கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் RTE பொருந்துமா? அரசுப் பணியில் இல்லாதவர்கள் விண்ணப்பிக்கலாமா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 11, 2023

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் RTE பொருந்துமா? அரசுப் பணியில் இல்லாதவர்கள் விண்ணப்பிக்கலாமா?

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 1ஆம் வகுப்பு சேர்க்கைக்கான  விண்ணப்ப செயல்முறை நடைபெற்று வருகிறது. ஆர்வமுள்ளவர்கள் வரும் ஏப்ரல் 17ஆம் தேதி மாலை 7 மணி வரை https://kvsonlineadmission.kvs.gov.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.


இந்த பள்ளிகளில்,  மத்திய/ மாநில அரசு பணியாளர்களின் குழந்தைகளுக்கு  முன்னுரிமை அளிக்கப்பட்டாலும், சமூகத்தின் மத்திய மற்றும் நடுத்தர நிலையில் உள்ள குழந்தைகளுக்கும் இங்கே சில வாய்ப்புகள் இருக்கின்றன. அதுகுறித்து, இங்கே காண்போம்.


1ம் வகுப்பு எப்படி நிரப்பப்படுகிறிது:


1ம் வகுப்பில், ஒரு பிரிவில் நிர்ணயிக்கப்பட்ட 40 இடங்களில், 10 இடங்கள்  கல்வி உரிமைச் சட்ட குழந்தைகளுக்கும் , 3 இடங்கள் மாற்றுத் திறனாளி மாணவர்களும், 6 இடங்கள் பட்டியல் இன மாணவர்களுக்கும், 3 இடங்கள் பட்டியல் பழங்குடியின மாணவர்களுக்கும், 11 இடங்களும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கும் ஒதுக்கீடு செய்யப்படும். மீதமுள்ள இடங்கள் பொதுப் பட்டியல் கீழ் நிரப்பப்படும்.


முதலில் RTE மற்றும் மாற்றுத் திறனாளிகள் கீழுள்ள இடங்கள் நிரப்பப்பட்டு, அதன் பிறகு மத்திய/மாநில அரசுப் பணியாளர்கள் குழந்தைகளுக்கான சேர்க்கை முன்னுரிமை அடிப்படையில் நிரப்படும். இந்த சேர்க்கையில், மத்திய அரசின் 49.5% இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்படும்.


கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்:  இந்திய அரசியலமைப்பின் கீழ், ஆறு முதல் பதினான்கு வயது வரையிலான அனைத்து குழந்தைகளுக்கும் இலவச கட்டாயக் கல்வியை அரசு சட்டப்பூர்வமாக (Right to Education Act) வழங்கப்பட்ட அடிப்படை உரிமையாக உத்தரவாதப்படுத்துகிறது.  இந்த சட்டத்தின் கீழ், அனைத்து சுயநிதிப் பள்ளிகளிலும், 25% இடங்களை நலிவடைந்த பிரிவினருக்கும், வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினருக்கும் ஒதுக்க வேண்டும். 


நாட்டில் உள்ள அனைத்து கேந்திரிய வித்யாலயா பள்ளிகளிலும் RTE சட்ட விதிகள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. அதன்படி, 1ம் வகுப்பில் அனுமதிக்கப்பட்ட 40 காலியிடங்களில், கிட்டத்தட்ட 10 இடங்கள் RTE சட்டத்தின் கீழ் நிரப்பப்படுகிறது. 


மாற்றுத் திறனாளிகள் இடஒதுக்கீடு:  அதேபோன்று, நிர்ணயிக்கப்பட்ட 40 இடங்களில், 3% மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு பக்கவாட்டு இடஒதுக்கீடு (Horizontal Reservation) முறையின் கீழ் நிரப்பப்படுகிறது.  


கொரோனா தொற்றால் பெற்றோர் இழந்த குழந்தைகள்:  கொரோனா பெருந்தொற்று பாதிப்பால், பெற்றோர், தத்தெடுத்த பெற்றோர் அல்லது சட்டப்பூர்வமான பாதுகாவலர்களை இழந்த குழந்தைகள் சேர்க்கையில் கருதப்படுவார்கள் என்று கேந்திரிய வித்யாலயா நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஒரு பள்ளியில் அதிகபட்சமாக 10 பேரும், ஒரு வகுப்பிறையில் அதிகபட்சமாக இரண்டு பேரும் இந்த வாய்ப்பின் மூலம் நிரப்பப்பட உள்ளனர்.


ஒற்றை பெண் குழந்தை  வாய்ப்பு: 1ம் வகுப்பில், ஒவ்வொரு வகுப்பறையிலும் 2 இடங்கள் ஒற்றை பெண் குழந்தை மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அதன்படி, ஒற்றை பெண் குழந்தை மட்டும் உள்ள பெற்றோர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி சேர்க்கை பெறலாம்.  அதே போன்று, கவின் கலையில் (Fine Arts) தேசிய/ மாநில அளவில் அங்கீகாரம் பெற்ற மாணவர்களுக்கு சேர்க்கைக்கு கருதப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


பொது சனங்கள்: அரசுப் பணிகளில் இல்லதாவர்களும் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம். சுயதொழில் செய்வோர்,  தனியார் நிறுவனங்களில் பணி புரிவோரும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். இருப்பினும், பணிமாறுதல்களுக்கு உள்ளாகும் மத்திய அரசு பணியாளர்களின் குழந்தைகளுக்கான இந்த பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளதால், இவ்வகை விண்ணப்பதாரர்களுக்கு முதலில் முன்னுரிமை அளிக்கப்படும்.


வயது வரம்பு: 01/04/2023 அன்று விண்ணப்பதாரர் 6 வயதைக் கடந்திருக்க வேண்டும். அதாவது , விண்ணப்பபதாரர் 1.04.2015 - 1.04.2017க்கு இடையே பிறந்திருக்க வேண்டும். மாற்றுத் திறனாளி குழந்தைகள் நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பை விட 2 ஆண்டுகள் சலுகை பெற தகுதியுடையவர்.


விண்ணப்பம் செய்வது எப்படி: எனவே, ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் உடனடியாக, https://kvsonlineadmission.kvs.gov.in என்ற இணையதளம் மூலம் 1ம் வகுப்புக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இதற்கு, விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி