்து வந்த, உயிர்பலி உள்ளிட்ட தியாகம் காரணமாகப் போராடிப் பெற்ற ஊதியம் மற்றும் அகவிலைப்படி பணப் பலன்களை ஒழிக்கக் முற்படுவதும் ஏதேதோ காரணங்களைச் சொல்லித் தர மறுப்பதும் வேண்டுமென்றே கால தாமதப்படுத்துவதும் தமக்கு மேலுள்ள அரசைக் காரணம் காட்டி அவற்றை காலவரையின்றி நிறுத்தி வைப்பதும் சரியான பயனுள்ள மனிதாபிமான நடைமுறையாகா.

தாம் ஆசையாசையாக மெனக்கெட்டு உருவாக்கிய பானையைக் கூத்தாடிக் கூத்தாடி அலட்சியத்தால் போட்டுடைத்த குயவன் கதை போலாகி விடும் சூழலை அவ்வப்போது கவனத்தில் கொள்வது நலம். மெத்த படித்த மேதாவிகளும் சுற்றி பெரும் ஊதியம் கொடுத்து வைத்துக் கொண்ட பொருளாதார புலிகளும் மனித மனம் அறியார். வருவாய், பற்றாக்குறை, இலாபம் என வெறும் புள்ளிவிவர பகுப்பாய்வுகள், சீராய்வுகள், நிதிசார் வரைவுகள், நிதிச் சிக்கன நடவடிக்கை முறைமைகள் போன்றவற்றில் மட்டுமே கவனம் காட்டிக் கட்டியெழுப்பும் திரிசங்கு சொர்க்கத்தில் மனித உதிரிகள் உதிர்ந்து போய் வெறும் நிதியாதார உபரிகள் சிம்மாசனத்தில் அமர்ந்து யாது பயன்? 

பழம் நழுவித் தானே பாலில் விழுவது போல் வழக்கமாக வழங்கப்படும் ஒன்றிய அரசுக்கு இணையான, மாறிவரும் விலைவாசி உயர்வுப்புள்ளிகள் அடிப்படையிலான அகவிலைப்படி உயர்வை கடந்த காலம் தொட்டு  ஊழியர் விருப்பம் துளியுமின்றி நியாயமாகக் கிடைக்க வேண்டிய ஊதியப் பலன்களைக் கையகப்படுத்திக்கொண்டு காலம் கடந்து தர முயல்வதும் ஆறு ஆறு மாதமென இழுத்தடிப்பதும் வாடிக்கையாகத் தொடரும் வேதனைக்குரிய ஒன்றாகும். தாமாகக் கனிந்து ஒவ்வொருவர் கையில் கிடைக்கும் கனிக்கு செயற்கை கேடுதரும் புகைமூட்டமா போட முடியும்?!

காலிப் பணியிடம் காரணமாக ஏற்படும் நிர்ப்பந்தப் பணிச்சுமை, காலம் நேரம் பார்க்காமல் ஓயாத உழைப்பு, அலுவல் நேரம் முடிந்தும் தொடரும் இணையவழியிலான பணி நெருக்கடிகள், உழைப்பிற்கேற்ற ஊதியமின்மை, இருவேறு ஊதிய முரண்பாடுகள், கானல் நீராகி வரும் பறிக்கப்பட்ட சலுகைகள், இயலா காலத்தில் பகல் கனவாகி மறுக்கப்படும் ஓய்வூதியம், பணிப் பாதுகாப்பின்மை முதலான பணிச் சிக்கல்களுடன் உழன்று வரும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியப் பெருமக்களுக்கு ஓர் ஆற்றுப்படுத்துதல் இன்றியமையாத தேவையாக உள்ளது. திக்குத் தெரியாத காட்டில் அகப்பட்டு அல்லாடித் தவித்து வரும் இவர்கள் பொய்யான போலியான பகட்டான மதவெறி பீடித்த, சனாதன, கொடிய ஆபத்து மிக்க வலையில் உபாயம் தேடி வீழும் அபாயம் ஏற்பட்டுள்ளதை எளிதில் புறந்தள்ளி விடக்கூடாது.

இறுதியாக, அடிக்க அடிக்க ஆறுதல் வேண்டி அடித்த தாயிடமே தஞ்சம் புகும் குழந்தை போன்று அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வேறு யார் மீதும் நம்பிக்கை வைக்க மனமில்லாமல் மீண்டும் மீண்டும் தாயுள்ளம் கொண்ட தமிழக முதல்வர் அவர்கள் ஒருநாளும் தம்மைக் கைவிட மாட்டார் என்ற பெரு நம்பிக்கையில் ரணங்கள் அனைத்தையும் பொறுத்துக்கொண்டு ஒரு நல்ல விடியலுக்காக நோக்கித் தவம் கிடப்பது மட்டும் உண்மை.

எழுத்தாளர் மணி கணேசன் 

5 comments:

 1. இன்றைய அரசியல் சூழ்ச்சியை வெளிப்படுத்தும் அருமையான உரை....எதிர்க்கட்சிகளாக காவிச்சாயம் பூசிக்கொண்டு நல்லவர்கள் போல் நயவஞ்சகமாக பேசித்திரியும் வஞ்சகர்களின் வஞ்சனைகளையும் சூழ்ச்சிகளையும் வரலாற்று ரீதியாகச் பின்னோக்கிச் சென்று படித்துப்பார்த்து புரிந்து தெளிவோம்....சனநாயகத்தின் பின் நிற்போம்...ம்ம்ம் என்றால் சிறைவாசம் ஏனென்றால் கொலைசெய்யும் ஆட்சியர்களின் வடபுலத்தை பார்த்துத் தெளிவோம்.மீள்வோம்...

  ReplyDelete
 2. கட்டுரை படுத்தே விட்டானய்யா என்பதை நினைவுபடுத்துகிறது

  ReplyDelete
 3. நீங்கள் என்ன புலம்பினாலும் எதும் நடக்க போறது இல்லை. முதலில் சம்பளத்தை பத்தியே பேசுவதை விட்டுட்டு ஆசிரியர் சமூகம் அசிங்கபடுவதை நிறுத்த ஏதேனும் வழியை உருவாக்குங்கள்.

  ReplyDelete
 4. வரும் பாராளுமன்ற தேர்தலில் விடியல் அரசுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும்
  .

  ReplyDelete
 5. பகுதி நேர ஆசிரியர்கள் ஒருபுறம் விடியல் அரசு அமைந்தவுடன் நமக்கு விடியல் கிடைக்கும் என்று நம்பி ஏமாந்து போயுள்ளனர். பி.எட் மற்றும் டீச்சர் ட்ரெயினிங் படித்தவர்கள் கடுமையான ஏமாற்றம் அடைந்த நிலையில் தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பத்தாண்டு காலம் எவ்வித நியமனமும் இன்றி தற்போது நியமன தேர்வு என்று மீண்டும் எழுத வேண்டுமா என்று நொந்து போய் உள்ளனர். எனவே எதிர்பார்த்த அனைவரும் ஏமாற்றம் அடைந்தனர் இந்த ஆட்சியில்....

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி