அரசு கலை கல்லுாரி அட்மிஷனுக்கு சிக்கல் - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

May 4, 2023

அரசு கலை கல்லுாரி அட்மிஷனுக்கு சிக்கல்

அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கை தொடர்பான 'ஆன்லைன்' தளத்தின் உரிமம் புதுப்பிக்கப்படாததால், அதன் வடிவமைப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால், புதிய கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை துவங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கவுன்சிலிங்


தமிழகத்தில் மொத்தம், 170 அரசு கலை, அறிவியல் கல்லுாரிகள் செயல்படுகின்றன.


அவற்றில், இளநிலை, முதுநிலை, ஆய்வியல் நிறைஞர், ஆராய்ச்சி படிப்பு உள்ளிட்டவற்றில், மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். அவற்றில், இளநிலை படிப்பில், 1.08 லட்சம் பேர், முதுநிலை படிப்பில், 19 ஆயிரம் பேர் உள்பட, 1.30 லட்சம் பேர் படிக்கின்றனர்.இந்நிலையில், புதிய கல்வி ஆண்டில் பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு, ஆன்லைன் வழியில், விண்ணப்பங்கள் பதிவு செய்யப்படும். பின், அந்தந்த கல்லுாரிகளில் கவுன்சிலிங் நடத்தி, மாணவர்கள் சேர்க்கப்படுவர்.


புதிய கல்வி ஆண்டில், மே மாதத்திலேயே விண்ணப்ப பதிவை துவங்கவும், ஜூனில் மாணவர் சேர்க்கையை நடத்தவும், உயர் கல்வித் துறை திட்டமிட்டிருந்தது.


ஆனால், மாணவர்களின் விண்ணப்ப பதிவுக்கான, www.tngasa.org என்ற இணையதளத்தின் முகவரிக்கான உரிமத்தை, கல்லுாரி கல்வி இயக்குனரகம் உரிய நேரத்தில் புதுப்பிக்க தவறியதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், அந்த தளத்தில் உள்ள பழைய தரவுகள் மாயமாகியுள்ளன.


அவற்றை மீட்டெடுத்து, மீண்டும் பழைய இணையதளத்தையும், அதன் ஆன்லைன் தரவுகளையும் பயன்படுத்த, தொழில்நுட்ப பணிகள் நடந்து வருகின்றன.


இதன் காரணமாக, அரசு கலை அறிவியல் கல்லுாரிகளின் மாணவர் சேர்க்கைக்கான, ஆன்லைன் விண்ணப்ப பதிவு துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

மாணவர் சேர்க்கை


வரும், 8ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியாகும் நிலையில், தற்போதே பல தனியார் கலை அறிவியல் கல்லுாரிகள் மாணவர் சேர்க்கை பதிவை துவங்கியுள்ளன.


தேர்வு முடிவு வந்ததும், மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கையை முடிக்கவும், தனியார் கல்லுாரிகள் திட்டமிட்டுள்ளன.


இந்நிலையில், அரசு கலை அறிவியல் கல்லுாரி விண்ணப்ப பதிவு பணிகள் தாமதமாகியுள்ளதால், பிளஸ் 2 முடித்த மாணவர்கள், மாற்று ஏற்பாடாக தனியார் கலை அறிவியல் கல்லுாரிகளுக்கு, தனித்தனியே கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.


எனவே, கல்லுாரி கல்வி இயக்குனரகம் இதுகுறித்து உரிய ஆலோசனை நடத்தி, தனியார் கல்லுாரிகளுக்கு முன்பாக, அரசு கலை அறிவியல் கல்லுாரி மாணவர் சேர்க்கையை விரைந்து நடத்துவதற்கு, தொழில்நுட்ப பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


விரைவில் ஒற்றை சாளர முறை?


அரசு கலை அறிவியல் கல்லுாரி மாணவர் சேர்க்கையை, ஆன்லைனில் ஒற்றை சாளர முறையில் நடத்துவது குறித்து, கல்லுாரி கல்வி இயக்குனரகம் ஆலோசனை நடத்தியுள்ளது. இன்ஜினியரிங், மருத்துவம், சட்டம் போன்ற படிப்புகளுக்கு, ஆன்லைனில் விண்ணப்பம் பெறப்பட்டு, அனைத்து மாணவர்களுக்கும் சேர்த்து, ஆன்லைனில் ஒற்றை சாளர முறையில், மாணவர் சேர்க்கைக்கு இடங்கள் ஒதுக்கப்படும்.


இதன்படி, அரசு கலை அறிவியல் கல்லுாரி மாணவர்களுக்கும், ஆன்லைனில் மாநில அளவில் ஒற்றை சாளர முறை கொண்டு வரலாமா அல்லது மண்டல அளவில் மாணவர் சேர்க்கை நடத்தலாமா என, கல்லுாரி கல்வி அதிகாரிகள், நேற்று ஆலோசனை நடத்தியுள்ளனர். இதுகுறித்து, விரைவில் விளக்கமான அறிவிப்பு வரலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி