பதவி உயர்வு கலந்தாய்வு சிறக்க தேவை நல்லதொரு கொள்கை முடிவு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 7, 2023

பதவி உயர்வு கலந்தாய்வு சிறக்க தேவை நல்லதொரு கொள்கை முடிவு!

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்றது போல் நடப்பு கல்வியாண்டில் மே மாதத்திற்குள் அனைத்து வகை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தி கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறக்கும் முதல் வாரத்தில் பணி மாறுதல் மற்றும் பதவி உயர்வு பெற்றவர்கள் புதிய இடத்தில் பணியேற்கும் பொருட்டு தமிழ்நாடு அரசின் கீழ் செயல்படும் பள்ளிக்கல்வித் துறை மற்றும் தொடக்கக்கல்வித் துறை முன்னெடுத்த முயற்சிகள் பாராட்டுக்குரியவை. 

அதேவேளையில் சட்டத்தில் உள்ள ஓட்டைகள் மூலமாக கூரையைப் பிடித்து ஏறி கோபுரத்தின் உச்சியை அடைந்து விடலாம் என்கிற பேராசையிலும் நப்பாசையிலும் ஒரு சிலர் தற்காலிக முட்டுக்கட்டை போட்டுக் குழப்பத்தை விளைவிக்கப் பார்ப்பதைப் பணி நிமித்த அறமாக ஒருபோதும் ஏற்கமுடியாது. இடைக்காலத் தடைகளால் கல்வித்துறையில் வேண்டுமென்றே ஒரு தலைமையின் கீழ் செவ்வனே நடைபெறும் ஆற்றொழுக்கான நிர்வாக நடைமுறைகளில் குந்தகம் ஏற்படுத்திக் கொஞ்சகாலம் குளிர் காயலாமே ஒழிய நிரந்தர வெற்றியை ஈட்டுவதென்பது முயற்கொம்பாகும்.

ஏனெனில், பணி நியமனம் வேறு. பதவி உயர்வு வேறு. இரண்டையும் ஒருசேர போட்டுக் குழப்பிக் கொள்ளக்கூடாது. பொதுவாக, ஆசிரியர் பணி நியமனங்களுக்குத் தகுதித் தேர்வுகள் கூடாது என்பது தான் பல்வேறு தரப்பினரின் பரவலான கோரிக்கையாகும். இந்த நிலையில் போதிய கல்வித் தகுதிகளுடன் கூடிய பணியனுபவ பணிமூப்பு முன்னுரிமை அடிப்படையிலான பதவி உயர்வுகளுக்கும் இத்தகுதித் தேர்வைக் கட்டாயப்படுத்துதல் என்பது பணியில் மூத்தோருக்கு இழைக்கும் அநீதியாகும்.

பணிமூப்பு முன்னுரிமை என்பதும் சட்டப்படி ஓர் அரசு தமக்குக் கீழ் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அளிக்கும் உரிமையாகும். குறிப்பிட்ட கால இடைவெளியில் உரிய கல்வித் தகுதி அல்லது துறை சார்ந்த தேர்வுகளில் போதிய தேர்ச்சி அடைவோருக்கு தக்க பதவி உயர்வு தருவதை உறுதி செய்யும் கடமை அரசிற்கு உண்டு. அதற்கான சூழல் அமையாது போகும் போது தான் ஒரே பணியில் பத்தாண்டுகள், இருபதாண்டுகள், முப்பதாண்டுகள் தொடர்ந்து பணிபுரிவோருக்கு முறையே தேர்வு நிலை, சிறப்பு நிலை, உயர் சிறப்பு நிலை என பணி நிர்ணயம் செய்து அதற்கு புதிய ஊதிய சலுகைகள் கட்டாயம் கொடுக்கப்பட வேண்டும் என்று பணியாளர் நலன் சார்ந்த விதிகள் வலியுறுத்துவதாக உள்ளது. இதை எளிதில் புறந்தள்ளி விட முடியாது.

நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்கள் போல் ஒற்றைத் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற, போதுமான பணியனுபவமும் நிர்வாகத் திறனும் அற்ற பணியில் இளையோர் ஒரேயடியாகத் தாவித் தலைமைப் பதவி சிம்மாசனத்தில் அமர நினைப்பது என்பது வேடிக்கையாக உள்ளது. இதுபோன்ற பகல் கனவுகள் எல்லாம் நிறைவேறத் ( ஒரு பேச்சுக்காகத் தானே) தொடங்கினால் எல்லாவிதமான திறமைகளும் திறன்களும் கற்றல் கற்பித்தல் அனுபவங்களும் ஒருங்கே அமையப் பெற்ற பணிமூப்பு ஆசிரியர்களின் நிலை என்னாவது?

காலத்திற்கும் இவர்கள் பதவி உயர்வுகள் ஏதுமில்லாமல்  தகுதித் தேர்வு அடைவு இல்லை என்கிற நடைமுறைக்கு ஒவ்வாத, ஒன்றுக்கும் உதவாத காரணத்தைக் காட்டி மறுப்பதும் மறுதலிப்பதும் ஏற்கத்தக்கது அல்ல. 2009 இல் ஒன்றிய அரசால் கொண்டு வரப்பட்ட அனைவருக்கும் கல்விச் சட்டம் நடைமுறைக்கு வரும் முன்னரே பள்ளிகள் அனைத்திலும் தகுதி வாய்ந்த ஆசிரியப் பெருமக்கள் தாம் பணிநியமனம் செய்யப்பட்டனர். இது தமிழ்நாட்டிற்கு கிடைத்த பெருமையாகும். எந்த அரசியல், சமூக, பொருளாதார சூழ்நிலையிலும் பிற மாநிலங்களில் நிலவி வந்தது போல் தகுதியற்ற நபர்கள் ஆசிரியர்களாக வகுப்பறைகளுக்குச் சென்று பாடம் கற்பிக்க அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், ஆசிரியர்கள் பணியிடங்கள் மீதான தேவையைக் கருத்தில் கொண்டு தகுதி வாய்ந்த ஆசிரியர்களைத் தக்க காலத்தில் உருவாக்க ஆசிரியர் பயிற்சி பள்ளிகளும் நிறுவனங்களும் அவற்றைச் செம்மையாகக் கண்காணிக்கவும் பயிற்சிகள் வழங்கவும் பாடத் திட்டங்கள் தயாரித்து அளிக்கவும் தோற்றுவிக்கப்பட்ட மாநில ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி இயக்ககம் குறித்த பெருமிதங்கள் எண்ணத்தக்கவை. இந்திய தொடக்கக் கல்வி வரலாற்றில் தமிழ்நாட்டில் 1995 ஆம் ஆண்டில் இடைநிலை ஆசிரியர் புதிய பணி நியமனத்திற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் போட்டித் தேர்வு நடத்தியதும் மாநிலத் தலைநகராக விளங்கும் சென்னையில் அதன்பின் 1:3 என்னும் அளவில் நேர்காணல் மேற்கொண்டு தர எண் அடிப்படையில் பள்ளிக்கல்வித் துறை மற்றும் தொடக்கக்கல்வித் துறை ஆகியவற்றிற்கான பணிநியமன ஆணைகள் அளித்ததும் என்பவை முன்மாதிரி நடவடிக்கைகளாவன. 

பல்வேறு காரணங்களால் ஒரேயொரு பதவி உயர்விற்காக சற்றேறக்குறைய இருபத்தைந்து ஆண்டுகளாக இடைநிலை ஆசிரியர்களாகவே இன்றுவரை பலர் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலை பள்ளிக்கல்வித் துறை மற்றும் தொடக்கக்கல்வித் துறை ஆகியவற்றில் இருந்து வருகிறது. இவர்கள் அனைவரும் ஐம்பதை நெருங்கும் வயதினர். புதிய பணி நியமனங்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வினை இவர்களும் இனி எழுதித் தேர்ச்சிப் பெற்றால்தான் பதவி உயர்வு பெறமுடியும் என்பது பல்வேறு விபரீத விளைவுகளை ஏற்படுத்தும். அதாவது, பதவி உயர்வு இனி பெற வாய்ப்பு இல்லை என்கிற நிலையில் இவர்கள் தம் பணியில் இயல்பாகவே சுணக்கமும் எரிச்சலும் அடைந்து ஏனோதானோவென்று பலவிதமான மன உளைச்சல்களுடன் இனிவரும் காலங்களை ஒரு நடைபிணமாக ஒப்பேற்றவே விழைய அதிக வாய்ப்புண்டு. இது கல்வியை, பள்ளியை, பிஞ்சுக் குழந்தைகளின் எதிர்காலத்தை நிச்சயம் பாதிக்கும். 

கோழியானது ஒவ்வொரு முட்டையாகப் போடும் வரை காத்திருப்பதுதான் புத்திசாலித்தனம் என்பார்கள். அதைவிடுத்து குறுக்கு வழியில் மொத்தமாக அபகரிக்க நினைப்பது பேதைமையாகும். இதனால் யாருக்கும் எந்த வகையிலும் பலனில்லை. நீதி வேண்டி பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் எல்லோரும் நெடுந்தொலைவு பயணப்பட்டால் ஏழை, எளிய, அடித்தட்டு, விளிம்பு நிலை மாணவ மாணவிகளின் எதிர்காலம் அதோகதிதான்! வரிசையில் நிற்கவே விழையாத சமூகமாகவே தற்கால சமூகம் இருக்கின்றது. தமக்கான முறை வரும் வரை காத்திருக்கும் பொறுமை இவர்களிடம் இருப்பதில்லை. தமக்கு முன் நிற்பவர்களை எல்லாம் மிதித்துக் கொண்டு கொத்தளத்தை எப்படியோ பிடித்து விட வேண்டும் என்கிற மனிதத் தன்மையற்ற நோக்கும் போக்கும் மலிந்து வருவது வேதனைக்குரியது.

தமிழ்நாடு அரசு இதனைக் கருத்தில் கொண்டு பணியில் மூத்தோரின் அடிப்படை பதவி உயர்வு உரிமைக்கு எந்தவொரு குந்தகமும் நேராமல் காப்பதைத் தம் முழுமுதற் கடமையாகக் கொள்ள வேண்டும். இதுகுறித்து விரிவானதொரு கலந்துரையாடல் நிகழ்த்தி, தொன்றுதொட்டு ஆசிரியர்களுக்கு இருந்து வரும் பணிமூப்பு அடிப்படையிலான பதவி உயர்வுகள் அனைத்திற்கும் பாதகம் நேராத வகையில் நல்லதொரு கொள்கை முடிவை எடுத்து தக்க அரசாணை வெளியிடுவது அவசர அவசியமாகும். அப்போதுதான் பதவி உயர்வு கலந்தாய்வு நடைமுறையில் ஏற்பட்டுள்ள பின்னடைவுகள் அனைத்தும் ஒழியும். இந்திய அளவில் கல்வி அடைவுக் குறியீட்டில் முதன்மையாக மேம்பட்டு முன்னோடியாக ஓங்கி விளங்கும் திராவிட மாடல் அரசின் மணிமகுடமாகத் திகழும் கல்வித்துறை என்றென்றும் ஒளிரும்.

எழுத்தாளர் மணி கணேசன் 

13 comments:

  1. இவ்வளவுதானா? மாணவர்கள் மீது அக்கறை இருந்தால் தகுதி தேர்வு
    2 எழுதி தேர்வாகுங்கள். உங்கள் பதவி உயர்வை இங்கு யாரும் தடுக்கவில்லை

    ReplyDelete
    Replies
    1. தகுதி தேர்வு,
      கட்டாயம் என்று முன்பே சொல்லி இருக்க வேண்டும்,
      TET II PASS இப்போ தான் தகுதி,
      முன்பு பணி ஏற்றவர்களுக்கு TRB EXAM/ EMPLOYMENT SENIORITY ஆகிய ஏதாச்சும் ஒன்று தான் ELIGIBLE,
      இவர்கள் B.Ed படிப்பை ஒரிஜினலாக படித்தவர்கள் self finance college la kaadu கொடுத்து,
      , Teaching practice செய்யாமல், irregular B.Ed இது போன்ற மொள்ளமாரி தன B.Ed படிப்பை மூத்த தலைமுறையினர் அறியாதவர்கள்,
      அவர்களது B.Ed 99%அரசு கல்வியியல் கல்லூரிகளில் இருந்து கிடைக்கபட்டது

      Delete
    2. தற்பொழுது பதவி உயர்வு முன்னுரிமை பட்டியலில் உள்ளவர்கள் பெரும்பாலும் 10+ teacher training முடித்தவர்கள். இவர்கள் அனைவரும்+2 வேலைக்கு வந்தவுடன் முடித்தவர்கள். ஒரு சில பல்கலைக்கழகங்களில் பார்த்து எழுதி தேர்ச்சி பெற்ற மகான்கள். இந்திரா காந்தி திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் பி.எட் பட்டம் பெற்றவர்கள். இப்பொழுது கூறுங்கள் இவர்களுக்கு டெட் தேர்வு வேண்டுமா அல்லது வேண்டாமா என்று. நீதி மன்றம் நீதியை வழங்கியுள்ளது

      Delete
  2. பதவி உயர்வுக்கு தகுதித்தேர்வு அவசியம் என்பதெல்லாம் அறமல்ல... பல ஆண்டுகள் பணிபுரிந்தவர்களின் உரிமையை பறிக்கும் செயல்..

    ReplyDelete
  3. வயதில் முதிர்வு இருக்கிறதே தவிர வார்த்தையில் இல்லையே தங்களுக்கு

    ReplyDelete
  4. தற்போது பதவி உயர்வுக்காகக் காத்திருக்கும் பல அரசு ஆசிரியர்கள்....

    *இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்து பணிக்கு வந்த பின் கல்வித் தகுதியை கூட்டிக்கொண்டவர்கள்.

    * ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள்.
    *பத்து வருடங்களாக வாய்ப்பு கொடுத்தும் தேர்ச்சி பெறாதவர்கள்.
    * தனியார் பள்ளிகளில் வேலை செய்த அனுபவம் இல்லாதவர்கள்.
    *கொரானா காலகட்டத்தில் இணையவழிக்கல்வியை வழங்கிய அனுபவம் இல்லாதவர்கள்.
    *சுமார் ஒரு வருடமாக மாணவர்களின் எதிர்காலம் பற்றி யோசிக்காதவர்கள்.
    *இல்லம் தேடிக்கல்வி தன்னார்வலர்களின் உதவியால் ஓரளவு பயன் பெற்றவர்கள்.
    * ஆனால் மாதா மாதம் சுளையாக ஊதியம் பெற்றவர்கள்.
    *சில பள்ளிகளில் வெறும் 5அல்லது பத்து மாணவர்களுக்கு மட்டுமே பாடம் எடுத்து இளைப்பாறிக் கொண்டிருப்பவர்கள்.

    * இதுதான் அறமா?!!!!

    ஆனால் எவ்வளவோ ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று பத்து வருடங்களுக்கும் மேலாக பணி அனுபவம் பெற்று அத்தோடு கல்வித் தகுதியையும் வளர்த்துக் கொண்டு இணையவழிக் கல்வியிலும் சிறப்பான பயிற்சி பெற்று, தற்காலிக ஆசியர்கள் ஆகவும்,இல்லம் தேடிக்கல்வியிலும் பணிபுரிந்து கொண்டு .......இப்படி அரசு ஆசிரியர்களுக்ககாகவும்,மாணவர்களுக்காகவும் உதவி செய்துகொண்டு அரசுப்பணிக்காக காத்திருப்பவர்களை நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்????

    ReplyDelete
    Replies
    1. We speak aii waste but Govt side decide well. all are well defined who should bring TRB ,TET SLET ,NET NEET All are well define. inorder to time to time defined

      Delete
    2. நானும் தகுதித்தேர்வின் மூலமே பணி வாய்ப்பை பெற்றவன் தான்.. இருப்பினும் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றதன் மூலமே எல்லா தகுதிகளும் வந்துவிட்டதாம் போலவும் தகுதித்தேர்வில் எழுதாததால் 15 ஆண்டுகள் 20 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றவர்களுக்கு பதவி உயவிற்கு தகுதியே இல்லை என்பதும் எப்படி அறம் ஆகும்... சிந்திக்க வேண்டும் ... தற்போது பணியில் உள்ள அனைவருக்கும் மீண்டும் ஒரு தகுதித்தேர்வு எழுதினால் ஏற்கனவே TET பாஸ் பண்ணியவர்களில் பாதிக்கும் மேல் என்றார்கள்?? TET தேர்வு மூலம் நல்ல பணிவாய்ப்பு நமக்கு கிடைத்துவிட்டது.. அதுகூட இல்லாமல் இன்னும் பல்லாயிரம் பேர் உள்ளனர்... அதற்குள் நீங்கள் பதவி உயர்வுக்கு மூத்தோரை ஓரங்கட்ட முயற்சிக்கிறீர்கள். .. நமக்கான Turn வரும்வரை பொறுமை காக்கலாமே...

      Delete
  5. மூத்தோரில் தகுதியானமற்றும் அனுபவ அறிவுடன் ஆளுமை உள்ளவர்களைத் தேர்ந்தெடுக்க நாங்கள் ஒருபோதும் தடுக்கவில்லை. அதே நேரத்தில் தகுதியே இல்லாத ஆசிரியர்களுக்கு வெறும் வயதை மட்டுமே கருத்தில் கொண்டு பதவி உயர்வு அளிப்பது எந்த விதத்தில் நியாயம்?. நீங்கள் தகுதித் தேர்வில் வெற்றி பெற்று தானே பணி வாய்ப்பினைப் பெற்றுள்ளீர்கள் . நீங்கள் பணி வாய்ப்பு உடனே கிடைக்கப் பெற்றதால் தானே இன்றைக்கு பணிஅனுபவம் என்கிறீர்கள். தேர்ச்சி பெற்ற எங்களுக்கும் உங்களைப் போன்றே அன்றே பணி கிடைத்திருந்தால்??? நாங்களும் இன்று பதவி உயர்விற்கு முழு முன்னுரிமை பெற்றவர்கள் ஆகத்தானனேஇருப்போம்?! இருப்பினும் நாங்கள் பணி அனுபவம் பெறாமல் இல்லை. ..‌‌தகுதியைமென்மேலும் வளர்த்துக் கொள்ளாமல் இல்லை. ஆனால் பணி வாய்ப்பு இன்றும் கிடைக்காமல் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றோம். மேலும் பொறுமை காக்க வேண்டுகிறீர்கள்.ம்ஹும் கிட்டத்தட்ட பத்து வருடங்களாக பொறுமையோடு தான் இருக்கின்றோம்.....

    ReplyDelete
    Replies
    1. தங்களுக்கு பணிவாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதில் நிச்சயம் மாற்றுக்கருத்து எனக்கு இல்லை... தகுதித்தேர்வில் வெற்றி பெற்ற அனைவருக்கும் படிப்படியாக பணிநியமனம் செய்யப்பட்டிருக்க வேண்டும்.. அதை செய்யாமல் இருந்தால் அது அநீதி தான்..‌‌

      Delete
    2. புரிதலுக்கு மிக்க நன்றி.

      Delete
  6. அரசுப்பள்ளிகளில் எத்தனை மூத்த ஆசிரியர்கள் பள்ளிக்கு வராமல் ஒரு லட்சத்திற்கும் மேல் சம்பளம் வாங்கிக்கொண்டு தாங்களே எட்டாயிரமோ பத்தாயிரமோ கொடுத்து வேலைக்கு வேறு ஒருவரை நியமித்து வைத்திருக்கிறார்கள்?! இதுதான் தகுதியா?! இதுதான் அறமா?!!!!

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி