தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மேல்நிலை வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டம் 2011-ம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. அதன்படி, 2011-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை 'அரசு விலையில்லா மடிக்கணினி’ மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வந்தது. அதன்பின் கடந்த 3 ஆண்டுகளாக மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படாமல் உள்ளது. இதனால் இலவச மடிக்கணினி வழங்கும் திட்டம் கைவிடப்பட்டதா என்ற சந்தேகம் மாணவர்கள் மத்தியில் இருந்தது.
இந்த நிலையில், தமிழக அரசின் சார்பில் இதற்கு விளக்கம் அளிக்கப்பட்டது. அதில், "இலவச மடிக்கணினி வழங்கும் திட்டம் ரத்து செய்யப்படவில்லை. கரோனா பரவல் உட்பட சில இடையூறுகளால் கொள்முதலில் தாமதம் நிலவுகிறது" என்று கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், மீண்டும் மடிக்கணினி எப்போது வழங்கப்படும் என்று ஏக்கத்துடன் மாண்வர்கள் எதிர்பார்த்துள்ளனர். அரசு விரைவில் மடிக்கணினி வழங்கிட நடவடிக்கை எடுத்தால் தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். மடிகணினி வழங்கப்படுவது குறித்து சில மாணவர்களுடன் உரையாடினோம். அவற்றில் சிலரின் கருத்துகள்...
பி.ஹரி கிருஷ்ணன்: "நான் 2022-ல் சைதாப்பேட்டை, சென்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு முடித்தேன். இப்போது இளங்கலை பி.எஸ்சி. விலங்கியல் படித்துக் கொண்டிருக்கிறேன். கல்லூரியில் சேரும்போது மடிக்கணினி கிடைக்கும் என்று கடந்த வருடம் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்தேன். ஆனால், இப்போது வரை கிடைக்கவில்லை. கணினி இல்லாமல் கல்லூரியில் ஆவணங்கள் மற்றும் விளக்கப்படங்கள் (Presentation) தயார் செய்வதற்கும் இப்போது சிரமப்படுகிறேன்.
கல்லூரி பணிகள் அனைத்தையும் ஆண்ட்ராய்டு மொபைல் போனில் மட்டுமே செய்து வருகிறேன். அது கண்களுக்கு எரிச்சலை உண்டாக்குகிறது. நீண்ட நேரம் பயன்படுத்த முடிவதில்லை. அதனால் அரசு மேலும் தாமதம் ஆக்காமல் விரைவில் மடிக்கணினி வழங்கினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.”
கோ. ஹரீஷ்: "நான் 2022-ல் கோடம்பாக்கம், புலியூர் சென்னை மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு முடித்தேன். இப்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் உற்பத்தி பொறியியல் (Manufacturing engineering) படிக்கிறேன். பொறியியல் படிப்பை பொறுத்தவரை கணினியின் பயன்பாடு மிக முக்கியமாக உள்ளது. எனது வேலைகள் அனைத்தும் கணினி சார்ந்தே இருப்பதால் எல்லாவற்றுக்கும் கணினி மையங்களைத் தேடி அலைய வேண்டி இருக்கும் அதனால் செலவும் அதிகமாகிறது.
அதேபோல் கணினி இல்லாமல் பல வாய்ப்புகள் தவற விடுகிறேன். பொறியியல் படிப்பிற்குக் கணினி மூலம் எனது திறனை மேம்படுத்தவும் வகுப்பில் எனக்குக் கெடுக்கும் பணிகள் விரைவாக முடிக்கவும் மடிக்கணினி இருந்தால் மிகவும் உதவியாக இருக்கும்.”
மு. சௌமியா: "நான் இந்த ஆண்டு (2023) அசோக் நகர்,சென்னை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு முடித்தேன். இப்போது பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்து இருக்கிறேன். கணினி இருந்திருந்தால் கல்லூரி கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க எளிதாக இருந்திருக்கும். மேலும். என் திறனை மேம்படுத்திக் கொள்ளக் கணினியில் பைத்தான், ஜாவா போன்ற சாஃப்ட்வேர் கோடிங் கற்றுக் கொள்ள ஆர்வம் உள்ளது. கணினி இல்லாமல் என்னால் அதையும் தொடர முடியவில்லை.
இணையத்தில் புதிய விஷயங்களை தேடி படிப்பதற்க்கும் கல்லூரியில் கொடுக்கும் பணிகள் சிறப்பாகச் செய்யவும் மடிக்கணினி அவசியமான ஒன்றாக இருக்கும். அது இல்லை என்றால் சிரமம்தான்.”
உ.கவிதா : "நான் இந்த ஆண்டு (2023) சைதாப்பேட்டை, சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு முடித்தேன். இப்போது இளங்கலை பி.ஏ.குற்றவியல் படித்து வருகிறேன். அதனால் கல்லூரியில் செயல் முறை பணிகள் செய்ய மடிக்கணினியின் தேவை அதிகமாக உள்ளது. என்னிடம் கணினி இல்லாததால் மற்றவர்களிடம் உதவி எதிர்பார்க்கின்ற நிலையில் உள்ளேன். ஒவ்வொரு முறையும் அப்படி இருப்பது எனக்குப் பிடிக்கவில்லை.
அது மட்டுமில்லாமல் பகுதி நேர வேலைகள் செய்வதாக இருந்தாலும் மடிக்கணினி தேவை இருக்கிறது. விலை கொடுத்து வாங்கும் நிலையில் நான் இல்லை. அதனால் பள்ளியில் தரும் விலையில்லா மடிக்கணினியை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.”
கே.சரவணன் : "நான் 2023-ஆம் ஆண்டு சைதாப்பேட்டை சென்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு முடித்தேன். இப்போது இளங்கலை மயக்க மருந்து மற்றும் ஆப்ரேஷன் தியேட்டர் தொழில்நுட்பம் ( Operation Theatre (OT) and Anesthesia) படித்து வருகிறேன். மடிக்கணினி இல்லாமல் கல்லூரி விண்ணப்பப் படிவங்கள் பூர்த்தி செய்ய சிரமப்பட்டேன். அது மட்டுமில்லாமல் மடிக்கணினி இருந்திருந்தால் கல்லூரி இணையதளம் வழியில் வரும் புதிய தகவல்கள் பார்ப்பதற்கும் எளிதாக இருக்கும். என்னிடம் ஸ்மார்ட் போனும் இல்லாததால் மிகவும் சிரமமாகவே உள்ளது.
அரசு விலையில்லா மடிக்கணினி விரைவில் வழங்க வேண்டும் அப்படி வழங்கினால் அது என்னைப் போல் உள்ள பல மாணவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.”
அரசு மடிக்கணினிகளை நம்பி எராளாமான மாணவர்கள் தங்கள் மேற்படிப்புகளை தொடர்ந்து வருகின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு மாணவர்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற தமிழக அரசு உடனடி நடவடிக்கைகளில் இறங்க வேண்டும்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி