மாணவர் மனசும் ஆசிரியர் மனசும் புத்துயிர் பெறுமா - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 30, 2023

மாணவர் மனசும் ஆசிரியர் மனசும் புத்துயிர் பெறுமா

 மாணவர் மனசும் ஆசிரியர் மனசும் புத்துயிர் பெறுமா?

தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை கடந்த காலங்களில் அறிவித்து நடைமுறைப்படுத்திய சிறந்த எளிய அனைவராலும் பாராட்டத்தக்க திட்டங்களாக இருந்தவை மாணவர் மனசும் ஆசிரியர் மனசும் ஆகும். இவையிரண்டும் இருவேறு நபர்களின் உளவியல் சார்ந்த சொல்ல முடியாதவற்றை நிறைவேற்றத்தக்க இடத்தில் இருக்கும் அதிகாரம் மிக்க ஆளுமைகளின் கவனத்திற்கு எடுத்துச் சென்று உணர்த்தும் ஊடாட்டுத் தகவல் பரிமாற்றக் கருவியாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.


எதையும் வெளிப்படையாக வெளிப்படுத்துவதில் எல்லோருக்கும் இங்கு சிக்கல்கள் உள்ளன. இஃது ஆசிரியர் மற்றும் மாணவர் விதிவிலக்கினர் அல்லர். குறிப்பாக, இவர்கள் தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் பாதிப்புகள் ஆகியவற்றைத் துணிந்து வெளிப்படுத்தித் தக்க தீர்வு காணும் களமாக இது ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு அரசால் அமைத்துக் கொடுக்கப்பட்ட நல்லதொரு வாய்ப்பாகும். 


பள்ளியளவில் மாணவர் மனசு வெளிப்படுத்தும் பெட்டிக்குச் சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியரும் மாநில அளவில் ஆசிரியர் மனசை அறிந்துணர தனி வசதி கொண்ட ஒருங்கிணைப்பாளரும் குறைதீர் நடவடிக்கை மேற்கொள்பவராக அல்லது உதவுபவராக இருந்து வருவது அறியத்தக்கது. இதற்காக பள்ளிகள்தோறும் மாணவர் மனசு பெட்டிகள் வைக்க போதிய நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. அதுபோல், ஆசிரியர் மனசு திட்டத்திற்கு தனியாக ஒரு மின்னஞ்சல் முகவரி ஒன்றும் திருச்சியில் இதற்கென மாநில கட்டுப்பாட்டு அறை ஒன்றும் ஏற்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 


பள்ளிக் கல்வித்துறையின் சீரிய வழிகாட்டு நெறிமுறைகளுக்குப் பணிந்து சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர் பெருமக்கள் அவசர அவசரமாக பூட்டு வசதியுடன் வடிவமைக்கப்பட்ட வீட்டு அஞ்சல் பெட்டி ஒத்த  வண்ணம் தீட்டியும் தீட்டப்படாமலும் தகரப் பெட்டிகளை வாங்கி வகுப்பறைக்கு வெளியே எல்லோர் கண்படும்படி ஆணியில் மாட்டி விட்டது பாராட்டுக்குரியதாகும். தற்போதும் இப்பெட்டி மாட்டியிருக்கும் உயர அளவு பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் உரியதாகவும் உகந்ததாகவும் இல்லை என்பது தனிக்கதை. சில இடங்களில் ஆசிரியருக்கே எட்டாத உயரத்தில் பெட்டி தொங்கிச் சிரித்துக் கொண்டிருப்பது வேதனைக்குரியதும் ஆய்வுக்குரியதும் ஆகும்.


மாணவர் மனசு குறித்த விழிப்புணர்வும் வழிகாட்டுதலும் பயன்படுத்தும் நெறிமுறைகளும் உரிய முறையில் மாணவ, மாணவிகளுக்குப் பொதுவாகத் தெரிவிக்கப்பட்டதாகப் புலப்படவில்லை. 'வைக்கச் சொன்னார்கள்; வைத்து விட்டோம்' என்கிற பொத்தாம்பொது மனநிலையே பெரும்பாலான இடங்களில் மேலோங்கிக் காணப்பட்டது என்பதுதான் உண்மை. இதனால், மாணவ, மாணவிகள் தங்களது விருப்பங்கள், வருத்தங்கள், ஆசைகள், கனவுகள், ஒளிவு மறைவு அற்ற எண்ணங்கள், விழைவுகள், விளைவுகள், உடல் மற்றும் உளவியல் சார்ந்த பிரச்சினைகள், பயமுறுத்தல்கள், மன பாதிப்புகள், மிரட்டல்கள், சாதி, மத, இன ஒடுக்குமுறைகள், ஒழுக்கக்கேடான செய்கைகள், பாலியல் கொடுமைகள் மற்றும் சுரண்டல்கள் முதலானவற்றை அச்சமின்றித் தெரிவிக்கும் ஊடகக் களமாக விளங்க வேண்டிய பெட்டியானது ஓர் அருங்காட்சியகப் பொருளாக, காலியாக, காட்சிக்குத் தொங்கிக் கொண்டிருந்தது வேடிக்கை நிறைந்தது. 


மாதந்தோறும் மாணவர்களிடமிருந்து கிடைக்கப் பெற்ற கடிதங்கள் மற்றும் கோரிக்கைகள் அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் தீர்வுகள் பற்றிய அறிக்கைகள் ஏதும் பள்ளிகளில் இருப்பதாகத் தெரியவில்லை. தம் கற்பித்தல் சார்ந்த அணுகுமுறைகள், மேம்படுத்துதல் திட்டங்கள் மற்றும் முறையான திட்டமிடல்கள் ஆகியவற்றிற்கு இது பெரிதும் வழிகோலும் என்பதை  ஆசிரியர் சமூகம் ஏனோ புறந்தள்ளிவிட்டதை எளிதில் எடுத்தக் கொள்வதற்கில்லை. இணையாத கோடுகளாகப் பல்வேறு காரணங்களால் இன்றைய சூழலில் ஆகிப்போன கற்றலும் கற்பித்தலும் மீளவும் பழையபடி ஒற்றை மையப் புள்ளியில் ஒன்றுகூடிட உதவிடும் மாபெரும் மகத்தான வெற்றித் திட்டம் இதுவாகும் என்பதை உணருதல் இன்றியமையாதது.


அதுபோல், ஆசிரியர் மனசு மூலம் கோரப்பட்ட உதவிகள், கோரிக்கைகள், வேண்டல்கள், பரிந்துரைகள், நடைமுறை சிக்கல்கள், பணிச்சுமைகள் மற்றும் அழுத்தங்கள் போன்றவை குறித்த தகவல்கள், மேற்கொண்ட முயற்சிகள், செயலாக்கங்கள், குறைதீர் நடவடிக்கைகள், ஆக்கப்பூர்வ செயல்முறைகள், தக்க வழிகாட்டு நெறிமுறைகள் முதலானவை பற்றிய ஆசிரியர் பயன்மிகு நல உதவிகள் குறித்து அறியக் கிடைப்பது குறைவாகவே உள்ளது. அதற்காக ஆசிரியர் சார் பணி நெருக்கடிகள் மற்றும் குறைபாடுகள் ஏதும் இல்லை என்று நினைப்பது தவறு. இதுகுறித்த போதிய விழிப்புணர்வும் அக்கறையும் ஆர்வமும் நேரமும் எதையும் நியாயமான வழியில் கேட்டுப் பெறும் துணிவும் நேர்மையும் ஆசிரியர்கள் இடத்தில் இல்லாதது வருந்தத்தக்கது. 


இந்த குரலற்ற குரலில் பொதிந்து கிடக்கும் நியாயங்கள், வலிகள், வேதனைகள் உள்ளிட்ட கல்விசார் உளச் சிக்கல்கள் மற்றும் நிர்வாகம்சார் மனித ஆக்கப் பேரிடர்கள் ஆகியவற்றை அறிந்துகொள்ளத்தக்க வடிகாலாக இத்திட்டத்தை அணுகுவது நல்லது. இது மாணவர் மற்றும் ஆசிரியர் இருவருக்கும் பொருந்தும். குறிப்பாக, பெண் பிள்ளைகள் நெறிபிறழ்ந்த சக மாணவர்கள் மற்றும் தடம் புரளும் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஊழியர்கள் போன்றோரால் அடையும் பாலியல் தொடர்பான சீண்டல்கள், ஒடுக்குமுறைகள், இழைக்கப்படும் அநீதிகள் அதனூடாக நிகழும் ஆற்றொணாத் துன்பங்களுக்கு நீதி கிடைக்கவும் தக்க தண்டனை பெற்றுத் தரவும் இத்திட்டம் பெருமளவில் உதவவல்லது. 


கல்வியில் குறையொன்றுமில்லை என்று கூறுவதென்பது சோற்றில் முழுப் பூசணியை மறைப்பதற்கு ஒப்பாகும். மேடு பள்ளங்கள் நிறைந்ததுதான் பள்ளிக்கல்வி. நிறைகுறை நிரம்பியவர்கள்தாம் ஆசிரியர்கள். தூய மழைத் துளிகளிலும் கண்களுக்குப் புலப்படாத தூசுகள் நிறைய உண்டு. குறை நிரந்தர ஊனமல்ல. திருத்திக் கொள்ள வேண்டிய குறைந்த நிறையே. மன்னிக்கத்தக்க மறக்கத்தக்க செம்மைப்படுத்தத்தக்க மனிதப் பிழைகள் அனைத்தும் ஆசிரியர் மற்றும் மாணவர் நலத்தின்  நல்படிக்கட்டுகளே ஆகும். வகுப்பறையின் அகமும் புறமும் முயன்று தவறிக் கற்றலையே ஆன்மாவாகக் கொண்டுள்ளது என்பது எண்ணத்தக்கது.


இதுபோன்ற சூழலில், ஆசிரியர் மற்றும் மாணவர் ஆகியோரின் உண்மையான மனதில் குரலை அறியும் முன்னெடுப்பாக இதனைக் கொள்வது அவசியமாகும். இவ்விரு திட்டங்களின் இன்றியமையாமை குறித்து முதலில் ஆசிரியர் பெருமக்களும் அவர்கள் வழியாக மாணவர் சமூகமும் உணருதல் காலத்தின் தேவை. பேச தயங்குதல் கூடாது. அதுவும் தமக்காகவும் பிறருக்காகவும் நியாயத்தைப் பேச ஒருபோதும் தயக்கம் காட்ட கூடவே கூடாது.  அநீதிக்கு எதிரான முதல் குரலாக இந்த சமுதாயத்தில் ஆசிரியரின் குரல் இருப்பது என்பது அவசியம். அசட்டை தேவையற்றது. அதுபோல் அச்ச உணர்வும் கூட. 


மேலும், பதின்பருவத்தினரிடையே இயல்பாகக் காணப்படும் உடல் வளர்சிதை மாற்றம் மற்றும் உளப் போராட்டம் காரணமாக எழும் மனக் குழப்பங்களுக்கு இத்திட்டம் பல்வேறு வகைகளில் நல்ல தீனி போடக்கூடும். பெற்றோர்கள் மற்றும் பொதுவெளிகளில் வெளிப்படையாகக் கேட்டுத் தெளிவு பெற முடியாத பல்வேறு உடல்மொழி குறித்த கருத்துக்களை இதன் மூலம் இருபாலரும் பெற இயலும். குடும்பத்தில் உறவினர்கள் மற்றும் அண்டை அயலார்கள் மூலம் நிகழ்த்தப்படும் பாலியல் தொடர்பான ஒடுக்குமுறைகள் குறித்து மனம் விட்டு தெரிவிக்க இஃது ஒரு நல்ல வழியாகும்.


தம் கற்றலில் ஏற்படும் பிழைகள் மற்றும் அதற்கான நிவர்த்திகள், கற்பித்தலில் காணப்படும் கடினத்தன்மைகள் மற்றும் அதற்கான விமர்சனங்கள் குறித்து மிகவும் வெளிப்படையாக பேசித் தீர்வு காணும் தலைசிறந்த ஊடகமாக மாணவர் மனசு திட்டம் விளங்கும் என்பதில் ஐயமில்லை. அதுபோல், ஆசிரியர்கள் தம் தனிப்பட்ட கல்வி மற்றும் பள்ளி சார்ந்த பல்வேறு வகைப்பட்ட சிக்கல்களுக்கும் ஆசிரியர் மனசு மூலம் நேரடியாக, கல்வித்துறை சார்ந்த உயர் அலுவலர்கள் மற்றும் இயக்குநர்கள் வழியிலான தடங்கல் இல்லாமல் கால தாமதம் தவிர்த்து சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் முறையிட்டு உரிய வழியில் தீர்வு காண இது வழிகோலும்.


ஆகவே, மாணவர் மனசு மற்றும் ஆசிரியர் மனசு திட்டத்திற்கு மீளவும் நடப்புக் கல்வியாண்டில் புத்துயிர் அளித்து பயனாளிகளின் பயன்பாட்டை அதிகரிக்கச் செய்ய வேண்டியது இன்றியமையாதது. முதலில் பெயரளவில் இருக்கும் இத்திட்டங்களின் நோக்கங்கள் குறித்த தெளிவை ஆசிரியரும் மாணவரும் ஒருங்கே அடையப்பெறுவது அவசியம். குறிப்பாக, பள்ளிப் பார்வை மற்றும் ஆய்வுகளின் போது மாணவர் மனசு பற்றிய குறைதீர் நடவடிக்கைகள் பற்றிய தகவல்கள் கேட்டறிதலும் பாராட்டுதலும் நல்லது. நிர்வாகம் மற்றும் அலுவலகம்  ரீதியாகக் கேட்பாரற்றுக் குறைகள் மண்டிக் கிடக்கும் போக்குகள் மாறவும் மறையவும் ஆசிரியர் மனசைச் செவிமடுத்துக் கேட்கும் வழக்கம் அதிகரிக்குமேயானால் மின்னஞ்சல்களால் மாநில அளவிலான குறை களையும் மையம் முடங்கிப் போகும் நிலை தவிர்க்கப்படும். வழி தெரியாது தவிக்கும் வலிமிகுந்த உரத்து ஒலிக்காத முனகும் மெல்லிய மனதின் குரலுக்குச் சம்பந்தப்பட்டவர்கள் கூர்ந்து காது கொடுப்பார்களா?

எழுத்தாளர் மணி கணேசன் 

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி