கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: 20% வரை இடம் அதிகரிக்கப்படும் என அமைச்சர் தகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 23, 2023

கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: 20% வரை இடம் அதிகரிக்கப்படும் என அமைச்சர் தகவல்

 

கலை அறிவியல் கல்லூரிகளில் 2 லட்சத்துக்கும் மேல் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதால் 20 சதவீதம் வரை கூடுதல் இடங்கள் கல்லூரிகளுக்கு வழங்கப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி தெரிவித்தார்.


இதுதொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: முதல்வர் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் காரணமாக உயர்கல்வித் துறை வளர்ச்சி பெற்று வருகிறது. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு 2,46,295 பேர் விண்ணப்பித்துள்ளனர்.


கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தற்போது 1,07,299 இடங்கள் உள்ளன. இவற்றில் இதுவரை 80,804 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. மாணவர்கள் சேர்க்கை ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் அதிகளவில் வந்துள்ளதால், கடந்தாண்டைப் போல், இந்த ஆண்டும் கலை, அறிவியல் படிப்புகளுக்கான இடங்கள் அதிகரிக்கப்படும்.


அதன்படி, அரசு கல்லூரிகளில் 20 சதவீதம், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 15 சதவீதம், சுயநிதிக் கல்லூரிகளில் 10 சதவீதம் இடம் கூடுதலாக வழங்கப்படும். ஜூலை மாதம் 3-ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும். கல்லூரிகள் திறந்த பின்னர் அங்கு காலியிடங்கள் இருந்தால், அக்கல்லூரிகளில் அப்போது முதல், மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். ஒரு கல்லூரியில் சேர்ந்த மாணவர் தனக்கு விருப்பமான கல்லூரியில் இடம் கிடைத்தால், ஏற்கெனவே சேர்ந்த கல்லூரியில் செலுத்திய பணத்தை அவர் திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.


மாநில கல்விக் கொள்கையில் தமிழக அரசு உறுதியாக இருக்கிறது. இன்னும் 2 மாதத்தில் மாநில கல்விக் கொள்கை குழுவின் அறிக்கை வெளியாகும். தமிழகத்தில் உள்ள கல்லூரிகளுக்கு 3 ஆயிரம் கவுரவ விரிவுரையாளர்களை நியமிப்பது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. திருச்சி தந்தை பெரியார் அரசு கலைக்கல்லூரி தன்னாட்சி அதிகாரம் காலாவதியானதாக வெளியான தகவல் தவறானது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி